Search This Blog

Saturday, December 4, 2010

தமிழர்கள் ஆவேசம் மிரண்ட ராஜபக்ஷே


மூன்று நாள் பயணமாக லண்டன் சென்ற மகிந்த ராஜபக்சேவுக்கு பதட்டமும் நடுக்கமும் இன்னமும் குறையவில்லை. தமிழர்களின் ’வரவேற்பை’ கண்டு உள்ளுக்குள் ஒருவித படபடப்புடனேயே இருக்கிறார்.

லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக மாணவர்களோடு உரையாற்றுவதற்காக 29-ந் தேதி மாலை இலங்கையிலிருந்து விசேஷ விமானத்தில் லண்டன் புறப்பட்டார் ராஜபக்சே. இவரது வருகையை அறிந்த புலம் பெயர்ந்த தமிழர்கள் ஆயிரத்திற்கும் அதிகமானோர் நள்ளிரவிலும் லண்டன் ஹீத்துரு விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்.

நள்ளிரவில் ராஜபக்சே வந்திறங்கியதை அறிந்ததும் கோபத்தின் உச்சிக்கே சென்ற தமிழர்கள், "போர்க்குற்றவாளி மகிந்தாவே திரும்பிப்போ... இனப்படுகொலை அரக்கனே உள்ளே வராதே... மகிந்த நீ ஒரு போர்க்குற்றவாளி.... போர்க் குற்றவாளியை கைது செய்.... பயங்கரவாதி மகிந்தாவை கைது செய்..'’என்றெல்லாம் விண்ணதிர முழக்கங்களை எழுப்பினர். அதனால் பிரதான வழியில் ராஜபக்சே வரா மல், மற்றொரு பிரதான வழியில் அவரை கொண்டு செல்ல விமானநிலைய அதிகாரிகள் முயற்சித்தபோது அந்த வழியையும் தமிழர்கள் முற்றுகை யிட்டிருந்தனர். இதனால் எவ்வழியி லும் செல்ல முடியாமல் விமான நிலையத்திற்குள்ளே 2 மணி நேரம் அங்குமிங்கும் காத்திருக்க வேண்டி யதாக இருந்தது.

தன்னை வரவேற்க வந்த லண்டனில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி அம்சா உள்ளிட்ட அதிகாரி களை கடுமையாக திட்டிய மகிந்தா,’’"இவர்கள் கூடுவது உங்க ளுக்கு எப்படி தெரியாமல் போனது? என்ன உளவு பார்க்கிறீர்கள் இங்கு?'’என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார். உடனே அம்சா உள்ளிட்ட அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகளிடம் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் கொடியை ஏந்திக்கொண்டு வந்தவர்களை எப்படி அனுமதிக்கலாம் என்று கேட்க... அதற்கு அவர்களோ "அவர் களை தடுக்க வேண்டி எங்களுக்கு எந்த அறிவுறுத்தல்களும் இல்லை'’’என்று பதில் தந்துள்ளனர்.

அதன்பிறகு விமான நிலையத்தின் சாதாரண ஒரு சிறிய வழியில் ராஜபக்சேவை அழைத்துச் சென்று ஹோட்டலில் இறக்கிவிட்டனர் அதிகாரிகள் என்கிறார்கள் லண்டன் தமிழர் பேரவையினர்.

ராஜபக்சேவின் இந்த வருகை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முழுவதும் எதிரொலிக்க, பிரிட்டனின் பல்வேறு நகரங்களில் இருந்தும் தமிழர்கள் லண்டனுக்கு விரைந்தனர். ராஜபக்சே கலந்துகொள்ளும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தையும் ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டு, "போர்க்குற்றவாளியை கைது செய்'’ என்கிற முழக்கங்கள் ஏகத்துக்கும் எதிரொலித்தன. பயந்து போன ராஜபக்சே கூட்டத்தையே ரத்து செய்துவிட்டார்.


