Search This Blog

Thursday, November 18, 2010

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சாட்சிகளிடம் மறுவிசாரணை தொடங்கியது

 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சாட்சிகளிடம் மறுவிசாரணை தொடங்கியது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வக்கீல் நவநீதகிருஷ்ணன், ‘இந்த வழக்கில் ஆவணங்கள் மொழிபெயர்ப்பு செய்ததில் தவறு இருக்கிறது என்று தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக சென்னையில் மேலும் ஒரு வழக்கு பதிவாகி உள்ளது. எனவே, இப்போது சாட்சிகளிடம் விசாரணை நடத்தக் கூடாது’ என்றார்.

இதற்கு அரசு வக்கீல் ஆச்சார்யா ஆட்சேபம் தெரிவித்தார். ‘இந்த வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. எதிர்தரப்பு இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து தாமதப்படுத்த வேண்டும் என்று செயல்படுகிறது. எனவே, சாட்சிகளிடம் மறுவிசாரணை தொடங்க வேண்டும்’ என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சாட்சிகளிடம் மறுவிசாரணை நடத்த அனுமதி அளித்தார். இதற்காக, 4 சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அவர்களில் 2 பேர் வந்திருந்தனர்.

முதல் சாட்சியாக கோபிநாத் என்பவரிடம் விசாரணை நடந்தபோது, ‘எனது நிலத்தை விற்பனை செய்த வகையில் சுதாகரனிடம் ^4.5 லட்சம் டி.டி.யாக பெற்றேன். தவிர ரொக்கமாக வேறு எந்த பணமும் பெறவில்லை’ என்றார். அரசு வக்கீல் குறுக்கிட்டு, முதல் முறை அளித்த சாட்சியத்தில் அவரிடம் இருந்து ரொக்கமாக 6.5 லட்சம் பெற்றதாக கூறியதை நினைவுபடுத்தினார்.

அதற்கு சாட்சி கோபிநாத் பதில் அளிக்கையில், ‘அப்படி சொல்லும்படி போலீசார் கூறியதால் சொன்னேன்’ என்றார். இதைத் தொடர்ந்து நீதிபதி மல்லிகார்ஜுனய்யா வழக்கு விசாரணையை 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment