Search This Blog

Thursday, November 18, 2010

அடுத்த முறையும் தி.மு.க. ஆட்சி தான் துணை முதல்வர் ஸ்டாலின் உறுதி

ஓசூர்:""அடுத்த முறையும் தி.மு.க., தான் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையும், உறுதியும் உள்ளது,'' என, ஓசூரில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

ஓசூர் காமராஜர் காலனி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மகளிர் சுய உதவி குழுவுக்கு சுழல்நிதி மற்றும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் அருண்ராய் தலைமை வகித்தார். எம்.பி., சுகவனம், எம்.எல்.ஏ., க்கள் செங்குட்டுவன், கோபிநாத், நகராட்சி தலைவர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணை முதல்வர் ஸ்டாலின், கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் 101 பயனாளிகளுக்கு கான்கிரீட் வீட்டு சாவி, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:கடந்த காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் சமூக நலத்துறையில் இருந்தது. ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டது முதல் மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்பாடு வளர்ச்சியடைந்துள்ளது. அதிகமான சுழல்நிதி, வங்கி கடன் உதவிகள் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படுகிறது. மகளிர் சுய உதவி குழுக்களை அரசியலுக்காகவும், தேர்தல் நேரத்தில் கட்சி பிரச்சாரத்திற்காகவும் பயன்படுத்த வேண்டும் என்ற குறுகிய நோக்கம் தி.மு.க., வுக்கு இல்லை.பெண்கள் சுய மரியாதையாகவும், யார் தயவும் இல்லாமல் சொந்த காலில் நின்று வாழ்க்கையில் முன்னேற்றம் பெற அதிக சுழல்நிதி வழங்கப்படுகிறது. அ.தி.மு.க, ஆட்சியை ஒப்பிடும்போது தி.மு.க., ஆட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இரு மடங்கு சுழல்நிதி, வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை நடந்த விழாக்கள் வரை தொடர்ந்து 97 மணி நேரம் கடைசி வரை நின்று கொண்டு சுய உதவிகுழுவினருக்கு சுழல் நிதி வழங்கி உள்ளேன். அதனால், எனக்கு கால் வலிக்கவில்லை. மாறாக மனசோர்வு போய்விடுகிறது. கால்வலி காற்றில் பறந்து போய்விடுகிறது.தி.மு.க, ஆட்சியை பொறுத்தவரையில் ஆளும் கட்சியினர், மாற்று கட்சியினர், எதிர்க்கட்சியினர், தோழமை கட்சியினர் என பாரபட்சம் பார்க்காமல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக கலைஞர் காப்பீட்டு திட்டம், வீட்டு வசதி திட்டம் உள்ளிட் அனைத்து அரசு திட்டங்களிலும் அதிகமாக எதிர்க் கட்சியினர்தான் பயனடைந்துள்ளனர்.

ஓசூரில் அரசு கல்லூரி அமைக்க நிதி துறையினருடன் ஆலோசித்து உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க, ஆட்சியில் சொன்னதை செய்து வருவதோடு சொல்லாதவையும் நிறைவேற்றப்படுகிறது. குறிப்பாக கலைஞர் வீட்டு வசதி திட்டம், காப்பீட்டு திட்டம் மற்றும் 108 அவசர சிகிச்சை வாகனம் ஆகியவை தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத நிறைவேற்றப்பட்ட திட்டங்களாகும்.கலைஞர் வீட்டு வசதிதிட்டத்தில் தமிழகத்தில் 21 லட்சம் குடிசை கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் படிபடியாக அடுத்த ஆறு ஆண்டில் அனைத்து பயனாளிகளுக்கும் வீடுகள் கட்டி வழங்கப்படும். அடுத்த ஆறு ஆண்டு என்றவுடன் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து கிடைக்குமா என்ற பயம் மக்களுக்கு தேவையில்லை. அடுத்த முறையும் தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையும், உறுதியும் உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நகராட்சி துணை தலைவர் மாதேஸ்வரன், தி.மு.க., நகர செயலாளர் விஜயகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மாவட்ட இலக்கிய அணி எல்லோராமணி, ஒன்றிய அமைப்பாளர் மஞ்சுநாத், பொதுக்குழு உறுப்பினர் அக்ரோநாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment