Search This Blog

Thursday, June 9, 2011

தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டு அ.தி.மு.க. ஆட்சியால் கைவிடப்பட்ட திட்டங்கள்

ஆளுநர் உரை தரும் தகவல்கள்


சென்னை, ஜூன் 3- தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப் பட்ட திட்டங்கள், முடிவெடுக் கப்பட்ட திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் கைவிடப்படுகின் றன என்னும் தகவல்கள் இன் றைய ஆளுநர் உரையில் வெளிப் படுத்தப்பட்டுள்ளன. விவரம் வருமாறு:

இம் மாநிலத்தில் சட்ட மேலவை ஒரு தேவையற்ற அமைப்பாகக் கருதப்பட்ட தால் 1.11.1986 அன்று எம்.ஜி.ஆர். அவர்களால் கலைக்கப்பட்டது.

எனவே, மீண்டும் சட்ட மேலவையைக் கொண்டுவரத் தேவையில்லை என இந்த அரசு கருதுகிறது. சட்டப் பேரவை யில் இப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒரு இறுதி முடிவு எடுக்கப்படும்.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற தலைமைச் செயலகக் கட்டடம் முழுமையாகக் கட்டி முடிக்கப் படுவதற்கு முன்பே மார்ச் 2010 இல் திறந்து வைக்கப்பட்டது. அந்தப் புதிய கட்டடத்தில் போதிய வசதிகள் ஏற்படுத்தப் படவில்லை. அடிப்படை வசதி கள்கூட அங்கு இல்லை.

கட்டுமானப் பணிகள் முழுமை பெறுவதற்கு முன்பே அவசர அவசரமாக ஒரு சில துறை களும், முதலமைச்சர் மற்றும் அனைத்து அமைச்சர்களின் அலுவலகங்களும் அந்தப் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டன.

ஆறு செயலகத் துறைகள் மட் டுமே புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் மீத முள்ள 29 துறைகள் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பழைய கட்டடத்திலேயே இயங்கி வந்தன. அமைச்சர் களின் அலுவலகங்கள் மட்டும் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், தொடர்புடைய துறை அலுவலகங்கள் தொடர்ந்து புனித ஜார்ஜ் கோட்டையிலே உள்ள பழைய தலைமைச் செயலகக் கட்டடத் திலேயே செயல்பட்டு வந்தன.

இவ்வாறு துறைகளை ஒரு இடத்திலும், அமைச்சர்களின் அலுவலகங்கள் மற்றும் ஒரு சில துறைகள் மட்டும் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்திற்கு மாற்றியது தேவையற்ற நிருவாகப் பிரச்சினையை ஏற்படுத்தியதுடன் பொதுமக்களுக்கும் இடையூறாக அமைந்துள்ளதால், இந்த அரசு புனித ஜார்ஜ்  கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகக் கட்டடத்திலேயே தனது நிருவாகப் பணிகளைத் தொடர முடிவு செய்துள்ளது.

புதிய தலைமைச் செயலகக் கட்டடப் பணிகளுக்குக் கூடுதலான மற்றும் பயனற்ற செலவு, காலதாமதம், தரமற்ற கட்டுமானப் பணிகள் போன்ற குறைபாடுகள் உள்ளதாக பல்வேறு குற்றச் சாற்றுகள் எழுந்துள்ளன.

இது குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த விசாரணை முறையாக நடைபெற ஏதுவாக புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்படும்.

கடந்த ஆட்சியில் செயல்படுத்தப் பட்டு வந்த ஊரக வீட்டு வசதித் திட்டம் பல குறைபாடுகளுடன் உள்ளது. கட்டுமானச் செலவு இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரித்துவிட்ட நிலையில் அத்திட்டத்தில் ஓர் அலகிற்கு வழங்கப் படும் நிதியான ரூபாய் 75 ஆயிரம் மிகக் குறைந்த அளவாக உள்ளது.

இதனால் ஏழை எளிய குடும்பங்கள் கடன் சுமையில் சிக்கியுள்ளனர். இதன் காரணமாக மிக அதிக எண்ணிக்கையில் வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட வில்லை.

எனவே, இத்திட்டத்தினை கை விடுவதென இந்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மாற்றாக, கிராமப்புற ஏழைகள் பயன்பெறும் வகையில் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் தொடங்கப்படும்.  இத்திட்டத்தில் சுமார் 300 சதுர அடி அளவில் ரூபாய் 1.80 லட்சம் செலவில் அரசே வீடு கட்டிக் கொடுக்கும்.

அதே போல், நகர்ப்புற ஏழைகளின் வீட்டு வசதிக்காக மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களின் நிதியை ஒருங்கிணைத்து ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை நகரில் ஆற்றோரங்களில் வாழும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான நவீன வீடுகள் வழங்கப்படும்.

அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய தரமான மருத்துவ சேவையை வழங்குவதே இந்த அரசின் நோக்கமாகும். தற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மக்களின் தேவைகளை நிறைவு செய்யத் தக்க வகையில் முழுமையாக இல்லை என்பதால், இத்திட்டம் கைவிடப்படும்.

அனைவருக் கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப் படுத்தி அனைவரும் மருத்துவ வசதி பெறுவதை உறுதி செய்யும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தும்.

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏழை மக்கள் பயன் பெறக்கூடிய வகையில் 24 மணி நேரமும் செயல்படும் மய்யங்களாக மாற்ற்றி மைக்கப்படும். மருத்துவச் சுற்றுலாவை ஒரு பெரிய அளவில் ஊக்குவிக்க ஆராய்ச்சி வசதிகளுடன் கூடிய மருத்துவ நகரங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப் படும். மருத்துவத் துறையில் தனியார் மூல தனத்தை அதிகரிக்கும் வகையில் தெளி வான வழிமுறைகள் இந்த அரசு வகுக்கும்.

தரமான பள்ளிக் கல்வியை இலவச மாக அனைவருக்கும் வழங்குவது இந்த அரசின் முக்கிய கொள்கைகளில் ஒன் றாகும். முக்கிய கல்வி சார்ந்த குறியீடுகளான பள்ளிச் சேர்ப்பு விகிதத்தை அதிகரித்தல், இடை நிற்றலைக் குறைத்தல் போன்ற வற்றுடன் அடிப்படைக் கட்டமைப்பு களை மேம்படுத்தவும் இந்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். சமச்சீர் கல்வி என்ற பெயரில் பள்ளிக் கல்வியின் தரத்தைக் குறைத்து அதனால் மாணவர் களின் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதை இந்த அரசு விரும்பவில்லை.

பள்ளிக் கல்வி முறை மாணவர்களின் செயல் முறை அறிவாற்றலையும், ஆக்க பூர்வமான சிந்தனைத் திறனையும் மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்கள் பிற மாணவர் களைக் காட்டிலும் சிறந்து விளங்கும் வகையில் உருவாக்க இந்தக் கல்வி முறை வகை செய்யவேண்டும்.

ஆனால், தற்போது தயாரிக்கப் பட்டுள்ள பொது பாடதிட்டம் இந்த நோக் கத்தை எய்த போதுமானதாக இல்லை. எனவே சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டங்கள் மறு ஆய்வு செய்யப் படும். ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு இது குறித்து ஆய்வு செய்து பரிந்துரை களை அளிக்க உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்.

அதிக எண்ணிக்கையில் உயர் கல்விக்கான பல்கலைக் கழகங்களைத் தொடங்கி விட்டால் மட்டும் கல்வியின் தரம் உயர்ந்துவிடாது என இந்த அரசு கருதுகிறது. அண்ணா பல்கலைக் கழகங் களை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியதால் சென்னை அண்ணா பல்லைகக் கழகம் வலுவிழந்து விட்டது.

இதனால் கல்விச் சேவையின் தரம் உயராமல் சுயமாகச் செயல்பட இயலாத பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வர இந்த அரசு முடிவெடுத்துள் ளது.

இந்த அரசு பல்கலைக் கழகங்களை சீரமைத்து உலகத் தரம் மிக்க நிறுவனங் களாக மாற்றிமைக்க சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தும்.

தமிழ்நாட்டில் இலவசமாக வழங்க தரிசு நிலம் இல்லையாம்!


சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா தகவல் சென்னை, ஜூன் 8- சட்டசபையில் உறுப்பினர் சிதம்பரம் பால கிருஷ்ணன் (சி.பி.எம்) பேசும்போது ``தமிழ்நாட்டில் கிடக்கும் தரிசு நிலங்களை ஏழை, எளிய விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

இதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா (குறுக்கிட்டு) பதில் அளித்தபோது கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஏற்கெனவே கிடந்த தரிசு நிலங்களை, எம்.ஜி.ஆர். ஆட்சியிலும், என் தலைமையில் நடைபெற்ற ஆட்சியிலும், வழங்கப்பட்டுவிட்டன. மேலும் வழங்குவதற்கு தரிசு நிலமே இல்லை என்று கூறினார்.

தி.மு.க. இன்றைக்குத் தோல்வி அடைந்திருக்கலாம் சமுதாயத் துறையில் பெற்றிருக்கின்ற வெற்றி மிகப்பெரியது

தி.மு.க. இன்றைக்குத் தோல்வி அடைந்திருக் கலாம். ஆனால் சமுதா யத் துறையில் பெற்றிருக் கின்ற வெற்றி சாதாரண மானதல்ல என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறி விளக்கி பேசினார்.

தி.மு.கழக அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாணசுந்தரம் இல்ல மண விழாவை  (8.6.2011)  தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையேற்று நடத்தி வைத்து வாழ்த்து ரையாற்றினார் அவர்.  உரை வருமாறு:-

கழகத்தின் அமைப் புச் செயலாளர் கல் யாணசுந்தரம், திருமதி திலகா ஆகியோரின் அன்பு மகன் டாக்டர் கதிரவன் அவர்களுக்கும், ஈரோடு டாக்டர் இ.கே.சகாதே வன் - டாக்டர் உஷா ஆகியோரின் அன்பு மகள் டாக்டர் ரோகிணி அவர்களுக்கும் இந்த மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கின்றது. நாமும் நம்முடைய மன மகிழ்ச்சியைத் தெரிவித்து அவர்களை வாழ்த்தியிருக்கிறோம்.

கொள்கைப் பிரச்சாரம்

இங்கே பேராசிரியர் பேசும்போது திராவிட முன்னேற்றக் கழகத் திற்கு அரசியல் மாத்திர மல்ல, இதைப் போன்ற திருமணங்களை நம்மு டைய தமிழ் முறைப் படி, தமிழ் நெறிப்படி நடத்துகின்ற அந்தப் பணியும் திராவிட முன் னேற்றக் கழகத்தினுடைய பணிகளிலே ஒன்று தான் என்று குறிப்பிட்டார்.  திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு இந்த அளவிற்கு வளர்ந்திருக் கிறதென்றால், மாநாடு களைப் போட்டு அல்ல, பெரிய பெரிய நிகழ்ச்சி களை நடத்தி அல்ல, ஆட்சிப் பொறுப்பிலே அரும்பெரும் காரியங் களை நடத்தி அவை களை யெல்லாம் விழாக் களாகக் கொண்டாடி மட்டும் அல்ல.

தி.மு. கழ கத்தின் வளர்ச்சி ஆரம்ப காலத்திலேயிருந்து இதுவரையிலே மெல்ல மெல்ல ஆனால் உறு தியாக நடைபெற்றிருக் கின்றது என்றால் அதற் குக் காரணம் நாம் தொடர்ந்து ஆற்றி வரு கின்ற கொள்கைப் பிரச் சாரம், சமுதாய எழுச்சிப் பிரச்சாரம், தாழ்த்தப் பட்ட மக்கள், பிற்படுத் தப்பட்ட மக்கள், நடுத் தர மக்கள், சிறுபான்மை மக்கள் இவர்கள் எல் லாம் தமிழகத்தில் நல் வாழ்வு பெற வேண்டு மென்பதற்காக சூளு ரைத்து இன்று வரை யிலே தொடர்ந்து அந் தப் பணியினை ஆற்றி வருகின்ற காரணத்தினா லேதான் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

பேராசிரியர் எடுத்துச் சொன்னதைப் போல தோல்வி நமக்கு ஒரு தடைக் கல் அல்ல. என் னைப் பொறுத்த வரை யில் நான் உங்களுக்குச் சொல்வேன் - இந்தியா வினுடைய இளந்தலை வர் ராஜீவ் காந்தி அவர் கள் மறைவுற்றபோது திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது  பொய்ப் பழி சுமத்தி, மாற்றுக் கட்சிக்காரர்கள் செய்த பிரச்சாரத்தின் காரண மாக நாம் மக்களுடைய ஆதரவை பெருவாரி யாக இழந்தோம்.

அப்படி, இழந்த அந்தக் கால கட் டத்தில் நான் மாத்திரம் துறைமுகம் தொகுதியில் ஒரேயொரு ஆள் வெற்றி பெற்றேன். ஒரே ஒரு தொகுதியில் தான் நாம் வெற்றி பெற முடிந்தது.

அதற்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் பல இடங்களிலே வெற்றி பெற்று, இன்னும் சொல் லப் போனால் தமிழ் நாட்டில் முதன் முதலாக 185 இடங்களில் வெற்றி பெற்ற இயக்கம், திரா விட முன்னேற்றக் கழ கம் என்கின்ற பெருமை யைப் பெற்று ஆட்சியை நடத்தியதை யாரும் மறந்து விட இயலாது.

இரண்டு  நாட்களுக்கு முன்பு ஒரு அம்மையார் - சூரியன் மறைந்தது  மறைந்ததுதான் , அஸ் தமனமானது - அஸ்த மனமானது தான், இனி உதிக்காது என்று சொல் லியிருக்கிறார். சின்னப் பிள்ளை ஒன்றைக் கூப் பிட்டு, இன்றைக்கு சூரி யன் மறைந்தால் நாளைக்கு என்ன ஆகும் என்று கேட்டால், நாளைக்கு மீண்டும் உதிக்கும் என்று சொல்லும். ஒரு குழந் தைக்குத் தெரிந்த ரகசி யம் கூட குவலயத்தை ஆளுவதாகச் சொல்லிக் கொள்ளும் கோதை களுக்குத் தெரியாதது ஆச்சரியம்தான்! எனவே பகலும், இருளும் மாறி மாறி வருவதைப் போல வெற்றியும், தோல்வியும் ஒரு இயக்கத்திற்கு மாறி மாறி வருவது இயல்பு தான்.

இந்தத் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வருகின்ற இந்தக் கழகத் திற்கு நீதிக் கட்சி என்ற பெயர் இருந்தபோது - எவ்வளவு பெரிய தோல் விகளை யெல்லாம் இது சந்தித்தது என்பதை தமிழ்நாட்டின் வரலாற் றைத் தெரிந்தவர்கள் புரிந்து கொண்டிருப் பார்கள்.

அதற்குப் பிற கும்கூட, திராவிட முன் னேற்றக் கழகம் என்ற பெயரால் நாம் போட்டி யிட்ட போது, முதலில் 15 இடங்களில்தான் வென்றோம், அதற்குப் பிறகு 50 இடங்கள், அதற் குப் பிறகு ஆட்சிப் பொறுப்பு என்ற அள விற்கு படிப்படியாகத் தான் வளர்ந்தோம்.

ஆகவே படிப்படி யாக வளர்ந்து தமிழ் நாட்டு மக்களை படிப் படியாக முன்னேற்று கின்ற அந்தப் பணியிலே ஈடுபட்டிருக்கின்ற இந்தக் கழகத்தை அவ் வளவு சுலபத்திலே யாரும் புறம் தள்ளி விட முடி யாது. யாரும் வெற்றி கொள்ள முடியாது.