இதற்கிடையே ராஜபக்சேவின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் முகமாக, தமிழ் பெண்களை ராணுவத்தினர் கொடூரமாகக் கற்பழித்து படுகொலை செய்துள்ள வீடியோ காட்சிகளை "சேனல்-4' தொலைக்காட்சி வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இளகிய மனம் படைத்த யாரும் இந்த காட்சிகளைப் பார்க்க முடியாது. அந்தளவுக்கு கொடூரமாக இருக்கிறது. கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்களில், புலிகளின் ஊடகப் பிரிவில் பணிபுரிந்த இசைப்பிரியாவும் ஒருவர். (இவரைப் பற்றி நக்கீரனில் அட்டைப்பட செய்தியாக ஏற்கனவே எழுதியிருக்கிறோம்). இளம்பெண்களை கொடூரமாகக் கற்பழித்தபோது அவர்கள் கதறிய கதறல்களை ரவிமரியா தலைமையிலான ராணுவத்தினர் செல்ஃபோனில் பதிவு செய்து ரசித்துள்ளனர். இந்தக் காட்சிகள் தற்போது, சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் ராஜபக்சேவை கிலி பிடிக்க வைத்துள்ளது. காரணம், மைனஸ் 8 டிகிரி குளிரில் ஒன்றரை அடி பனியில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் ராஜபக்சே தங்கியுள்ள ஹோட்டலை முற்றுகையிட்டுள்ளனர். கைதி போல் வெளியே வராமல் கிடக்கிறார் ராஜபக்சே. வந்திருக்கும் ராஜபக்சே கும்பல் மீது, தமிழர்கள் 3,000-க்கும் மேற்பட்ட கிரிமினல் புகார்களை லண்டன் போலீஸில் பதிவு செய்து அதன் நகல்களை பெற்றுள்ளனர். புகாரை ராணிக்கு அனுப்பி ராஜபக்சேவையோ அவர் உடன் வந்திருக்கும் அதிகாரிகளில் ஒருவரையோ போர்க் குற்றத்துக்காக கைது செய்யச் சொல்லி கேட்டு வருகின்றனர்.

தமிழர் மக்கள் பேரவையின் நிர்வாகிகளிடம் பேசியபோது, ""கடந்த அக்டோபரிலேயே மகிந்தா லண்டனுக்கு வரவேண்டியவர். ஆனால் தான் கைது செய்யப்படுவோம் என்கிற பயத்தால் அப்போது பயணத்தை தவிர்த்துவிட்டார். தற்போது அவர் பயண ஏற்பாடுகளை துவங்குவதற்கு முன்பு இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் "மாட்சிமைதாங்கிய மகாராணிக்கு... தங்கள் நாடான பிரிட்டன் அறிமுகப்படுத்திய பாராளுமன்ற முறைகளின்படி நானும் எனது நாட்டில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை பலத்தில் ஜெயித்திருக்கிறேன். உங்கள் நாட்டின் மீது ஏக விசுவாசம் கொண்டவன் நான். அந்த வகையில் நான் பிரிட்டனில் இருக்கும் காலப்பகுதியில் எந்த சட்ட சிக்கலும் எனக்கு ஏற்படாத வண்ணம் மாட்சிமைத் தாங்கிய மகாராணியின் கருணையை எதிர்பார்க்கிறேன்'’என்று குறிப்பிட்டு நிறைய கெஞ்சல்களுடன் எழுதியிருக்கிறார். அந்த கெஞ்சல்களுக்கு ’மதிப்பளித்து’ ராணி தரப்பிலிருந்து கைது செய்ய மாட் டோம் என்கிற வகையில் ஏதோ ஒரு உத்தரவாதம் தரப் பட்டிருக்கிறது. அந்த தைரியத்தில்தான் இலங்கையிலிருந்து விமானம் ஏறினார் ராஜபக்சே''’ என்கின்றனர்.

லண்டன் இளையோர் பேரவையினர்,’’""போர் நெறிகளையும் சர்வதேச சட்டங்களையும் துச்சமென நினைத்து 1 லட்சத்து 20 ஆயிரம் தமிழர்களை படுகொலை செய்து.. இந்த நூற்றாண்டின் உலக மனிதநேயத்தையே குருடாக்கிய ராஜபக்சே, தற்போது தப்பித்திருக்கலாம். இன்றைக்கு லண்டனில் ஏற்பட்ட தமிழர்களின் கோபம்... இனி ஆவேசமாகவே எதிரொலிக்கப்போகிறது. அந்த ஆவேசத்தின் முடிவு... ராஜபக்சேவுக்கு கிடைக்கப் போவது கொடுமையான தண்டனைதான்''’’ என்றனர் ஆவேசமாக.

-இளையசெல்வன்
நக்கீரன் 04-12-2010

No comments:

Post a Comment