Search This Blog

Thursday, December 9, 2010

தமிழகத்தில் பிணங்கள் விழுந்தபோது கோவா கடற்கரையில் கும்மியடித்து டூயட் பாடிய ஜெயலலிதா - முதல்வர் கலைஞர்

தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த போது, தமிழ்நாட்டில் பிணங்கள் விழுந்தபோது - கோவா கடற்கரையில் கும்மியடித்துக் கொண்டு `டூயட்' பாடிக்கொண்டிருந்தவர் ஜெயலலிதா. 6-ந் தேதி வெளியிட்ட அறிக்கையை எப்படி தொடங்கினோம் என்பது கூடத்தெரியாமல், 8-ந் தேதி அறிக்கையை தொடங்குகிறார். இந்த லட்சணத்தில், நான் கோமாளித்தனமான அறிக்கைகளை விடுவதாக கூறுகிறார் இந்தக் கொடநாடு கோடீஸ்வரி என்று சாடியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

அ.தி.மு.க. ஆதரவு நாளேடுகளில் 9-ந் தேதி "கருணாநிதி ஆட்சியில் கொள்ளை போகும் அரசு நிலங்கள்'' என்ற தலைப்பில் தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு வீட்டுமனை வழங்கப்பட்டதாக பெரிய அளவில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு நான் தெளிவாக பதில் அறிக்கை கொடுத்திருந்தபோதிலும், அதே குற்றச்சாட்டு மீண்டும் வந்திருப்பதால், அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இந்த வீட்டுமனைகள் யார் யாருக்கு வழங்கப்பட்டன என்பதை சுருக்கமாக சொல்கிறேன்.

ஜெயலலிதா ஆட்சியில் தலைமை செயலாளராக இருந்த என்.நாராயணன் ஐ.ஏ.எஸ்.க்கு 1993-ம் ஆண்டு 4115 சதுர அடி; முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மகன் கே.எஸ்.கார்த்தீசன் என்பவருக்கு பெசன்ட்நகர் பகுதியில் 1995-ம் ஆண்டு 4535 சதுர அடி; முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் துணைவியார் நூர் ஜமிலாவுக்கு கொட்டிவாக்கத்தில் 1993-ம் ஆண்டு 2559 சதுர அடி; நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மனைவி டாக்டர் பானுமதி தம்பிதுரைக்கு அண்ணாநகரில் 7 கிரவுண்ட் நிலம்; அ.தி.மு.க.வின் தொழிலாளர் பேரவைக்கு அண்ணா நகரில் 3 கிரவுண்ட் நிலம்; அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.வேலுச்சாமியின் மனைவி பானுமதிக்கு கோவையில் 1993-ம் ஆண்டு வீடு, 2004-ம் ஆண்டு தேவாரம் ஐ.பி.எஸ்., கே.விஜயகுமார் ஐ.பி.எஸ்., ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ். உட்பட பல ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு சோளிங்கநல்லூரில் தலா 4800 சதுர அடி;

நீதியரசர் எஸ்.ஆர்.சிங்காரவேலுவுக்கு 2005-ம் ஆண்டு சோளிங்கநல்லூரில் இரண்டு மனைகள், சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.செல்வராஜ் என்பவருக்கு 1994-ம் ஆண்டு கொட்டிவாக்கத்தில் 2692 சதுர அடி, முன்னாள் முதலமைச்சரிடம் துணைச் செயலாளராக இருந்த டி.நடராஜன் ஐ.ஏ.எஸ்.க்கு 1995-ம் ஆண்டு திருவான்மியூரில் 6784 சதுர அடி; ஆதி.ராஜாராமுக்கு 1995-ல் 3101 சதுர அடி., 1993-ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சரஸ்வதிக்கு அண்ணா நகரில் 880 சதுர அடி; சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த மல்லிகாவுக்கு அண்ணா நகரில் 950 சதுர அடி; எம்.ஜி.ஆருடைய ஓட்டுநர் பூபதிக்கு நந்தனத்தில் 3600 சதுர அடி; எஸ்.ஆண்டித்தேவரின் மனைவி பிலோமினாவுக்கு 1994-ல் மதுரையில் 1500 சதுர அடி என்று ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. 2005-ம் ஆண்டு பலருக்கு இரண்டு மனைகள் கொடுக்கப்பட்ட நீண்ட பட்டியலும் உள்ளது.

எனவே அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களின் மனைவி, மகன் பெயர்களிலும், அ.தி.மு.க. தொழிற்சங்க அலுவலகத்தின் பெயரிலும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பெயரிலும், அ.தி.மு.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பெயரிலும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளரின் மனைவி பெயரிலும், நீதியரசர்கள் பெயரிலும் இத்தகைய வீடுகள், மனைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதற்கு ஒரு சிலவற்றை மட்டும் சான்றாக குறிப்பிட்டுள்ளேன்.

தி.மு.க. ஆட்சியில் வீட்டுமனைகள் ஒதுக்கீட்டில் தவறு நடந்துவிட்டதாக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட பத்திரிகையாளர்கள் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் யார் யாருக்கு இத்தகைய வீடுகள், மனைகள் தரப்பட்டன என்ற முழு விவரத்தையும் தங்கள் புலன்விசாரணையின் மூலம் தெரிந்து இனியாவது வெளியிட்டால், அவர்களின் பத்திரிகா தர்மத்தை பாராட்டலாம்.

பத்திரிகைகள் இன்று ஜெயலலிதா விடுத்துள்ள ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார்கள். எந்த அளவிற்கு ஜெயா குழப்பம் அடைந்திருக்கிறார் என்பதற்கு ஆதாரம் தேடி நாம் வேறெங்கும் செல்ல தேவையில்லை. அவருடைய அறிக்கையை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். 6-12-2010 அன்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை எப்படி தொடங்குகிறது தெரியுமா?

"ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல, வெள்ளத்தால் தமிழக மக்கள் அல்லல்பட்டு கொண்டிருக்கையில், தன்னுடைய "இளைஞன்'' திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவிலே கலந்துகொண்டு உல்லாசமாக பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி'' - இப்படித்தான் 6-ந் தேதிய ஜெயா அறிக்கை தொடங்குகிறது.

8-12-2010 அன்று மீண்டும் ஜெயலலிதாவின் அறிக்கை ஒன்று வந்துள்ளது. அந்த அறிக்கை எப்படித் தொடங்குகிறது தெரியுமா?

"ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தபோது எப்படி நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தாரோ, அதேபோல் கனமழை காரணமாக தமிழகமே வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், தன்னுடைய அமைச்சரவை சகாக்களுடன் திரைப்பட விழாவில் ஆனந்தமாக பொழுதைக் கழித்து இருக்கிறார் கருணாநிதி'' - இந்த இரண்டு அறிக்கைகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும். 6-ந் தேதி வெளியிட்ட அறிக்கையை எப்படி தொடங்கினோம் என்பது கூடத்தெரியாமல், 8-ந் தேதி அறிக்கையை தொடங்குகிறார் என்றால் அதற்கென்ன காரணம்? ஆத்திரமா? அறியாமையா? திரைப்படத்துறை விழாவிலே நான் கலந்து கொண்டுவிட்டேன் என்ற வயிற்றெரிச்சலா? அல்லது தன்னை யாருமே அழைக்கவில்லையே என்ற பொறாமையா? இந்த லட்சணத்தில்தான் நான் கோமாளித்தனமான அறிக்கைகளை விடுவதாக எழுதியிருக்கிறார் இந்தக் கொடநாடு கோடீஸ்வரி!

அடுத்து ஜெயலலிதா தனது அறிக்கையில் என்ன சொல்கிறார் தெரியுமா? "இதில் திடுக்கிட வைக்கும் உண்மை என்னவென்றால், ஒட்டுமொத்த தமிழக அமைச்சரவையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுதான்'' என்று எழுதியிருக்கிறார். இதில் ஒரு வயிற்றெரிச்சல்! இந்த அம்மையாரின் ஆட்சிக் காலத்தில்தான் இவர் கலந்து கொள்கின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அமைச்சரவையிலே உள்ள அத்தனை பேரும் சென்று கலந்து கொள்வார்கள். ஏன், தற்போது முதல்-அமைச்சராக இல்லாத இந்த காலத்திலே கூட, இவர் கோவை, திருச்சி, மதுரை நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டபோது, இவரது அமைச்சரவை முன்னாள் சகாக்கள், இன்றைய அ.தி.மு.க. முன்னணியினர் அத்தனை பேரும் சென்று கலந்து கொண்டார்கள்.

ஆனால் இப்போது என்ன நிலைமை? 7-ந்தேதியன்று அமைச்சரவை கூட்டம். 5-ந்தேதியன்று காலையில் புதுக்கோட்டை மாவட்ட கழகத்தின் ஆய்வுக்கூட்டம். அந்த கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் என்ற முறையில் நிதியமைச்சர் பேராசிரியர், பொருளாளர் என்ற முறையில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் என்ற முறையில் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச்செயலாளர்கள் என்ற முறையில் துரைமுருகன், பரிதி இளம்வழுதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த அமைச்சர்களில் அன்று மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேராசிரியரைத்தவிர மற்ற நான்கு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த நான்கு பேரைத் தவிர 6ந் தேதி விழுப்புரத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்காக துணை முதல்வர் ஸ்டாலினை அழைத்துச் செல்வதற்காக வந்த உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் திரைப்பட விழாவிலே கலந்து கொண்டார்கள். மொத்தம் 29 அமைச்சர்களில் ஆறேழு பேர்தான் அந்த விழாவிலே கலந்து கொண்டார்கள். ஆனால் ஜெயலலிதா ஒட்டு மொத்த தமிழக அமைச்சரவையும் இந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்டதாக அறிக்கை விடுகிறார் என்றால், அதற்கு என்ன பெயர் சொல்வது?

இந்த ஆறேழு பேரிலும், துணை முதல்வர், பொன்முடி ஆகியோர் நிகழ்ச்சி முடிந்தவுடன் இரவு 9 மணிக்கு மேல் சென்னையிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளிலும், கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் சுற்றிப் பார்த்து விட்டு நிவாரண உதவிகளை வழங்கிவிட்டு, மீண்டும் 7-ந்தேதி அமைச்சரவையிலே கலந்து கொள்ள வந்து விட்டார்கள்.

ஜெயலலிதா மேலும் அவருடைய அறிக்கையிலே வெள்ள நிவாரண பணிகளை பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டினைக் கூறியிருக்கிறார். அதுவாவது உண்மையா? அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அன்றாடம் வெள்ளப்பகுதிகளையெல்லாம் பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை கொடுத்ததின் பேரில், தமிழக அமைச்சரவையே கூடி விவாதித்து பல்வேறு உதவிகளை செய்ய முடிவெடுத்துள்ளது. மத்திய அரசிடம் உதவி கோரிப் பெறுவதென அமைச்சரவையில் முடிவெடுத்து, அதற்கான கடிதமும் அனுப்பப்பட்டுவிட்டது. ஆனால் வெள்ள நிவாரணப் பணிகளிலே நான் அக்கறை செலுத்தவில்லை என்று ஜெயலலிதா அறிக்கை விடுகிறார் என்றால் அதிலே ஏதாவது பொருள் இருக்கிறதா?

கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது - தமிழ்நாட்டில் பிணங்கள் விழுந்தபோது - கோவா கடற்கரையில் கும்மியடித்துக் கொண்டு `டூயட்' பாடிக்கொண்டிருந்தவர் இதே ஜெயலலிதா!

கூட்டணி கட்சியை நான் ஏதோ மிரட்டுவதாகவும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே வழக்கம்போல உளறியிருக்கிறார். பா.ஜ.க. ஆட்சியிலே இருந்தபோது விடுதலை நாளன்று கூட ஜெயலலிதா மிரட்டியதாகவும், தனது வாழ்நாளிலேயே ஜெயலலிதாவோடு கூட்டணியிலே இருந்த காலம்தான் மோசமான காலம் என்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியதை தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்று ஜெயா நினைக்கிறாரா?

நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை ஒப்புக்கொள்கிற வரையில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஓயாது என்று ஜெயலலிதா அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் இவர்தான் ஏகத் தலைவி என்று தானாகவே கற்பனை செய்துகொண்டு அறிக்கையிலே சொல்லியிருக்கிறார்.

நினைப்புதான் பொழப்பை கெடுக்கும் என்று சொல்வார்களே அதுபோலத்தான் எப்படியாவது, ஏதாவது நடக்காதா, அதன் மூலமாக தனக்கு விடிவுகாலம் பிறக்காதா என்றுதான் ஏங்குகிறார். இதற்கிடையே கழக அரசின் சார்பில் செய்யப்படும் சாதனைகள், திட்டங்கள் கண்டு அசூயை கொண்டு, மற்றவர்கள் என்னைப் பாராட்டினால் இவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதிலும் ரஜினிகாந்த், கவிஞர்கள் வாலி, வைரமுத்து போன்றவர்கள் அந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு என்னைப் பாராட்டியதை எப்படி அவரால் பொறுத்துக்கொள்ள முடியும்? அதனால்தான் அறிக்கையிலே அநாகரிகமான வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்துகிறார்.

இறுதியாக ஜெயலலிதா தனது அறிக்கையை முடிக்கும்போது "தான் செய்த பாவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நாள் நெருங்கி கொண்டிருக்கிறது என்பது கருணாநிதிக்கு தெரியும்'' என்று எழுதியிருக்கிறார். செய்த பாவங்களின் பலனை தற்போதே அனுபவித்துக்கொண்டிருக்கும் ஜெயலலிதா என்னுடைய நாள் நெருங்கிக்கொண்டிருக்கின்றது என்பதை ஏதோ அவரது வார்த்தை மூலம் சொல்லியிருந்தால், அதற்காக கவலைப்படுபவன் அல்ல இந்த கருணாநிதி!

அடுத்து ஜெயலலிதா தனது அறிக்கையில் நான் காங்கிரசை மிரட்டுவதாகவும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரசுக்கும் தொடர்பு உண்டு என்பதைப்போல கருத்து தெரிவித்ததாகவும் அவராகவே சொல்லி கொண்டு தி.மு.க.விற்கும், காங்கிரசுக்கும் இடையே கலகம் ஊட்டுகின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நான் "இளைஞன்'' பாடல்கள் வெளியீட்டு விழாவிலே பேசும்போது, ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 352 கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், அது எவ்வளவு பெரிய தொகை, அந்தத்தொகையை ஊழல் செய்திருக்க முடியுமா? என்று பேசினேன். உடனே ஜெயலலிதா காங்கிரசை மிரட்டுவதாக வழக்கம்போல சிண்டு முடியப்பார்க்கிறார். அவரது எண்ணம் நிறைவேறாது என்று கூறியுள்ளார்.

thatstamil

Tuesday, December 7, 2010

கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், உண்மையை தீர விசாரிப்பதே மெய்-கலைஞர்

"கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், உண்மையை தீர விசாரிப்பதே மெய்'' என்பதற்கேற்ப ஒரு பொய்யை திரும்பத்திரும்ப சொன்னாலே அது உண்மையாகி விடும் என்பதை போல, பழிசுமத்துவதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:


கேள்வி: இன்று அம்பேத்கர் நினைவு நாள். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துகின்ற இயக்கம் திமுக இந்த நேரத்தில் திமுக சார்பில் அம்பேத்கர் நினைவை போற்றும் வகையில் அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ள சாதனைகள் ஒரு சிலவற்றைக் கூற முடியுமா?

பதில்:1972ம் ஆண்டிலேயே வியாசர்பாடியில் அம்பேத்கர் பெயரில் புதிய கலைக்கல்லூரி- மைலாப்பூர் ஹாமில்டன் பாலத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயர்- 1989ம் ஆண்டில் அம்பேத்கர் பிறந்த மராட்டிய மாநிலத்தில் உள்ள மரத்துவாடா பல்கலைக்கழகத்திற்கு "அம்பேத்கர் பல்கலைக்கழகம்'' எனப் பெயரிட வேண்டுமென, அங்கே போராட்டம் நடந்தபோது, கழகத்தின் சார்பில் மராட்டிய மாநில ஆளுநருக்கு ஆயிரக்கணக்கான தந்திகள் அனுப்பப்பட்டு, அதன் காரணமாக மரத்துவாடா பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டது,

1990ம் ஆண்டு கழக அரசின் சார்பில் ஆணையிட்டு, அம்பேத்கர் நூற்றாண்டு விழா- சென்னை சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் பெயர்- 20-9-1997 அன்று அம்பேத்கர் பெயரில் சென்னையில் இந்தியாவிலேயே முதல் சட்டப் பல்கலைக்கழகம்- 2006-07 நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி, "அம்பேத்கர்'' திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட்டமைக்காக 3-12-2010 அன்று ரூ.10 லட்சத்துக்கான காசோலை- 1997-ம் ஆண்டில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.25 லட்சம் முதலீட்டில் அம்பேத்கர் பெயரில் கல்வி அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையில் இருந்து கல்லூரியில் படிக்கும் ஆதிதிராவிட சமுதாயத்தைச்சேர்ந்த மாணவ, மாணவியர்க்குப் படிப்பு உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன.

அம்பேத்கர் போற்றிய லட்சியமான சமத்துவம்- சகோதரத்துவம் தழைத்திடவும், நிலைத்திடவும் தமிழகமெங்கும் "தலித்'' மக்கள் உள்ளிட்ட அனைத்துச் சாதியினரும் ஒரே இடத்தில் இணக்கத்தோடு வாழ்ந்திட பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்- தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் முன்னேற்றத்திற்குப் பாடுபடும் ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் பெயரில் விருது வழங்கி, ரூ.1 லட்சம் பொற்கிழி வழங்கும் திட்டம் 1998ல் கழக ஆட்சியில் தொடக்கம்,

ரூ.4 கோடி செலவில் 55 அடி விட்டத்துடன் கூடிய அரைக்கோள வடிவத்தில் அம்பேத்கர் மணிமண்டபத்தைக் கட்டி 10-6-2000 அன்று திறந்து வைக்கப்பட்டது

அம்பேத்கர் வருகை தந்த இடத்தில் அவருடைய நினைவாக ரூ.42 லட்சம் செலவில் புதிய பூங்கா- சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 21-4-2010 அன்று அம்பேத்கர் சிலை திறப்பு (அரசின் சார்பில் ரூ.20 லட்சம் நிதியுதவி) என்று தொடர்ந்து அம்பேத்கர் புகழைப் பரப்பும் முயற்சியில் கழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

அம்பேத்கர் பெயரில் இவ்வளவு செய்ததையன்னியில், அவர் எந்தத் "தலித்'' சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டாரோ, உழைத்தாரோ அவரின் அந்த நோக்கத்தைப் புரிந்து கொண்டு கழக அரசு பதவியிலே இருந்த காலத்தில் எல்லாம் அந்தச் சமுதாய மக்களின் நல்வாழ்வுக்காக செய்த சாதனைகள் சிலவற்றையும் குறிப்பிட விரும்புகிறேன்.

-ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் இருந்த 16 சதவிகித இடஒதுக்கீட்டினை 1971ம் ஆண்டில் கழக ஆட்சியிலேதான் 18 சதவிகிதமாக உயர்த்தி- மீண்டும் 1990ல் கழக ஆட்சியிலேதான் பொது ஒதுக்கீட்டிலிருந்து ஒரு விழுக்காடு எடுத்து, பழங்குடியினருக்கு மட்டும் தனியே ஒரு விழுக்காடு என்றும், ஆதிதிராவிடர்களுக்கு மட்டும் 18 விழுக்காடு என்றும் அறிவித்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

-ஆதிதிராவிட மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக அரும்பாடுபட்ட சுவாமி சகஜானந்தாவின் நூற்றாண்டு விழா 1990ம் ஆண்டில் கழக ஆட்சியில் சிறப்பாக கொண்டாடப்பட்டதோடு, சிதம்பரம் நந்தனார் பள்ளி விடுதி வளாகத்தில் சுவாமி சகஜானந்தா பெயரில் சமூக கலையரங்கம் ஒன்றும் கட்டப்பட்டது.

- மதுரையில் தியாகி கக்கன் சிலையை கழக அரசின் சார்பில் 31-8-1997ல் நான் திறந்து வைத்ததோடு, அவர் பிறந்த தும்பைப்பட்டியில் அவர் பெயரால் நினைவு மண்டபம் ஒன்றும் எழுப்பியிருக்கிறேன்.

-கட்டபொம்மனின் தளபதிகளில் ஒருவராக விளங்கிய ஆதிதிராவிட வகுப்பைச்சேர்ந்த வீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு கவர்னகிரியில் வீடுகளைக் கட்டிக்கொடுத்து, "வீரன் சுந்தரலிங்கம் நகர்'' என்று பெயர் சூட்டப்பட்டது.

- தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து என் மகன் மு.க.அழகிரிக்கு பெண் எடுத்தது மட்டுமல்ல- என் பேத்தியை அந்த சமுதாயத்தை சேர்ந்த மணமகனுக்கு மணம் முடித்துக் கொடுத்திருக்கிறேன்.

-தமிழக அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்த ஒருவரை மட்டுமே நியமித்துக் கொண்டிருந்த முறையை மாற்றி என்னுடைய அமைச்சரவையில்தான் ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு பேரை அமைச்சர்களாக நியமித்ததோடு, அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை பேரவை துணைத் தலைவராகவும் நியமித்தேன்.

-இவைகள் தவிர தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்விச் சலுகைகள், விடுதிகள், திருமண நிதியுதவிகள் என்று பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதை அவர்களே அறிவார்கள்.

கேள்வி: முருங்கை மரம் இருந்தால் இலவச மின்சாரம் கிடையாது என்று அதிகாரிகள் திடீர் நிபந்தனை விதித்திருப்பதாக நாளேடு ஒன்று கட்டம் கட்டி பெரிதாக செய்தி வெளியிட்டுள்ளதே?

பதில்: நெல், கரும்பு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கழக அரசின் சார்பில் இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறதே தவிர, முருங்கை, கொய்யா, சப்போட்டா, முந்திரி போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு எந்தக் காலத்திலும் இலவச மின்சாரம் அளிப்பதில்லை. இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல், திடீரென்று ஏதோ அதிகாரிகள் இந்த ஆட்சியிலே இலவச மின்சாரம் வழங்கிட முருங்கை வளர்க்கக்கூடாது என்று நிபந்தனை விதித்திருப்பதைப் போல அந்த இதழில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.

பத்திரிகை ஆசிரியர்கள் அல்லது செய்தியாளர்கள் இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்பத்திற்கு ஆளாக்குவதற்குப் பதிலாக உண்மை என்ன என்பதை கேட்டுத் தெரிந்துகொண்டு, அதன்பின்னர் வெளியிடுவது அவர்களுக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது.

கேள்வி: சென்னை விமான நிலையத்தில் அதிமுக தலைவிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு எதற்காக?

பதில்: கொடநாட்டில் இத்தனை நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்ட நிலையிலேயே, அன்றாடம் விடாமல் அவர் கைப்படவே அறிக்கைகளை தொடர்ந்து எழுதி, எந்தெந்த கிராமத்தில் குடி தண்ணீர் வரவில்லை, சாலைகளிலே பழுது உள்ளது என்பதையெல்லாம் கண்டறிந்து, அதற்காக தொண்டர்களை அனுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காகப் பாராட்டி வரவேற்பு கொடுத்திருக்கலாம். ஆனால் அது அவர்களுடைய உள்கட்சி பிரச்சனை. ஆனால் வந்ததும் வராததுமாக மத்திய அரசு ஸ்பெக்ட்ரம் பிரச்சனைக்காக ஆ.ராஜாவை இன்னும் கைது செய்யவில்லையே என்று கேட்டிருக்கிறார்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசிலே அமைச்சராக இருந்து, பின்னர் ஜெயலலிதா ஆணையின் பேரில் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபோது, அவர்களை மத்திய அரசு கைது செய்ய வேண்டுமென்றா ஜெயா கூறினார்?

கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று விட்டதாக பத்திரிகைகள் தானே பூதாகாரமாக ஆக்குகின்றன?

பதில்: உண்மைதான். ஒரு சில பத்திரிகைகளும், ஒரு சில எதிர்க்கட்சிக்காரர்களும்தான் பூதாகாரமாக இந்தப் பிரச்சனையை ஆக்கி, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை ஏதோ ஒரு தனிப்பட்ட நபர் அப்படியே அவருடைய வீட்டிற்கு தூக்கிக் கொண்டுபோய் விட்டதைப் போலவும், அந்தத் தொகையை ஒருசிலர் பங்கிட்டு கொண்டதை போலவும் அதற்காக நாடாளுமன்றத்தையே நடத்தவிட மாட்டோம் என்றும் பேசினார்கள், எழுதினார்கள். ஸ்பெக்ட்ரம் பிரச்சனையிலே என்ன நடைபெற்றது என்ற விவரத்தை நாடாளுமன்றத்திலே விவாதிக்கலாம் என்று ஆளுங்கட்சி சார்பிலே பலமுறை அழைத்தபோதும், விடாமல் கூட்டுக்குழுவே தேவையென்று விடாப்பிடியாக அவையை நடத்தவொட்டாமல் செய்தார்கள்.

தணிக்கைத்துறை அதிகாரியின் அறிக்கையிலே கூட- அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் காரணமாக இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், ஆனால் இந்தத் தொகை உத்தேசமாகக் கணக்கிடப்பட்டதாகும் என்றும் தான் உள்ளது என்றும், நட்டத்தொகை விரைவில் துல்லியமாக கணக்கிடப்படும் என்றும் தற்போது அந்தத் துறையின் பொறுப்பையேற்றுள்ள கபில் சிபல் பேட்டியிலே சொல்லியிருக்கிறார்.

மேலும் கபில்சிபல் தனது பேட்டியில், "அலைக்கற்றை உரிமம் பெறுவதற்காக தவறான தகவல்கள் அளித்த நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். அதுபோல் ஒதுக்கீட்டை பெற்று அதைப் பயன்படுத்தாமல் இருக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் சொல்லியிருக்கிறார். இவ்வாறு செய்தால், தற்போது அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் இழப்புத் தொகை கணிசமாகக் குறைவதற்கு வழி உள்ளது.

இழப்புக்கு அந்தத் துறை அமைச்சராக இருந்த ராஜா மட்டுமே காரணம் என்று ஒரு சிலர் தங்களுக்குள்ள உள்நோக்கம் காரணமாக குற்றஞ்சாட்டிய போதிலும்- நேற்றைய "எக்கனாமிக் டைம்ஸ்'' வெளியிட்ட செய்தியில், "மத்திய அரசில் தொழில் நுணுக்கம் நன்கறிந்த உயர் அதிகாரிகளின் பற்றாக்குறையால் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பிற்கு அமைச்சரை குறை கூறுவதில் அர்த்தம் இல்லை'' என்று எழுதியிருக்கின்றது.

சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு விசாரணை முடியாமல், தீர்ப்பும் வராத நிலையில் அவசரப்பட்டு முன்னாள் அமைச்சர் ராஜா மீது குற்றம் கூறுவதாகவும் அந்தப் பத்திரிகை எழுதியுள்ளது.

"கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், உண்மையை தீர விசாரிப்பதே மெய்'' என்பதற்கேற்ப ஒரு பொய்யை திரும்பத்திரும்ப சொன்னாலே அது உண்மையாகி விடும் என்பதை போல பழிசுமத்துவதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்

Sunday, December 5, 2010

ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் ஊழலா? இவ்வளவு பெரிய தொகையை ஒருவர் ஊழல் செய்ய முடியுமா? கலைஞர் பேச்சு (முழுவதும்)

கலைஞரின் ‘‘இளைஞன்’’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இவ்விழாவில்முதலமைச்சர் கலைஞர் ஆற்றிய உரை:


‘‘இளைஞன்’’ படத்தினுடைய பாடல்கள் வெளியிடுகின்ற இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று அருமைத்தம்பி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வெளியூரிலிருந்து தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, இந்தத் தேதியிலே உங்களுக்கு வேறு ஏதும் அலுவல் இருக்கிறதா என்று கேட்டு, அவர் இல்லை என்று சொன்ன பிறகு, இந்த நாளில், இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று படத் தயாரிப்பாளர்கள் விரும்புகிறார்கள், படத்தில் கதாநாயகனாக நடிக்கும் தம்பி விஜய் விரும்புகிறார், நானும் அவர்களைப் போலவே விரும்புகிறேன்.


எனவே, அந்த விழாவிலே நீங்கள் கலந்து கொண்டு, பாடல்களை அடங்கிய அந்தத் தொகுப்பின் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட போது, சிறிதும் கூட அதற்காக ஒரு துளி நேரம் கூட எடுத்துக் கொள்ளாமல், நிச்சயமாகக் கலந்து கொள்கிறேன் என்று என்னிடத்திலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சொன்னார்கள்.

அவருக்கு கலைத்துறையின் மீது உள்ள அன்பு, பற்று - இது மாத்திரம் காரணமல்ல. என் மீது உள்ள நட்புணர்வு, அதுவும் அதற்கு ஒரு காரணம் என்பதை நான் மிக நன்றாக அறிவேன். அவர் ஆற்றிய உரையைக் கேட்டீர்கள். ஏறத்தாழ இங்கு நடைபெற்ற இந்த விழாவில் அவர் உள்ளிட்ட அனைவரும் ஆற்றிய உரை, ஒரு சிறப்புக் கூட்டம் போலவே இது அமைந்தது. பல்வேறு தலைப்புகளில் பலரும் பேசியது போலத்தான் இந்த விழா அமைந்திருக்கின்றது.


நாம் அவரை அழைத்திருப்பது போலவே, இன்றைக்கு மாதிரிப் படம் போல இரண்டு மூன்று பாடல்களையும், இரண்டு மூன்று காட்சிகளையும் காட்டும்பொழுது அதைப் பார்த்து விட்டு என்ன சொல்வாரோ என்று நான் கருதினேன். ஆனால், எந்தப் படமானாலும், அது வெற்றிகரமாக ஓடும் அல்லது ஓடாது என்று தீர்ப்பளிக்கக்கூடிய கலையுலக அனுபவம் உள்ளவர்களிலே மிகச் சிறந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற நம்பிக்கையில் அவர் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் - கருத்து சொல்ல வேண்டும் என்று சுயநலத்தின் காரணமாக அவரை நான் அழைத்தேன்.


அந்த சுயநலத்தைப் புரிந்து கொண்டோ, புரிந்து கொள்ளாமலோ அவர் கலந்து கொண்டு இந்த விழாவை மிகச் சிறப்பாக ஆக்கியிருக்கிறார்


. தம்பி நம்முடைய பா.விஜய் நன்றி கூறியதைப் போல, நானும் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என்னுடைய நன்றியைக் கூறிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.


நான் விஜய் அவர்களுக்குச் சொல்வேன். சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு இருக்கின்ற பணிவு, கனிவு, அடக்கம், அவர் காட்டுகின்ற அமைதி, இவைகள்தான் தம்பி விஜய் உனக்கும் வாழ்க்கையிலே அமையவேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.


விஜய்யை கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகத்தான் எனக்குப் பழக்கம். அவருடைய பாடல்களைக் கேட்டு நான் பூரிப்படைந்திருக்கின்றேன்.

இப்போது முரசொலி பத்திரிக்கையில் வாரந்தோறும் என்னுடைய வாழ்க்கை வரலாற்றை கவிதை நடையிலே எழுதி வருகிறார் தம்பி விஜய். அவைகளைப் படிக்கும் போது, எனக்கு என் வாழ்க்கை வரலாறு இவ்வளவு சிறப்புடையதா என்று எண்ணத் தோன்றுகின்ற அளவிற்கு அது அமைந்திருக்கிறது.


அத்தகைய அருமையான தமிழ் நடையில், எழுச்சி நடையில் விஜய் அந்தக் கவிதையை வாரந்தோறும் தொடர்ந்து எழுதி மக்களுக்கு வழங்கி வருகின்றார். அத்தகைய விஜய் - பா.விஜய் என்று அழைக்கப்படுகின்ற அந்த விஜய் - பாட்டுக்கு மாத்திரம் விஜய் ஆக இருந்தால் போதாது, அவர் கலை உலகத்திற்கும் விஜய் ஆக மாற வேண்டும் என்று எண்ணியவர்களில் நானும் ஒருவன்.


எப்படி விஜய்யினுடைய வாழ்க்கை இன்னும் புகழுடையதாக, பொலிவுடையதாக அமைய வேண்டும் என்று நம்முடைய வைரமுத்து அவர்களும், வாலி அவர்களும் விரும்புகிறார்களோ, விரும்பி வாழ்த்தினார்களோ, அதே அளவிலேதான் தம்பி விஜய்யை வாழ்த்த கடமைப்பட்டிருக்கின்றேன்.


விஜய் இங்கே பேசும்போது, என்னைப் பலபடப் பாராட்டினார். பாராட்டக் கடமைப்பட்டவர் என்பதற்காக அல்ல - அப்படிப் பாராட்டினால்தான் எனக்கு நன்றி தெரிவித்தாகப் பொருள் என்று அவர் கருதியிருப்பாரேயானால், நான் அவருக்குச் சொல்லிக் கொள்கிறேன் - உன்னைப் போன்ற பல தம்பிமார்கள் கலையுலகத்திலே பிரகாசிக்கவேண்டும், வரவேண்டும், புகழ்பெற வேண்டும் என்று கருதுகின்றவர்களிலே நான் முதல் ஆள் என்பதை தம்பி விஜய்க்குத் தெரிவித்து கொள்கிறேன்.