இண உணர்வின் அடையாளம்

திராவிட முன்னேற் றக் கழகம் என்பது ஒரு இயக்க மல்ல, ஒரு கட்சி யல்ல, திராவிட முன் னேற்றக் கழகம் என்பது ஒரு இன உணர்வின் அடையாளம். அந்த இன உணர்வை அழித்து விட்டு பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தை நாங்கள் தோற்கடிப் போம் என்று யாராவது சொன்னால், அவர்களை பைத்தியக்காரர்களின் பட்டியலிலேதான் வைக்க வேண்டுமே தவிர, வேறெங்கும் எது வும் சொல்ல இயலாது என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கழகம் இன்றைக்கு தோல் வியைச் சந்தித்திருக்கிறது என்றாலும், சமுதாயத் துறையில் பெற்றிருக் கின்ற வெற்றி சாதாரண மானதல்ல. பலப்பல வெற்றிகளை திராவிட முன்னேற்றக் கழகம் சமுதாயத் துறையிலே பெற்றிருக் கின்றது, அப் படிப்பட்ட வெற்றிக ளிலே ஒன்று தான் இந் தத் திருமண வெற்றி.

திருமணத்தை நம் முடைய தம்பி கல்யாண சுந்தரம் அவர்கள், அவ ருடைய இல்லத்திலே இவ்வளவு சிறப்பாக நடத்துகிறார், இவ்வளவு பேர் இந்த மண விழா விற்கு வந்திருக்கிறோம் என்றால், இது திரும ணம் மூலமாகவும் நம் முடைய கழகத்தின் கொள்கைகளைப் பரப் புவதற்குக் கிடைத்திருக் கின்ற வெற்றி என்பதை யாரும் மறுக்க முடி யாது. தலைமைக் கழ கத்திலே பாடுபடுகின்ற தம்பிகளில் கல்யாண சுந்தரம் தலைசிறந்தவர்.

அப்படிப்பட்ட தம்பி யின் இல்லத்தில் நடை பெறுகின்ற இந்த மண விழாவிலே கலந்துகொள் வதிலும் மணமக்களை வாழ்த்துவதிலும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து மன நிறைவடைந்து இந்த அளவோடு வாழ்க மண மக்கள் என்று கூறி விடை பெறுகிறேன்.

- இவ்வாறு கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

ஊழல் ஒழிப்பு: 1973 ஆம் ஆண்டே தி.மு.க. அரசு சட்டம் நிறைவேற்றியிருக்கிறது

உடன்பிறப்புகளுக்கு கலைஞர் விடுத்துள்ள கடிதம் வருமாறு:

வெளிநாடுகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கறுப்புப் பணத்தையெல்லாம் எப்படி யாவது மீட்டு அந்தப் பணத்தை இந்தியாவின் வளத்திற்காகத் திரும்பக் கொண்டு வர வேண்டும், அதற்காக ஓர் அவசரச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், பறிமுதல் செய்யப்படும் பணத்தை தேசிய சொத்தாக அறிவிக்க வேண்டும் என்றும்,

ஊழல்வாதிகள் குறித்து விசாரிக்க விரைவு நீதி மன்றங்கள் அமைக்க வேண்டும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து; ஜூன் 4ஆம் தேதிமுதல் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போகிறேன், யார் சொன்னாலும் அந்த முடி விலிருந்து விலகமாட்டேன் என்று தன்னைச் சமாதானப்படுத்த வந்த மத்திய அமைச்சர்களிடம் யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்தார்.

ஊழலுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி சில நாள்களுக்கு முன்பு மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே அவர்கள் உண்ணா விரதம் தொடங்கியபோது, நாடு முழுவதும் ஊழலுக்கு எதிராக பெரியதோர் எழுச்சி ஏற்பட்டது. அது போன்றதொரு நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க பாபா ராம்தேவ் அவர்களது அறிவிப்பினை யொட்டி மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற் கொண்டது.

இன்னும் சொல்லப்போனால் இதற்கு முன்னர் நடந்திராத வகையில், பாபா ராம் தேவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நிதி அமைச்சர் திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் தலைமையில் நான்கு அமைச்சர்கள் குழுவினர் டில்லி விமான நிலையத்திற்கே சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதன் பின்னரும் தனது உண்ணாவிர தத்தை கைவிடப் போவதில்லை என்று ராம்தேவ் அறிவித்தார். அரசுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றது.