தமிழ்நாட்டில் ஏறத்தாழ பேசாப் படம் ஓடிய காலத்திலிருந்து கலைத்துறையில் நான் இருக்கிறேன். எங்கள் திருவாரூரில் ஒரு தியேட்டருக்குப் பெயரே கூட ‘‘கருணாநிதி’’ தியேட்டர்தான். என் பெயரை வைக்கவில்லை - கருணாநிதி என்பது திருவாரூரிலே ஒரு சாமியின் பெயர். அந்தப் பெயரில் அமைந்த அந்த தியேட்டரில் நான் தரையில் அமர்ந்து படம் பார்த்திருக்கிறேன்.




ஏனென்றால், பெஞ்சு டிக்கெட்டு வாங்க எனக்கு வசதியில்லை, வாய்ப்பில்லை என்றல்ல - தரையிலே உட்கார்ந்தால்தான் ஐந்தாறு பேராக நண்பர்களாக உட்கார்ந்து படம் பார்க்க முடியும் என்பதற்காக! உடனடியாக யாராவது சினிமாவுக்கு டிக்கெட் வாங்கக்கூட வசதியில்லாத கருணாநிதி என்று சொல்லக்கூடும். அவைகளையெல்லாம் நான் பெருமையாகத்தான் கருதுகிறேன்.


செல்வச் சீமான் வீட்டிலே பிறந்தேன், தங்கத் தாம்பாளத்தோடு தங்கத் தட்டிலே ஒரு வட்டோடு - தங்கக் கரண்டியோடு பிறந்தேன் நான் என்று சொல்லிக் கொள்ளவில்லை. ஏழையாகத்தான் பிறந்தேன், ஏழையாகத்தான் வாழ்ந்தேன், ஏழைகளோடுதான் நட்பு கொண்டேன், ஏழைகளுடைய வாழ்வுக்காத்தான் இன்றைக்கும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதுதான் எனக்குள்ள பெருமை. (கைதட்டல்)


நான் ஏழையாகப் பிறக்காமல், பணக்காரனாகப் பிறந்திருந்தால், செல்வச் சீமான் வீட்டுப் பிள்ளையாகப் பிறந்திருந்தால், இப்படியெல்லாம் ஏழைகளைப் பற்றிக் கவலைப்படத் தோன்றியிருக்குமா? அரிசி விலை இந்த அளவிற்குத்தான் இருக்க வேண்டும் என்று கூறியிருக்க முடியுமா? என்றெல்லாம் நான் எண்ணிப் பார்க்கின்றேன்.



ஆகவே, அந்தக் காலத்திலே நான் படம் பார்த்த போது - தரையிலே அமர்ந்து படம் பார்த்த போது, உங்களுக்குச் சொல்லுகிறேன் - தம்பி ரஜினி அவர்களுக்கும் தெரிந்திருக்கும் - சொல்லியிருப்பார்கள் - எனவே சொல்லுகிறேன். இங்கே உள்ள உங்களில் பல பேருக்குத் தெரிந்திருக்காது. தரையில் அமர்ந்து படம் பார்த்தால் முதல் காட்சிக்குத்தான் போக வேண்டும். இரண்டாவது காட்சிக்குப் போக முடியாது. ஏனென்றால், இரண்டாவது காட்சிக்குப் போகும்போது, முதல் காட்சிக்கு வந்தவர்கள் துப்பிய வெற்றிலைப் பாக்கு எச்சில் அங்கே உருண்டை, உருண்டையாகக் கிடக்கும்.

நாம் தப்பித்தவறி கையை வைத்து தடவிப் பார்த்தால், நம்முடைய கையெல்லாம் யாரோ வாயிலே வெற்றிலை போட, நம்முடைய கையெல்லாம் சிவந்திருக்கும்.

எனவே, இரண்டாவது காட்சிக்குப் போகிறவர்கள் ஜாக்கிரதையாகப் போக வேண்டும். அப்படிப் பட்ட தியேட்டர்கள் - மணல் பரப்பி அதிலே அமருகின்ற தியேட்டர்கள் அந்தக் காலத்தில் இருந்தபோதே படம் பார்த்திருக்கிறேன். பேசா படம் பார்த்திருக்கிறேன்.


பேசாப் படத்தில், திரைக்கு முன்னே படம் தெரிந்தால் கூட, நாம் அமர்ந்திருக்கின்ற இடத்திற்குப் பின்னால் ஒருவன் கையிலே மெகாபோனை வைத்துக் கொண்டு, திரையில் என்ன நடக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருப்பான். ‘‘அதோ பார், பீமசேனன் வருகிறான், அதோ பார், பகாசூரன் வருகிறான், பீமசேனன் கீசகனை வதைக்கிறான்’’ என்பதை வர்ணித்துக் கொண்டே ஒருவன் இருப்பான். ‘‘பீமசேனனைப் பார், பகாசூரனைப் பார், பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்’’ - என்று வர்ணிப்பான். படம் பார்க்கின்ற யாருக்கும் ‘‘பல்லுக்குப் பல் இருகாதம்’’

என்கின்றானே, எப்படி அது? காதம் என்றால் பத்து மைல் அல்லவா? இருகாதம் என்கிறபோது இருபது மைல் அல்லவா? பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம் என்றால் முப்பதும் இருபதும் ஐம்பது மைல் அல்லவா? ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் இடையே ஐம்பது மைல் அகலம் என்றால், வாய் எவ்வளவு அகலம் இருந்திருக்கும்? இப்படி ஒருவர் இருந்திருக்க முடியுமா - பகாசூரன் என்று? அன்றைக்கு யாரும் கேட்டதில்லை. இன்றைக்குக் கேட்கிறார்களா என்ன?


ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் என்று சொல்லும்போது, அது எவ்வளவு பெரிய தொகை, அந்த தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா? யாராவது ஒருவர் அதை அபகரித்திருந்தால் இவ்வளவு பெரிய கணக்கை - ஒரு தாளிலே எழுதிக் காட்டினால், அதை எப்படி இன்றைக்கு நம்புகிறோமோ, படித்தவர்கள் நிறைந்த, அறிவு பரவியிருக்கிற, சட்டம் தெரிந்த, நாணயத்தின் மதிப்பை உணர்ந்த இந்தக் காலத்திலே கூட ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் என்றால் அதை நம்புகின்ற நாம் - அன்றைக்கு ‘‘பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்’’ என்று அவனுடைய வாயே முப்பதாயிரம் மைல் என்று பகாசூரனை வதைத்தபோது, அதை ஆனந்தமாகக் கேட்டுக்கொண்டுதான் படத்தைப் பார்த்தோம்.


அப்படிப் படம் பார்த்த ஏமாளிகளிலே ஒருவனாக நான் அன்றைக்கு இருந்தேன். படம் பார்த்தவர்களுடைய ஏமாளித்தனம் அப்படி இருந்தது.


எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு ஒரு மனிதன் அந்தக் காரியத்தைச் செய்கிறான் என்றால், அவன் விஞ்ஞான ரீதியாகத்தான் செய்ய முடியும். எப்படி ‘‘எந்திரன்’’ படத்திலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், ஒரு இரும்பு மனிதனாக - ரோபோவாக வந்து இந்தக் காரியங்களைச் செய்கிறாரோ, அதைப் போல, செய்ய முடியுமே தவிர, தனியாக ஒரு மனிதன் அப்படிச் செய்ய முடியாது என்பதை அறிவுப்பூர்வமாக இன்றைக்கு உணருகிறோம் - அதைக் காட்டுகிறோம். அதை உணருகின்ற நிலை இன்றைக்கு நாட்டிலே வந்திருக்கின்றது.


அப்படிப்பட்ட அந்தக் காலக்கட்டத்திலிருந்து, இன்றைக்கு ரஷ்யாவிலே நடைபெறுகின்ற காட்சிகளை - அமெரிக்காவிலே நடைபெறுகின்ற காட்சிகளை - ஏன், அங்கே எடுத்த அற்புதமான காட்சிகளை இங்கே காணுகிறோம். அதைக் காண வைக்கின்ற டெக்னிசியன்ஸ் இன்றைக்கு இருக்கிறார்கள்.

இயக்குநர்கள் இருக்கிறார்கள். நடிகர்கள் இருக்கிறார்கள். கலைஞர்கள் இருக்கிறார்கள். விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம்.


அப்படி வாழுகின்ற இந்தக் காலத்தில், இந்தப் படம் வெளிவந்திருக்கிறது. வெளிவரப் போகிறது. ‘‘தமிழர் திருநாள் வெளியீடு’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எந்தப் படமும், என்றைக்கு வெளியீடு என்று சென்சார் ஆவதற்கு முன்பு சொல்ல முடியாது. அதனால், ‘‘தமிழர் திருநாள் வெளியீடு’’ என்று குறிப்பிட்டிருந்தாலும்கூட, படம் வெளிவருகின்ற நாள் தமிழனுக்குத் திருநாள் என்ற காரணத்தால், இது தமிழர் திருநாள் வெளியீடு என்று அவர்கள் போட்டிருக்கிறார்கள் என்று கருதுகின்றேன்.


இந்தப் படத்தை இவ்வளவு வெற்றிகரமாக கொண்டு வர முயற்சி செய்த விஜய் அவர்களுக்கும், அதைப் போல இந்தப் படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கும் வாழ்த்துக்கள். சுரேஷ் கிருஷ்ணாவை இந்தப் படத்திற்கு இயக்குநர் என்று சொன்ன போது, நான் அவரைப் பற்றி ரஜினியிடம்தான் கேட்டேன். சுரேஷ் கிருஷ்ணாவை இயக்குநராகப் போட்டிருக்கிறார்களே, அவர் எப்படி? என்று கேட்டேன். அதற்கு ரஜினி, பிரமாதமாகச் செய்வார், அவர்தான் ஏற்கனவே பாட்ஷா, அண்ணாமலை போன்ற படங்களையெல்லாம் எடுத்தவர், நிச்சயமாக வெற்றிகரமாக இந்தப் படத்தை அவர் செய்து கொடுப்பார் என்று சொன்னார்கள். ரஜினியின் வாக்குப் பொய்க்கவில்லை. இல்லையா என்பதை தமிழர் திருநாள் அன்று தெரிந்து கொள்வீர்கள். பொய்க்காது - நிச்சயமாகப் பொய்க்காது. இந்தப் படம் வெற்றிகரமாக நடைபெறும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் நடித்திருக்கின்ற அனைவரும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இங்கே குஷ்பு சுந்தர் பேசும்போது சொன்னார்கள் - முதலமைச்சர் இந்தப் படத்திலே வாய்ப்பு அளித்ததற்காக நன்றி என்று குறிப்பிட்டார்கள். இந்தப் பாத்திரத்தை ஏற்று, குஷ்பு நடிக்க முன்வந்ததற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் குஷ்பு இந்த வேடத்தைத் தாங்க வேண்டும் என்று நான் கருதியதற்குக் காரணமே, ‘‘பெரியார்’’ படத்திலே மணியம்மையார் வேடத்திலே பார்த்து, இதற்கு தகுந்தவர் குஷ்புதான் என்று சொன்னேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு, இந்தப் படத்திலே அவரை நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொன்னதைப் போல, ரஷ்ய நாட்டின் நாவலை முழுமையாகத் தழுவி அல்ல - பின்பற்றி அல்ல - அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்தக் கதையில் வருகின்ற முக்கியமான கட்டங்களையெல்லாம் கொஞ்சமும் விடாமல் இந்தப் படத்திலே இணைத்து வசனம் எழுதியிருக்கின்றேன்.


நான் பல கூட்டங்களில் பேசியிருக்கிறேன். பெரியாரை, அண்ணாவை, என்னுடைய இளமைக் காலத்திலே சந்திக்காமல் இருந்திருந்தால், நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆக இருந்திருப்பேன் என்று சொல்லியிருக்கின்றேன். அதற்கு ஏற்ப, இந்தப் படத்தில் நான் என்ன கருதுகின்றேனோ, அவைகளெல்லாம் உரையாடல்களாக வந்திருக்கின்றது. ஆனால், அரசியல் வாடை வீசக்கூடிய உரையாடல்களாக அல்ல - தொழிலாளர்களுடைய உணர்வுகளை - பாட்டாளி மக்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற - அவர்களுடைய கஷ்டங்களை வெளிப்படுத்துகின்ற, உணர்த்துகின்ற கட்டங்களாக இந்தப் படத்திலே அவைகளையெல்லாம் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.


அப்படிப்பட்ட படத்தை இங்கே உங்களுக்கு இந்த நிறுவனத்தின் சார்பாக நான் வழங்குகிற நேரத்தில், இதை வசூலுக்காக - பணம் சம்பாதிப்பதற்காக ஒருவேளை மார்ட்டினும் பெஞ்சமினும் அப்படிக் கருதியிருந்தாலும்கூட - என்னைப் பொறுத்த வரையில், சம்பாதிப்பதற்காக அல்ல. ஏனென்றால், அவர்கள் கொடுத்த பணத்தை உடனடியாக கட்ட வேண்டிய வருமான வரியைக் கட்டிவிட்டு, மீதியை முழுவதும் நான் நன்கொடையாகவே தந்துவிட்டேன் என்பதையும் நீங்களெல்லாம் நன்றாக அறிவீர்கள். அதை நான் இங்கே சொல்ல வேண்டிய அவசியமில்லை. என்ன செய்வது? காலத்தின் கட்டாயம். இதையெல்லாம் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது. ஆகவே, சொல்லியிருக்கிறேன்.


ரஜினிகாந்த் அவர்கள் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், யாரும் அவரை, அவருக்குக் கொடுத்த பணத்தை யாருக்குக் கொடுத்தார் என்று யாரும் கேட்க மாட்டார்கள். அவர் கொடுப்பார். இரண்டு கைகளுக்கும் இடையே, ஒரு கையால் கொடுத்ததை இன்னொரு கை அறியாமல் அவர் கொடுப்பது எனக்குத் தெரியும்.

என்னைப் பொறுத்த வரையில், ஒரு அரசியல் வாதியாக, ஒரு கட்சித் தலைவனாக இருக்கின்ற காரணத்தால், எனக்கு வருகிற பணம், படத்திலே வருகின்ற பணம் இவைகளெல்லாம் என்னுடைய குடும்பத்திற்கு நேரடியாக தரப்படுகிறது என்ற பொருள் அல்ல. என்னுடைய குடும்பத்தினர் வாழ்வதற்கு இன்று நேற்றல்ல, நான் சேலம் ‘‘மாடர்ன் தியேட்டரில்’’ நம்முடைய வாலி சொன்னதைப்போல, படத்துக்குக் கதை எழுதினேனே, அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரையில் 75 படங்கள் எழுதி, ஒவ்வொரு படத்திற்கும் குறைந்தபட்சம் அந்தக் காலத்திலேயே - பராசக்தி வந்த காலத்திலேயே பத்தாயிரம் ரூபாய் எனக்கு ஊதியம் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு எனக்கும் சிவாஜிக்கும் சேர்ந்தாற்போல ‘‘திரும்பிப்பார்’’ படத்திற்காக அவருக்கு இருபதாயிரம் ரூபாய், எனக்கு இருபதாயிரம் ரூபாய் - என்ன வேடிக்கை பாருங்கள். நடிகர் திலகம் சிவாஜிக்கு இருபதாயிரம் ரூபாய் - எனக்கு இருபதாயிரம் ரூபாய் அந்தக் காலத்திலே கொடுத்தார்கள். அந்த இருபதாயிரம் ரூபாயைக் கொண்டுபோய் சூரக்கோட்டையிலே அவர் நிலம் வாங்கினார் - நான் காட்டூரிலே நிலம் வாங்கினேன். அந்த நிலங்கள் அப்படியே இருக்கின்றன. அதைப் பார்க்கின்ற பொழுது இப்போதும் எனக்கு சிவாஜியின் ஞாபகம் வரும்.


தம்பி விஜய்யைப் பொருத்த வரையில் இது அவருக்குப் பெயரும் புகழும், நடிகர் திலகம் சிவாஜியைப் போல, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரைப் போல பெயரும் புகழும் அவருக்குத் தரும்’’என்று பேசினார்.

Saturday, December 4, 2010

தமிழர்கள் ஆவேசம் மிரண்ட ராஜபக்ஷே


மூன்று நாள் பயணமாக லண்டன் சென்ற மகிந்த ராஜபக்சேவுக்கு பதட்டமும் நடுக்கமும் இன்னமும் குறையவில்லை. தமிழர்களின் ’வரவேற்பை’ கண்டு உள்ளுக்குள் ஒருவித படபடப்புடனேயே இருக்கிறார்.

லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக மாணவர்களோடு உரையாற்றுவதற்காக 29-ந் தேதி மாலை இலங்கையிலிருந்து விசேஷ விமானத்தில் லண்டன் புறப்பட்டார் ராஜபக்சே. இவரது வருகையை அறிந்த புலம் பெயர்ந்த தமிழர்கள் ஆயிரத்திற்கும் அதிகமானோர் நள்ளிரவிலும் லண்டன் ஹீத்துரு விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்.

நள்ளிரவில் ராஜபக்சே வந்திறங்கியதை அறிந்ததும் கோபத்தின் உச்சிக்கே சென்ற தமிழர்கள், "போர்க்குற்றவாளி மகிந்தாவே திரும்பிப்போ... இனப்படுகொலை அரக்கனே உள்ளே வராதே... மகிந்த நீ ஒரு போர்க்குற்றவாளி.... போர்க் குற்றவாளியை கைது செய்.... பயங்கரவாதி மகிந்தாவை கைது செய்..'’என்றெல்லாம் விண்ணதிர முழக்கங்களை எழுப்பினர். அதனால் பிரதான வழியில் ராஜபக்சே வரா மல், மற்றொரு பிரதான வழியில் அவரை கொண்டு செல்ல விமானநிலைய அதிகாரிகள் முயற்சித்தபோது அந்த வழியையும் தமிழர்கள் முற்றுகை யிட்டிருந்தனர். இதனால் எவ்வழியி லும் செல்ல முடியாமல் விமான நிலையத்திற்குள்ளே 2 மணி நேரம் அங்குமிங்கும் காத்திருக்க வேண்டி யதாக இருந்தது.

தன்னை வரவேற்க வந்த லண்டனில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி அம்சா உள்ளிட்ட அதிகாரி களை கடுமையாக திட்டிய மகிந்தா,’’"இவர்கள் கூடுவது உங்க ளுக்கு எப்படி தெரியாமல் போனது? என்ன உளவு பார்க்கிறீர்கள் இங்கு?'’என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார். உடனே அம்சா உள்ளிட்ட அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகளிடம் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் கொடியை ஏந்திக்கொண்டு வந்தவர்களை எப்படி அனுமதிக்கலாம் என்று கேட்க... அதற்கு அவர்களோ "அவர் களை தடுக்க வேண்டி எங்களுக்கு எந்த அறிவுறுத்தல்களும் இல்லை'’’என்று பதில் தந்துள்ளனர்.

அதன்பிறகு விமான நிலையத்தின் சாதாரண ஒரு சிறிய வழியில் ராஜபக்சேவை அழைத்துச் சென்று ஹோட்டலில் இறக்கிவிட்டனர் அதிகாரிகள் என்கிறார்கள் லண்டன் தமிழர் பேரவையினர்.

ராஜபக்சேவின் இந்த வருகை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முழுவதும் எதிரொலிக்க, பிரிட்டனின் பல்வேறு நகரங்களில் இருந்தும் தமிழர்கள் லண்டனுக்கு விரைந்தனர். ராஜபக்சே கலந்துகொள்ளும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தையும் ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டு, "போர்க்குற்றவாளியை கைது செய்'’ என்கிற முழக்கங்கள் ஏகத்துக்கும் எதிரொலித்தன. பயந்து போன ராஜபக்சே கூட்டத்தையே ரத்து செய்துவிட்டார்.


இதற்கிடையே ராஜபக்சேவின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் முகமாக, தமிழ் பெண்களை ராணுவத்தினர் கொடூரமாகக் கற்பழித்து படுகொலை செய்துள்ள வீடியோ காட்சிகளை "சேனல்-4' தொலைக்காட்சி வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இளகிய மனம் படைத்த யாரும் இந்த காட்சிகளைப் பார்க்க முடியாது. அந்தளவுக்கு கொடூரமாக இருக்கிறது. கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்களில், புலிகளின் ஊடகப் பிரிவில் பணிபுரிந்த இசைப்பிரியாவும் ஒருவர். (இவரைப் பற்றி நக்கீரனில் அட்டைப்பட செய்தியாக ஏற்கனவே எழுதியிருக்கிறோம்). இளம்பெண்களை கொடூரமாகக் கற்பழித்தபோது அவர்கள் கதறிய கதறல்களை ரவிமரியா தலைமையிலான ராணுவத்தினர் செல்ஃபோனில் பதிவு செய்து ரசித்துள்ளனர். இந்தக் காட்சிகள் தற்போது, சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் ராஜபக்சேவை கிலி பிடிக்க வைத்துள்ளது. காரணம், மைனஸ் 8 டிகிரி குளிரில் ஒன்றரை அடி பனியில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் ராஜபக்சே தங்கியுள்ள ஹோட்டலை முற்றுகையிட்டுள்ளனர். கைதி போல் வெளியே வராமல் கிடக்கிறார் ராஜபக்சே. வந்திருக்கும் ராஜபக்சே கும்பல் மீது, தமிழர்கள் 3,000-க்கும் மேற்பட்ட கிரிமினல் புகார்களை லண்டன் போலீஸில் பதிவு செய்து அதன் நகல்களை பெற்றுள்ளனர். புகாரை ராணிக்கு அனுப்பி ராஜபக்சேவையோ அவர் உடன் வந்திருக்கும் அதிகாரிகளில் ஒருவரையோ போர்க் குற்றத்துக்காக கைது செய்யச் சொல்லி கேட்டு வருகின்றனர்.