ராம்தேவ் பிரச்சினையை எதிர்கொள்வது தொடர்பாக காங்கிரஸ் உயர் நிலைக் குழுக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் 2-6-2011 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம், ஏ.கே. அந்தோணி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

அண்ணா ஹசாரே அவர்களின் கோரிக்கை யினை நிறைவேற்றிடும் வகையில், லோக்பால் மசோதா வரைவுக் குழுவின் கூட்டம் அதன் தலைவரும், நிதி அமைச்சருமான பிரணாப் முகர்ஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றபோது,

லோக் பால் வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பி.க் களைக் கொண்டு வருவது குறித்து ஆலோசிக் கப்பட்டது. அப்போது லோக்பால் வரம்புக்குள் இவர்களைக் கொண்டுவர அந்தக் குழுவிலே பொதுமக்கள் சார்பில் இடம் பெற்றுள்ள பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்தபோதிலும், மத்திய அரசின் சார்பில் இடம் பெற்றிருந்த பிரதிநிதிகள் எதிர்த்திருக்கிறார்கள்.

ராம்தேவ் அவர்களின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்த ஹசாரே, லோக்பால் சட்டத்தை மக்களவையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஏப்ரலில் உண்ணாவிரதம் இருந்தபோது, பிரதமரை யும் லோக்பால் சட்ட வரம்பிற்குள் கொண்டுவர மத்திய அரசு சம்மதித்ததாகவும், ஆனால் தற்போது அந்த வாக்குறுதியில் இருந்து அரசு பின்வாங்கி விட்ட தாகவும் கூறியிருக்கிறார். லோக்பால் சட் டத்தில் பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரை உட்படுத்தக்கூடாது என்ற அரசின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ராம்தேவ், பிறகுதான் அவ்வாறு சொல்லவில்லை என்று முரண்பட் டிருக்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் இதைப்பற்றி கருத்து தெரிவித்த போது, ராம்தேவ் ஒரு சன்யாசியே அல்ல, அவர் ஒரு வியாபாரி, யோகாசனம் கற்றுக் கொடுப் பதற்காக அவர் அதிகக் கட்டணம் வசூலிக்கிறார் என்றெல்லாம் குறிப்பிட்டார்.

லோக்பால் வரைவு மசோதா குறித்து அனைத்து மாநில முதல்வர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி, அவர்களின் கருத்துகளைக் கேட் டுள்ளது. 4-6-2011 அன்று செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் திரு. கபில் சிபல் அவர்கள் கூறும்போது, கறுப்புப் பணத்தை தேசிய சொத்து என அறிவிக்க, மத்திய அரசு ஒப்புக் கொண்டு உள்ளது; சட்டப்படி ஒரு குழு அமைத்து கறுப்புப் பணத்தை முழுமையாகக் கண்டறிய நடவடிக்கை எடுக்கவும் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது;

ஆனால் இது தொடர்பாக சட்டம் இயற்றுவதில் அரசு உறுதியாக இல்லை என்றார்.

இதைப்பற்றி ராம்தேவ் தனது அதிருப்தியைத் தெரிவித்து, மத்திய அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டுமென்றார். இல்லாவிட்டால் உண்ணா விரதத்தைத் தொடரு வேன் என்றார். பாபா ராம் தேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., உள்ளிட்ட அமைப்புகளின் சார்பாகவும் சாத்வி ரிதம்பரா அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இவ்வாறு ஹசாரே, குரு பாபா ராம் தேவ் போன்றவர்கள் இப்போது கறுப்புப் பணத்திற்கும் ஊழலுக்கும் எதிராக போர் தொடுக்கின்ற நேரத்தில் எனது நினைவு 1970-களுக்குச் செல்கிறது. அப்போது லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் பொது வாழ்வில் இருப்போர் தூய்மை யாக இருக்க வேண்டும் என்றும், தூய்மையைக் கெடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குரல் கொடுத்தபோது, தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த நான் அந்தக் கருத்தை வரவேற்று அறிக்கை கொடுத்தேன்.

அது மாத்திர மல்ல; திராவிட முன்னேற்றக் கழக அரசில் 1973ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதியன்று தமிழகச் சட்டப்பேரவையில் ஒரு மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. அந்த மசோதாவுக்குப் பெயரே, பொது வாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழல் குற்றத் தடுப்பு மசோதா என்பதாகும்.