தமிழர் மக்கள் பேரவையின் நிர்வாகிகளிடம் பேசியபோது, ""கடந்த அக்டோபரிலேயே மகிந்தா லண்டனுக்கு வரவேண்டியவர். ஆனால் தான் கைது செய்யப்படுவோம் என்கிற பயத்தால் அப்போது பயணத்தை தவிர்த்துவிட்டார். தற்போது அவர் பயண ஏற்பாடுகளை துவங்குவதற்கு முன்பு இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் "மாட்சிமைதாங்கிய மகாராணிக்கு... தங்கள் நாடான பிரிட்டன் அறிமுகப்படுத்திய பாராளுமன்ற முறைகளின்படி நானும் எனது நாட்டில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை பலத்தில் ஜெயித்திருக்கிறேன். உங்கள் நாட்டின் மீது ஏக விசுவாசம் கொண்டவன் நான். அந்த வகையில் நான் பிரிட்டனில் இருக்கும் காலப்பகுதியில் எந்த சட்ட சிக்கலும் எனக்கு ஏற்படாத வண்ணம் மாட்சிமைத் தாங்கிய மகாராணியின் கருணையை எதிர்பார்க்கிறேன்'’என்று குறிப்பிட்டு நிறைய கெஞ்சல்களுடன் எழுதியிருக்கிறார். அந்த கெஞ்சல்களுக்கு ’மதிப்பளித்து’ ராணி தரப்பிலிருந்து கைது செய்ய மாட் டோம் என்கிற வகையில் ஏதோ ஒரு உத்தரவாதம் தரப் பட்டிருக்கிறது. அந்த தைரியத்தில்தான் இலங்கையிலிருந்து விமானம் ஏறினார் ராஜபக்சே''’ என்கின்றனர்.

லண்டன் இளையோர் பேரவையினர்,’’""போர் நெறிகளையும் சர்வதேச சட்டங்களையும் துச்சமென நினைத்து 1 லட்சத்து 20 ஆயிரம் தமிழர்களை படுகொலை செய்து.. இந்த நூற்றாண்டின் உலக மனிதநேயத்தையே குருடாக்கிய ராஜபக்சே, தற்போது தப்பித்திருக்கலாம். இன்றைக்கு லண்டனில் ஏற்பட்ட தமிழர்களின் கோபம்... இனி ஆவேசமாகவே எதிரொலிக்கப்போகிறது. அந்த ஆவேசத்தின் முடிவு... ராஜபக்சேவுக்கு கிடைக்கப் போவது கொடுமையான தண்டனைதான்''’’ என்றனர் ஆவேசமாக.

-இளையசெல்வன்
நக்கீரன் 04-12-2010

ஜெ.தொகுதி அதிருப்தி

பண்டாரஊத்தில் வசித்த 300 குடும்பங்களில் 250 குடும்பங்கள் புலம்பெயர்ந்து வருச நாடு, ஆண்டிப்பட்டி, தேனி, கூடலூர் என போய்விட்டார்கள்.

புலம்பெயர்ந்த குடும்பங்களும், மூட்டை முடிச்சுகளை எப்போது கட்டலாம் என்று திணறிக்கொண்டிருக்கும் குடும்பங்களும், எம்.ஜி.ஆர். மீதும் இரட் டை இலை மீதும் மட்டில்லா பாசம் கொண்டி ருப்பவர்கள்.

""நாங்க எல்லாருமே அந்தக் காலத்துல கூடலூர்லதான் இருந்தோம். இந்தி எதிர்ப்புப் போராட்டம் வந்துச்சே... அப்ப போலீஸ் காரங்க செஞ்ச டார்ச்சர் தாங்கமுடியாமத் தான் குழந்தை குட்டி சட்டி முட்டிகளை அள்ளிக்கிட்டு மேற்குத் தொடர்ச்சி மலை வழியா வந்து இந்த வருச நாட்டு பண்டார ஊத்துல தங்கினோம். நிலம் கரைகளை கிரயம் வாங்கி கொட்ட முந்திரி, இலவம் பஞ்சுன்னு விவசாயம் செஞ்சோம். எம்.ஜி.ஆர்.னா எங்களுக்கெல்லாம் உசுரு. அவருக்குப் பொறகு ஜெயலலிதாவுக் குத்தான் ஓட்டுப் போட்டோம். ஆனால் கடைசி வரைக்கும் எங்களைப் பற்றி அந்த அம்மாவும் சரி, அவுங்க ஆளுங் களும் சரி, கவலைப்படவும் இல்லை. காது கொடுத்துக் கேட்கவும் இல்லை'' என்கிறார்கள் எஞ்சி நிற்கும் குடும் பத்தினர்.

""எதற்காக 250 குடும்பங்கள் புலம்பெயர்ந்தன?''

""எதற்கெடுத்தாலும் வருசநாட்டுக் குத்தான் போகணும்... கடை, ஆஸ்பத்திரி, ஸ்கூல் எல்லாத்துக்கும் அங்கேதான் போகணும். வருசநாடு இங்கே இருந்து 3 கிலோமீட்டர், நடந்துதான் போக ணும். நடக்க முடியாத அளவுக்கு முடியா மக் கிடக்கிறவங்களை, புள்ளைத்தாச்சி யளை கயித்துக் கட்டில்ல போட்டுத்தான் தூக்கிட்டுப் போகணும். அய்யா நாங் களும் போகணுமானு கலெக்டர்ட்ட கேட் டோம். அப்புறம்தான் கலெக்டர் முத்து வீரன் 100 நாள் திட்டத்துல மண் ரோடு போட்டுக் கொடுத்திருக்கிறார்'' இது இப் பகுதியில் வாழும் மாயியின் வாக்குமூலம்.

""கோயில் இல்லாத ஊர்ல குடி யிருக்கலாமா? இதுநாள்வரை கோயில் இல்லாமத்தான் இருந்தோம். ஜெயலலிதாவோட ஆண்டிப்பட்டி தொகுதின்னு பேருதான், அடிப்படை வசதி அறவே இல்லை. இப்படித்தான் மந்திரி ஐ.பெரிய சாமி உதவியோடு ஒரு கோயிலைக் கட்டினார் எங்கஊர் ராஜா என்பவர். குடமுழுக்குக்கு வந்த மந்திரி... சீக்கிரம் மண்ரோட்டை தார் ரோடா மாத்திடலாம்னு சொல்லிட்டுப் போனாரு'' இது பண்டார ஊத்து ராதா சொன்னது.

சிங்கராஜபுரத்தைச் சேர்ந்த பெத்தணன் நம் மிடம், ""டி.டி.வி. தினகரன் இருந்தப்ப ஆண்டிப் பட்டி தொகுதியில பல ஊர்களுக்கு ரோடு போட்டார். பாலங்களாக கட்டினார். இப்ப அ.தி.மு.க. பொறுப்பாளரான மா.செ. தங்க தமிழ்ச்செல்வன் இந்தப்பக்கம் வருவதில்லை. பாருங்க... ராயக்கோட்டைல இருந்து முருக்கோடைக்கு மூலவகை ஆத்துல இடுப் பளவு தண்ணீல நீந்தித்தான் எல்லாரும் போறம். அம்மா அம்மா தொகுதின்னு சும்மா சொல்லிக்கிட் டே இருந்தா போதுமா? கொஞ்சமாச்சும் வசதி செஞ்சுத் தரவேணாமா? ரொம்ப அவதிப்படுறமுங்க'' என்றார்.

ஜெ. கோட்டைக்குள் ஓட்டை விழுந்துகொண்டி ருக்கிறது. தொகுதி ர.ர.க்களும் கவலைப்பட ஆரம்பித்து விட்டார்கள்.

-சக்தி
நக்கீரன் 04-12-2010

Wednesday, December 1, 2010

முதல்வர் கருணாநிதியின் சொத்துக்கணக்கு (முழுமை)

முதலமைச்சர் கருணாநிதி தனது சொத்துக்கணக்கை வெளியிட்டார். கோபாலபுரம் வீட்டைத் தவிர எந்த சொத்தும் வாங்கவில்லை என்று அவர் கூறி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அம்மையார் ஜெயலலிதா தொடங்கி, அந்தக் கட்சியிலே உள்ள அடிமட்டத் தொண்டர்கள் வரையிலும் - ஏன், தமிழகத்திலே உள்ள வேறுசில கட்சிகளின் நண்பர்கள் ஒரு சிலரும் - என்னைப் பற்றி குறிப்பிடும் போது - நான் ஏதோ "சல்லிக்காசு'' கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும் - இன்றைக்கு ஆசியாவிலேயே முதலாவது பணக்காரனாக இருப்பதாகவும் - என் பெயரில் ஏராளமான சொத்துக்களையும், எஸ்டேட்டுகளையும் வாங்கிக் குவித்திருப்பதைப் போலவும் பேசி வருகிறார்கள், எழுதி வருகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் - என்னுடைய சொத்துகள் என்ன என்பதைப் பற்றி குறை கூறுபவர்களுக்கும் - அதை நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு விளக்கம் அளிக்க வேண்டியது என்னுடைய கடமை என்று கருதுகிறேன்.

என்னதான் அவர்கள் என் குடும்பத்தைப் பற்றி குறைவாக எழுதினாலும், நான் சிசு பருவத்திலே இருந்த போதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவிற்கும் - உயர்நிலைப் பள்ளியில் படிக்கவே திருவாரூரில் கொண்டு போய் சேர்க்கக் கூடிய அளவிற்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம் தான் என்னுடையது.

மந்திரிகுமாரி நாடகம்

எனக்கு 18 வயதாகும் போது "முரசொலி'' வாரப்பத்திரிகையைத் தொடங்கி விட்டேன். அப்போதே நாடகங்களை எழுதுகின்ற முயற்சியிலும் ஈடுபட்டேன். திராவிடர் கழகப் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்துகொண்டேன். 1949-ம் ஆண்டு சேலம் மாடர்ன் தியேட்டர்சில் எழுத்தாளராக பணியிலே அமர்ந்தேன்.
அந்தக் காலத்திலேயே அதற்காக மாத ஊதியமாக 500 ரூபாய் பெற்றேன். அதே ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதியன்று ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையிலே தி.மு.கழகம் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டபோது, அந்தக் கூட்டத்திலே கலந்துகொண்டேன்.

அந்தக் கூட்டத்திற்கு வந்த போது விருதுநகர் நாடார் லாட்ஜில் தான் தங்கினேன். என்னுடைய "மந்திரி குமாரி'' நாடகம் சேலம் மாடர்ன் தியேட்டர்சாரால் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது எங்கள் குடும்ப வாழ்க்கை சேலத்தில் தொடங்கியது. அப்போது சேலம் வந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், என்னைச் சந்தித்து அவருடைய "மணமகள்'' திரைப்படத்திற்கு நான் தான் திரைக்கதை வசனம் எழுத வேண்டு மென்று கேட்டு ஒப்புதல் அளித்தேன். அந்தக் காலத்திலேயே அதற்காக 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாகப் பெற்றேன்.

கலைவாணர் பந்தயம்

அதுபோலவே "இருவர் உள்ளம்'' திரைப்படத்திற்காக உரையாடலை நான் எழுதிய போது, அந்தப் படம் நூறு நாளைத் தாண்டி ஓடிய காரணத்தால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர், அருமை நண்பர் எல்.வி.பிரசாத் என் இல்லத்திற்கே வந்து முதலில் கொடுத்த பத்தாயிரம் ரூபாயைத் தவிர்த்து, மேலும் பத்தாயிரம் ரூபாயை என்னிடம் அளித்தார்.