இந்தச் சட்டத்தின்படி பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போர் மீது சாட்டப்படும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஒரு நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும். அவருக்கு உதவியாக தேவைப்பட்டால் கூடுதல் கமிஷனர்கள் நியமிக்கப்படுவார்கள். கூடுதல் கமிஷனர்களாக நியமிக்கப்படுவோர் மாவட்ட நீதிபதி அஸ்தஸ்தில் உள்ளவர்களாக இருப்பார்கள்.

இதன்படி லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டால் பொது வாழ்வில் ஈடுபட்ட அவருக்கு ஏழு ஆண்டுக் காலம் வரை சிறை தண்டனை விதிக்க மசோதா வகை செய்யும். பொதுவாழ்வில் ஈடுபட்ட வர் மீது சாட்டப்பட்ட லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு பொய்யானவை என்று விசாரணைக்குப் பிறகு முடிவானால் அவ்வாறு பொய்யான குற்றம் சுமத்தியவருக்கு மூன்றாண்டு காலம்வரை சிறை தண்டனை விதிக்கலாம்.

இந்த சட்டத்தின் முக்கிய கூறு என்னவென்றால், பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள் யார் என்று கூறும்போது முதல் அமைச்சர், முன்னாள் முதல் அமைச்சர், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், சட்டப் பேரவை, மேலவை முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், முன்னாள் மேயர்கள், நகர்மன்றத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், மாநகராட்சி முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள் அடங்குவர்.

இந்த மசோதாவை அறிமுகம் செய்தபிறகு அதுபற்றி ஆய்வு செய்வதற்காக பொறுக்குக் குழுவிற்கு மசோதா அனுப்பப்பட்டது.

இந்த மசோதாவை அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் அப்போது கறுப்பு மசோதா என்று வர்ணித்தார். அவர் அவ்வாறு கருத்து தெரிவித்த போதும், அப்போது தமிழகத்திற்கு வந்த அன்றைய ஜன சங்கத் தலைவர், எல்.கே. அத்வானி அவர்கள் அந்த மசோதா பற்றிக் கூறும்போது, தமிழ்நாடு அரசின் ஊழல் ஒழிப்பு மசோதா பற்றிய கொள்கையை வரவேற்கிறேன்.

ஊழல் பிரச்சினை மாநில மட்டத்திலேயே தீர்க்கப்பட வேண்டும். மத்திய அரசு இதனை மேற்கொள்ளக்கூடாது. இந்த மசோதா வரம்பிற்குள் முதல் அமைச்சரும் சேர்க்கப் பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். மத்திய சர்க்காரின் லோக்பால், லோக் அயுக்த் மசோதா வரம்புக்குள் பிரதமர் சேர்க்கப்படவில்லை என்று கூறினார்.

21-2-1973 தேதியிட்ட இந்து நாளிதழில், எம்.ஏ. சதானந்த் அவர்கள் அந்த சட்டம் பற்றி எழுதும் போது, எல்லாவற்றுக்கும் வழி காட்டும் தமிழ்நாடு, இந்த வகையிலும் அகில இந்தியாவிற்கும் வழிகாட்டி உள்ளது. நடைமுறைக்கேற்ற நல்ல சட்டங்களைக் கொணர்வதில் தமிழகம் எப்பொழுதுமே முன்னோடியாக இருந்திருக்கிறது. அந்த வகையில் இந்த மசோதாவும் ஒரு முன் னோடியாகும்.

ஒரு ஜனநாயக அமைப்பில், அறிவு பூர்வமான கருத்துகள் எந்தப் பக்கத்தில் இருந்து வந்தாலும் அவை வரவேற்கப்பட வேண்டியவை. அந்த வகையில் மிகச் சிந்தனைத் தெளிவோடு இந்த மசோதா வந்துள்ளது. நடைமுறைக்கேற்ற நியாய மான ஒரு மசோதாவைத் தாக்கல் செய்யக் காரண மாக இருந்தவர்களைப் பாராட்டுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

மூதறிஞர் ராஜாஜி அவர்கள் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்ததும் சுதந்திரா கட்சியைச் சேர்ந்தது மான சுயராஜ்யா வார இதழில் அதன் ஆசிரியர் திரு. க. சந்தானம் அவர்கள் இந்தச் சட்டம் குறித்து அப்போது எழுதிய கட்டுரையில், தமிழகச் சட்ட மன்றத்தின் கடந்த கூட்டத்தில் கொண்டு வரப் பட்டுள்ள ஊழல் விசாரணை சட்டம் தீவிரமான தும் நெடுநோக்குடையதுமாகும்.

ஆனால் என்னை வியப்பில் ஆழ்த்தியது என்னவெனில், எம்.ஜி. ராமச்சந்திரனும் வேறு சிலரும் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதானது ஏதோ ஊழலை மறைப்பதற்கென்றே செய்யப்பட்ட மாக்கியவல்லி நடவடிக்கை என்பதாக எடுத்த எடுப்பிலேயே கூறிவிட்டதாகும்.

அவர்கள் இந்தச் சட்ட நகலை உன்னிப்பாகப் பரிசீலித்தார்களா அல்லது புரிந்து கொண்டார்களா என்று நான் அய்யுறுகிறேன். 1969ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை முன் கொண்டுவரப்பட்டு பின்னர் என்ன காரணத் தாலோ மாநிலங்களவை முன் கொண்டு வரப்படா மல் காலாவதியாகும்படி விடப்பட்ட லோக்பால், லோக்அயுக்த் சட்ட நகலோடு தமிழக சட்ட நகலை அவர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.

மத்திய சட்ட வரைவைக் காட்டிலும் சில வகைகளில் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சட்ட வரைவு சிறப்புடையதாகும். லோக் பால் மசோதா பிரதம மந்திரிக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதன் வரம்பிலிருந்து விலக்களித்தது.

தமிழகச் சட்டமோ முதல் அமைச்சர், அமைச்சர்கள், சட்டப் பேரவை, மேலவை ஆகியவற்றின் உறுப்பினர் களையும் அதன் வரம்புக்குள் சேர்த்துள்ளது. சட்டத்தில் சாத்தியமான அளவுக்கு நீதிபதிகளை நியமிப்பதற்கான ஏற்பாடு சிறப்பாகச் செய்யப் பட்டுள்ளது. இந்தச் சட்ட வரைவு பிற மாநிலங்களுக்கெல்லாம் ஒரு முன் மாதிரியாக விளங்கும் என்று எழுதியிருந்தார்.

1973ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி யன்று அந்த மசோதா தமிழகத்தின் இரண்டு சபை களிலும் நிறைவேறியது. அப்போது சட்ட அமைச்சராக இருந்த நண்பர் செ. மாதவன் அந்தச் சட்டத்தை முன் மொழிந்து பேசினார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எல்லாம் பேசிய பிறகு, அந்தச் சட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டு நான்தான் அன்றைக்கு உரை யாற்றினேன். அது இன்றளவும் அவை நடவடிக்கை குறிப்பிலே இடம் பெற்றுள்ளது.

அந்தச் சட்டத்தை முழுமையாகப் படித்துப் பார்த்த லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் கழக அரசைப் பாராட்டியதோடு தனது முழுப் புரட்சி இயக்க மான ஊழல் ஒழிப்பு இயக்கத்துக்கு இந்தச் சட்டம் உதவி புரியும் என்று கூறினார்.

கழக அரசு நிறைவேற்றிய இந்தச் சட்டத்தின் அடிப்படையில் நீதிபதி வெங்கடாத்திரி அவர்கள் ஊழல் குறித்து வரக்கூடிய புகார்களை விசாரிப்ப தற்காக தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட் டார்.

கழக ஆட்சிக்குப் பிறகு வந்த அ.தி.மு.க. வினர் அந்தச் சட்டத்தையே திரும்பப் பெற்று விட்டார்கள்.

லோக்பால், லோக் அயுக்த், ஊழல் எதிர்ப்பு, உண்ணா விரதம் என்றெல்லாம் பேசப்படுகின்ற இந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு 1973ஆம் ஆண்டு நிறைவேற்றிய இந்தச் சட்டத்தைப் பற்றி உனக்கும் உலகத்திற்கும் நினைவூட்ட விரும் பினேன். அதன் விளைவாகத் தான் இந்தக் கடிதம்.

அன்புள்ள,
மு.க