நான் அந்தத் தொகையைக் கொண்டு என்னுடைய சொந்த ஊரான திருக்குவளையில் என் பெற்றோர் பெயரால் ஒரு தாய் சேய் நல விடுதியினைக் கட்டி, அதை அன்றைய முதல்-அமைச்சர் பெரியவர் பக்தவத்சலனாரை அழைத்துச் சென்று 12-11-1964-ல் திறந்து வைத்தேன். அண்ணாவால் அடிக்கல் நாட்டப்பட்ட அந்தக் கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு நாவலர் தலைமை தாங்கினார்.

அப்போது நான் எதிர்க்கட்சியிலே இருந்தபோதிலும், முதல்-அமைச்சரை அழைத்துச்சென்று அந்த நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்தினேன்.
அந்தக் கால கட்டத்தில் சென்னைக்கே நான் குடிபெயர்ந்து தியாகராயநகரில் ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தினேன். அப்போது ஒரு நாள் கலைவாணர் என்னிடம் ஒரு பந்தயம் கட்டி, அதிலே ரூ.5 ஆயிரம் எனக்கு லாபம் கிடைத்தது.
அது கண்டு வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்த கலைவாணர் அதற்குமேல் தேவையான பணத்தைத் தானே போட்டு எனக்கு ஒரு கார் வாங்கித் தருவதாகச் சொல்லி விட்டுச் சென்றார்.
மறுநாளே ஒரு புதிய கார் என் வீட்டிற்கு வந்தது. அதிலே என்னை உட்கார வைத்து, கலைவாணரே ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றார். அந்தக் காரின் எண் கூட எனக்கு நினைவிலே உள்ளது - "வாக்சால்'' -4983.

இவைகளைத் தொடர்ந்து இன்று வரை 75 படங்களுக்கு மேல் நான் திரைக்கதை வசனம் எழுதி ஊதியம் பெற்றுள்ளேன். 1957-ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் நின்று சட்டப் பேரவை உறுப்பினராக ஆனது முதல் இதுவரை தொடர்ந்து பேரவை உறுப்பினராகவோ, மேலவை உறுப்பினராகவோ இருந்து வருகிறேன்.
முரசொலி நாளிதழும் எத்தனையோ ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிழமை இதழ்களாக குங்குமம், முத்தாரம், வண்ணத் திரை போன்றவைகளும், "ரைசிங் சன்'' ஆங்கில இதழும் நான் தொடங்கியவைதான்.

1967 முதல் 1969 வரை பொதுப்பணித்துறை அமைச்சராகவும், அதன் பின்னர் ஐந்து முறை முதல்-அமைச்சராகவும் இருந்திருக்கிறேன். இந்தியாவிலே உள்ள அனைத்து மாநில முதல்-அமைச்சர்களையும் எடுத்துக்கொண்டால் எல்லா முதல்-அமைச்சர்களுடைய வீடுகளையும் விட வசதி குறைவான எளிமையான வீட்டிலேதான் நான் வாழ்ந்து வருகிறேன் என்பதை வெளிநாட்டிலிருந்து வந்த முக்கிய பிரமுகர்களே நேரில் கண்டு வியப்பு தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்களைச் சந்திக்கக் கூட இடம் இல்லாத அளவிற்கு அவர்களே மிகுந்த சிரமத்திற்கு ஆளாகக்கூடிய வகையிலே உள்ள வீட்டிலேதான் இன்றளவும் வாழ்ந்து வருகிறேன். ஒவ்வொரு முறை முதல்-அமைச்சராக நான் தேர்ந்தெடுக்கப்படும் போதும் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவியேற்போர் - தம்பி துரைமுருகன் போன்றவர்கள் - அரசு சார்பில் உள்ள வீடுகள் ஒன்றில் நான் தங்க வேண்டுமென்று கேட்டு அழைத்துச் சென்றும் காட்டியிருக்கிறார்கள். எனினும் நான் தங்கி வந்த அதே "ஸ்ட்ரீட் வீடு'' என்பார்களே, அதாவது தெருவில் வரிசையாக உள்ள வீடுகளில் உள்ள ஒரு வீட்டிலேதான் வசித்து வருகிறேன்.

45 ஆயிரம் ரூபாய்க்கு வீடு

இந்த வீடு கூட நான் அமைச்சராக ஆவதற்கு முன்பு 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய வீடுதான். அந்த வீட்டிலே ஒரு சில மாற்றங்கள் உதவியாளர்களின் வசதிக்காக செய்யப்பட்டிருக்கலாம். என் பிள்ளைகள் எல்லாம் கூட திருமணம் ஆகும் வரைதான் இந்த வீட்டிலே இருந்தார்கள். அதற்குப் பிறகு இந்த வீட்டிலே இடம் இல்லாமல் அவர்களே சொந்தத்தில் வீடு வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

என்னிடம் செய்திகளைச் சேகரிக்க வரும் பத்திரிகையாளர்கள் இந்த வீட்டிலே என்னைச் சந்திக்கும் போது எவ்வளவு இன்னலுக்கு நெரிசல் காரணமாக ஆளாகிறார்கள் என்பதை அவர்களே நன்கறிவார்கள். ஆனால் அந்தப் பத்திரிகையாளர்கள் கூட நான் இத்தனை ஆண்டுக் காலம் இத்தனைப் பொறுப்புகளிலே இருந்தும் கூட, இவ்வளவு எளிமையாக இதே வீட்டில் வாழ்கிறேன் என்பதைப் பற்றி அவர்களே அதை உணர்ந்திருந்த நிலையிலும் அதைப் பற்றி எழுதாமல், அதிலேயும் ஒரு சிலர் - என்னைப் பற்றி அவதூறாக நான் பணக்காரன் என்று எதிர்தரப்பினர் விமர்சனம் செய்வதை எழுதும்போது - அவர்கள் கூட அதை நம்புகிறார்களா என்ற வேதனை என் மனதிலே தோன்றாமல் இருப்பதில்லை.

நான் இத்தனை பொறுப்புகளையும் என்னுடைய 87 வயதிற்குள் பார்த்திருக்கிறேன் என்ற போதிலும் சென்னையில் உள்ள இந்த ஒரு வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்டுகளையோ விலைக்கு வாங்கியதும் இல்லை. அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதும் இல்லை. குறைந்த விலைக்கு பெற்றுக்கொண்டதும் இல்லை. ஆனால் என்னை ஆசியாவிலேயே பெரிய கோடீஸ்வரன் என்றெல்லாம் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.

ரூ.10 கோடி கிடைத்தது

முரசொலி மாறன் மறைவுக்கு பின்னர் சன் தொலைக்காட்சி நிறுவனத்தை தனியாக நடந்த விரும்பி கேட்டதால் நானும் அதற்கு உடனடியாக ஒப்புகொண்டேன். அப்படி பிரிந்து சென்ற நேரத்தில் 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம், "சன்'' தொலைக் காட்சி நிறுவனத்தின் சார்பில் எனக்கு 100 கோடி ரூபாய் கொடுத்தார்கள். அந்தத் தொகைக்கான வருமான வரியாக 22 கோடியே 50 லட்சம் ரூபாய் உரிய காலத்தில் முறைப்படி என்னால் செலுத்தப்பட்டுள்ளது.
எஞ்சிய தொகையான 77 கோடியே 50 லட்ச ரூபாயை என்னுடைய மகன்களுக்கும், மகள்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தேன். அதிலே எனக்கும் ஒரு பங்காக பத்து கோடி ரூபாய் கிடைத்ததில், ஐந்து கோடி ரூபாயை வங்கியிலே இருப்பு செய்து, அந்தத் தொகையைக் கொண்டு "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை'' ஒன்று தொடங்கப்பட்டு, அதிலே கிடைக்கின்ற வட்டித் தொகையிலே இருந்து ஏழை-எளியோர்க்கு மருத்துவ உதவியாகவும், கல்வி வளர்ச்சி உதவியாகவும் 8.12.2005 முதல் 8.11.2010 வரை 2,145 பேர்களுக்கு 1 கோடியே 72 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறேன்.

புத்தக கண்காட்சி

வங்கியில் இருப்பு செய்யப்பட்ட இந்த ஐந்து கோடி ரூபாயில் -ஆண்டுதோறும் நல்ல புத்தகங்களை, சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகள் தாங்கிய புத்தகங்களை, எதிர்கால இளைஞர்களுக்கு ஆக்கபூர்வமாக வழிகாட்டுகின்ற அறிவார்ந்த புத்தகங்களை எழுதும் சிறந்த எழுத்தாளர்கள் ஐந்து பேரைத் தேர்வு செய்து, அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் - பொற்கிழியாக வழங்கிட தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினேன்.

அந்த ஒரு கோடி ரூபாய் நிதியைக் கொண்டு, அந்தச் சங்கம் "கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை'' என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் இருந்து, 2008-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அந்தச் சங்கத்தின் மூலமே சிறந்த எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு 2008, 2009, 2010 ஆகிய மூன்றாண்டுகளில் மொத்தம் இது வரை 17 அறிஞர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழிகள் வழங்கப்பட்டுள்ளன.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத் தொடக்க விழா 30.6.2008 அன்று நடை பெற்ற போது ஆண்டுதோறும் செம்மொழித் தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் அறிஞருக்கு 10 லட்ச ரூபாய் பொற்கிழி விருது வழங்கிட ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என நான் அறிவித்து, அதன்படி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் "கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை'' தொடங்கிட 21.7.2008 அன்று ஒரு கோடி ரூபாய் வழங்கினேன்.

கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா அவர்களுக்கு இந்த அறக்கட்டளையின் முதல் விருதாக பத்து லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

2004-2005-ம் ஆண்டில் "மண்ணின் மைந்தன்'' படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 11 லட்சம் ரூபாய் - "கண்ணம்மா'' படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 10 லட்சம் ரூபாய் இரண்டையும் சேர்த்து 21 லட்சம் ரூபாயை "சுனாமி நிவாரண நிதி''யாக அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம், மு.க.ஸ்டாலின் வாயிலாக நேரில் வழங்கப்பட்டது.

உளியின் ஓசை படம்

2008-ம் ஆண்டு, "உளியின் ஓசை'' திரைப்படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் 25 லட்சம் ரூபாயில் வருமானவரி போக, 18 லட்சம் ரூபாய் திரைத்துறையிலே பணியாற்றிய நலிந்த கலைஞர்களுக்கு 9.7.2008 அன்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர், ராம.நாராயணன் முன்னின்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் என்னால் நேரடியாக வழங்கப்பட்டது.

2009-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட "பெண் சிங்கம்'' திரைப்படத்திற்காகக் கிடைத்த 50 லட்சம் ரூபாயுடன், சொந்த நிதி 11 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து - 14-9-2009 அன்று தமிழக அரசின் முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலே சேர்த்து, தமிழகத்திலே உள்ள அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்வி பயிலும் 56 மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 1,165 மாணவர்கள் என மொத்தம் 1,221 மாணவ -மாணவியருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் 61 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கல்வி வளர்ச்சி நிதியாக 26.10.2009 அன்று துÖய்மைப் பணிபுரிவோர் நலவாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டது.

மேலும், தற்போது தயாரிக்கப்பட்டுவரும் "இளைஞன்'' திரைப்படத்திற்குரிய கதை வசனம் எழுதியமைக்கு 24.4.2010 அன்று வருமானவரி போக அளிக்கப்பட்ட 45 லட்சம் ரூபாய் ஊதியத்தைத் தமிழக அரசின் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலே ஒப்படைத்து, அந்தத் தொகையினை - தமிழகத்திலே உள்ள மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காகச் செலவிட வழங்கப்பட்டது.

ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி

23.7.2009 அன்று நடைபெற்ற கலைஞர் காப்பீட்டுத் திட்டத் தொடக்க விழாவில் உரையாற்றிய பொழுது சென்னை கோபாலபுரத்தில் நான் வசித்து வருகின்ற வீட்டை, பிற்காலத்தில் ஏழை-எளியோர்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் மருத்துவமனையாக மாற்றிட நன்கொடையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன்படி உரிய பத்திரப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

14.4.2010 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக சென்னை மறைமலைநகரில் நடைபெற்ற அம்பேத்கார் பிறந்தநாள் விழாவில் "அம்பேத்கார் சுடர்'' எனும் விருது எனக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் தரப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் பொற்கிழியினை 15.4.2010 அன்று முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதியில் சேர்க்க என்னால் வழங்கப்பட்டது.

25.5.1990 அன்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பாக - "தென்பாண்டிச் சிங்கம்'' என்ற பெயரில் நான் எழுதிய நாவல் சிறந்த புதினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்காக "ராஜராஜன் விருது''ம், அந்த விருதுக்குரிய ஒரு லட்ச ரூபாய் பொற்கிழியும் எனக்கு அன்றைய குடியரசுத் துணைத் தலை வராக இருந்த சங்கர் தயாள் சர்மா ஆளுநராக அப்போதும் இருந்த பர்னாலா முன்னிலையில் வழங்கப்பட்ட போது, அந்த நிதியை அந்தப்பல்கலைக் கழகத்திடமே திரும்பக் கொடுத்து, அந்தத் தொகைக்குரிய வட்டியினைக் கொண்டு ஆண்டு தோறும் என் பெற்றோர் பெயரால் அறக்கட்டளை சொற்பொழிவுகளை நடத்துமாறு கேட்டுக்கொண்டேன். இந்த ஆண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அந்தச் சொற்பொழிவுகள் நடைபெற்றன.

பிறந்தநாள் விழா

என்னுடைய பிறந்த நாளன்று மாலைக்குப் பதிலாகவும், பொன்னாடைக்குப் பதிலாகவும் கழகத் தோழர்கள் அளித்த நிதியையும் கூட முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலே தான் சேர்த்திருக்கிறேன். 3.6.1986 அன்று என்னுடைய பிறந்த நாள் விழாவின்போது உண்டியலில் குவிந்த 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை இலங்கை விடுதலைப் போராளிகள் இயக்கங்களுக்கு பகிர்ந்தளிப்பது என்று கழகப் பொதுக் குழுவிலேயே முடிவெடுத்து அவ்வாறே வழங்கப்பட்டது. அதைப் போலவே என்னுடைய வேறு சில பிறந்த நாள்களில் உண்டியலில் குவிந்த நிதிகளிலிருந்து மறைமலை நகரில் (காட்டாங்குளத்தூர்) உள்ள சிவானந்த குருகுலத்தில் பயிலும் சிறுவர்களின் கல்வி செலவுகளுக்காக 13.6.1988-ல் 50 ஆயிரம் ரூபாயும், 7.6.1993-ல் 70 ஆயிரம் ரூபாயும், 6.6.1996-ல் ஐந்து லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டன. மேலும் 1994-ம் ஆண்டு பிறந்த நாளில் அளிக்கப்பட்ட நிதி பெங்களூரில் உள்ள தமிழ்ச் சங்கத்திற்கு என்னால் வழங்கப்பட்டது.

நான் கலந்து கொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகளில் எனக்கு பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்குவதுண்டு. அவற்றைக்கூட அரசு விழாக்களில் அவைகள் வழங்கப்பட்டால், அவற்றை தலைமைச் செயலகத்திலும், கட்சி நிகழ்ச்சிகளிலே வழங்கப்பட்டவை என்றால் அவற்றை கழகத் தலைமைக் கழகம், அண்ணா அறிவாலயத்திலே உள்ள கருவூலத்திலும் ஒப்படைத்திருக்கின்றேன். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, தங்க நாணயங்கள் கோர்க்கப்பட்ட மாலைகள், வெள்ளியிலான பல்வேறு பொருள்கள் எல்லாம் இப்போதும் அண்ணா அறிவாலயத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருப்பதை யார் வேண்டுமானாலும் சென்று காணலாம்.

எந்த சொத்தும் வாங்கவில்லை

இறுதியாக தற்போது என் கணக்கிலே எவ்வளவு இருப்பு உள்ளது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகிறேன். `சன்' தொலைக்காட்சி வாயிலாக எனக்குக் கிடைத்த பத்து கோடி ரூபாயில் "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை''க்காக ஐந்து கோடி ரூபாய் கொடுத்ததைப் பற்றி நான் முதலில் குறிப்பிட்டிருப்பதைப்போல கொடுத்ததை அன்னியில் - எஞ்சிய 5 கோடி ரூபாயை வைப்பு நிதியாக வங்கியிலே செலுத்தி, அதற்காக கிடைத்த வட்டித்தொகையெல்லாம் சேர்ந்து -தற்போது வைப்பு நிதியாக 5 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134 ரூபாயும் - சேமிப்புக்கணக்கில் (எஸ்.பி. அக்கவுண்ட்) 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 ரூபாயும் இன்றைய தேதியில் உள்ளது.

நான் வசிக்கின்ற இந்த வீட்டைக் கூட மருத்துவமனை அமைப்பதற்காக எழுதிக் கொடுக்க நான் அறிவித்த போது - நான் வாழ்ந்த இல்லம் என்பதற்காக இதை வைத்துக் கொள்ள வேண்டுமென்று வீட்டார் எண்ணிய போதும், நான் அழைத்து அவர்களை கையெழுத்திட்டுத் தருமாறு கேட்டபோது மறுவார்த்தை பேசாமல் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டார்கள். இந்த ஒரு வீட்டைத் தவிர என் பெயரில் நான் எந்தச் சொத்தையும் வாங்கிடவில்லை, சேர்த்திடவில்லை.

அதிக ஊதியம் பெற்றவன்

தமிழ்த் திரைப்பட உலகத்திலே திரைக்கதை வசனம் எழுதுவதற்காக முதன் முதலில் அதிக ஊதியம் பெற்றவன்; தி.மு. கழகத்திலே சென்னையில் முதன் முதலில் சொந்தமாக ஒரு வீடும், காரும் - நான் எந்தப் பதவி பொறுப்புக்கும் வராத போதே வாங்கியவன் என்ற பெயர் எனக்கு உண்டு என்பதை அனைவரும் அறிவர்.

இதுதான் என்னுடைய சொத்துக் கணக்கு. இதை வைத்துத்தான் நான் ஆசியாவிலேயே முதல் கோடீஸ்வரன் என்கிறார்கள். லஞ்சம், ஊழல் ஆகியவைகளைப் பொறுத்து என் உதவியாளர்கள் கூறுவது போல நான் ஒரு "நெருப்பு'' மாதிரி! நான் முதன் முறையாக முதல்-அமைச்சராக இருந்தபோதே தஞ்சையில் கூட்டுறவு நிறுவனம் ஒன்றில் எனக்கு மிகவும் வேண்டிய உயிர் நண்பர் வழக்கறிஞர் தவறு செய்த போது, அவர் மீது நடவடிக்கை எடுத்து, அதன் காரணமாக அவர் தனது வழக்கறிஞர் பணியினையே செய்ய முடியாத அளவிற்கு ஆயிற்று! அது போலவே தான் சென்னை மாநகராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பிலே இருந்தபோது, "மஸ்டர் ரோல்'' ஊழல் நடைபெற்றதாக பேரவையிலே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபோது, சட்டப்பேரவையிலேயே எழுந்து அந்த மாநகராட்சி மன்றம் கலைக்கப்படும் என்றும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து அவ்வாறே செயல்முறை படுத்தியவன்தான் நான்.

இன்னும் சொல்லவேண்டுமேயானால் எனக்கு மிகவும் வேண்டிய நண்பர்களில் ஒருவர் கவிஞர் கருணானந்தம். அவருடைய ஒரே மகன் குலோத்துங்கனுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர ஒரு மதிப்பெண் குறைந்தது. முதல்-அமைச்சர் மனது வைத்தால் சேர்த்துக்கொள்ளலாம் என்று கேட்டபோது கூட நான் அதற்கு இணங்கவில்லை. அதனால் அந்தக் குடும்பத்துக்கு என் மீது எழுந்த கோபம் இன்னும் தீரவில்லை. இதுபோன்ற சம்பவங்களை நான் எழுதிக் கொண்டே போகலாம்.

நான் இதையெல்லாம் எழுதுவதற்குக் காரணம் யாரிடமும் சான்றிதழ் பெறவேண்டும் என்பதற்காக அல்ல, என்னுடைய குணம், இயல்பு அப்படி என்பதை என் மீது குறை காண்போர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உற்றார் உறவினர்கள் அவரவர்கள் உழைத்து, ஒரு சிலர் தங்களுக்கென வீடுகளையோ, சொத்துக்களையோ வாங்கியிருக்கலாம். ஆனால் அதற்காக நான் எந்த விதமான நிதி உதவியோ, அரசு சார்பிலான உதவியோ செய்தது இல்லை என்பதையும் இந்த நேரத்தில் நான் உறுதிப் படுத்திட விரும்புகிறேன்.

நான் பல முறை சொல்லியிருப்பது போல மிக மிகச் சாதாரணமான, சாமான்யமான குடும்பத்திலே பிறந்த என்னை, இந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பேன் என்ற நம்பிக்கையோடு ஐந்து முறை முதல்-அமைச்சராக்கி, 1957 முதல் 11 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி, 1969 முதல் நாற்பதாண்டு காலத்திற்கு மேலாக ஒரு கட்சியின் தலைவராக்கி இருக்கிறார்கள் என்றால்,

திராவிடத் தமிழ் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி செலுத்துகின்ற நேரத்தில் என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்பதை அவர்களுக்கெல்லாம் தெளிவாக்கிடவும், என் மீது இன்னமும் குறை காண்கின்ற ஒரு சிலரும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன்.

என் எஞ்சியுள்ள காலத்தையும் திராவிடத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவே செலவிடுவேன் என்று உறுதி கூறி - என்றைக்கும் ஏழையெளிய மக்களின் கவலை தீர்ப்பதையும், கண்ணீர் துடைப்பதையும் கடமையாகக் கொள்வேன் என்பதற்காகவே இந்தக் கணக்கைக் காட்டியிருக்கிறேன், கண்ணுடையோர் காண்பதற்காக! முகத்தில் இரண்டு புண்ணுடையோர்க்கல்ல!’’என்று தெரிவித்துள்ளார்.
http://nakkheeran.in/users/frmNews.aspx?N=44429