Search This Blog

Saturday, November 20, 2010

கலைஞரா? ஜெயலலிதாவா? முதல் ரவுண்டில் ஜெயித்தது யார்?


தமிழக அரசியல் களம் தகதகவென்று தகிக்கிறது. ஆளுங்கட்சியான தி.மு.க.வின் முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க., கடந்த மாதம் 13-ந்தேதி கோவை வ.உ.சி. மைதானத்தில் பிரம்மாண்டமான கண்டன பொதுக் கூட்டத்தை நடத்திக் காட்டியது.

அந்த கூட்டத்திற்கு ஒரு மாதமாக திட்டமிட்டார் ஜெயலலிதா. வடசென்னை முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை பல மாவட்டங்களிலிருந்து ர.ர.க்கள் திரட்டி கொண்டு வரப்பட்டனர்.

அப்படி கூடிய கூட்டத்தைக் கண்டு பல லட்சம் பேர் திரண்ட கூட்டம் என்றும் தமிழகத்தில் மிகப் பெரிய திருப்பு முனை கூட்டம் என்றும் நிச்சயம் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு காட்சி இது என்றும் பத்திரிகைகளும் மீடியாக்களும் வர்ணிப்பு செய்தன.

இதனால், ஆளுங்கட்சி பிரபலங்களும் அதிகாரிகளும் கூட அந்த கூட்டத்தைக் கண்டு வியந்ததும் யோசித்ததும் உண்மை.

இப்படிப்பட்ட சூழலில்தான், அதே கோவை வ.உ.சி. மைதானத்தில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தை 2-ந்தேதி நடத்திக் காட்டினார் கலைஞர். "கோவையில் பொதுக் கூட்டம்' என கலைஞர் அறிவிப்பு செய்த நான்காவது நாளில் பிரம்மாண்டமான இந்தக் கூட்டம் நடந்தது.

கூட்டம் நடந்த 2-ந்தேதி மதியமே வ.உ.சி. மைதானம் உடன்பிறப்புக்களால் திணறத் துவங்கியது. கோவை முழுவதும் தி.மு.க.வின் கொடி, தோரணங்கள், பேனர்கள் என தூள் கிளப்பியிருந்தனர் உ.பி.க்கள். ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்துகள் அனைத்திலும் பயணிகளோடு பயணிகளாக பயணித்து கோவைக்கு வந்தனர் தி.மு.க.வினர்.

அரசு பேருந்துகள் தவிர மினி வேன்கள், லாரிகள், கார்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வந்திருந்தனர். இந்த 3 மாவட்டங்களில் உள்ள தி.மு.க. இளைஞர் அணியினர் பலர் டூவீலர்களில் புறப்பட்டும் வந்தனர். கோவையே போக்குவரத்தால் திணறியது.

அந்த கூட்டத்தோடு கூட்டமாக நாமும் இணைந்து கொண்டோம்.

கைகளில் தி.மு.க.வின் கொடியை ஏந்திக் கொண்டு ஏதோ யுத்தக் களத்திற்கு போவது போல, "கலைஞர் வாழ்க, தலைவர் வாழ்க' என்று உரத்து கோஷமிட்டவாறே வ.உ.சி. மைதானத்திற்குள் திரண்டனர் உ.பி.க்கள்.

மைதானத்தில் திரண்டிருந்த கூட்டத்தில் 3-ல் 1 பங்கு பேர் பெண்களின் கூட்டமாக இருந்தது. கூடிய கூட்டத்தின் கொள்ளளவு தாக்குப் பிடிக்காமல் மைதானமே திணறியது. வந்திருந்த உ.பி.க்களிடம் நாம் பேசினோம்.

முருகையன் என்கிற 65 வயது முதியவர், ""ஈரோடு கருங்கல்பாளையத்திலிருந்து வர்றேன். கவர்மெண்ட் பஸ்ல ஏறித்தான் வந்தேன். இதோ பாருங்க... பஸ் டிக்கெட்'' என்று டிக்கெட்டை எடுத்துக் காட்டிட்டு, ""இப்ப மட்டும் இல்லீங்க. எப்பவுமே கட்சிக் கூட்டம்னா இப்படித்தான் வருவேன். அந்த பொம்பளை ஜெயலலிதா, எங்க தலைவரை கைது பண்ணி ஜெயிலில் அடைச்சதை கண்டிச்சு மெட்ராஸ்ல பொதுக்கூட்டம் போட்டது கட்சி, அப்ப நான் லாரி புடிச்சி மெட்ராஸ் வந்து அந்த கூட்டத்துல கலந்துக்கிட்டேன். போன மாசம் இதே இடத்துல கூட்டம் நடத்திய ஜெயலலிதா... எங்க தலைவரைப் பார்த்து எப்படியெல்லாம் கேவலமா பேசிச்சுத் தெரியுமா? அதைப் பார்த்து நெஞ்செல்லாம் கொதிச்சதய்யா. என்னோட பங்காளி அ.தி.மு.க.காரன். அவனே ஜெயலலிதா பேச்சை கேட்டு "கலைஞர் எவ்வளவு பெரிய மனுஷர். அவரைப் போய் இப்படி பேசலாமா?ன்னு முகம் சுளிச்சு ஆதங்கப்பட்டான். அவனுக்கே இந்த ஆதங்கம்னா எனக்கு எவ்வளவு கோவம் வரும்? அதான் பஸ் ஏறி கௌம்பி வந்துட்டேன். தலைவரு பேச்சை கேட்டுட்டாத்தான் கொதிக்கிற என் நெஞ்சு அடங்கும்'' என்றவர், ""எங்க கருங்கல் பாளையத்திலிருந்து மட்டும் நாங்க 120 பேர் கௌம்பி வந்திருக்கிறோம்'' என்றார் பெருமிதமாக.

22 வயது இளம்பெண் மகேஷ் வரி, ""நம்ம படைச்ச ஆண்டவனே ஆட்சி நடத்தினாலும் குறைகள் இருக்கத்தான் செய்யும். அதேபோல, குறைகள் இருந்தாலும் தி.மு.க. ஆட்சியில் நிறைகளே அதைவிட அதிகமாக இருக்கு!'' என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, திருப்பூர் மாவட்ட மகளிர் அணியினர் திமுதிமுவென உள்ளே நுழைந்தனர்.

அவர்களுக்கு வழியை விட்டுவிட்டு மீண்டும் நம்மிடம் பேசிய மகேஷ்வரி, ""பொள்ளாச்சி பக்கத்துல இருக்கிற உடுமலைப் பேட்டையில் இருந்து வர்றோம். எங்க ஊர்ல வீட்டுக்கு வீடு ஏதோ ஒரு நல்ல காரியம் தி.மு.க. அரசால் நடந்திருக்கு. அதான், கலைஞரய்யா நடத்தும் கூட்டத்தை பார்க்க எங்க குடும்பத்தோடு வந்திருக்கோம். நீங்க கூட உங்க நக்கீரன்ல கோவை மாவட்டத்துல தி.மு.க. "வீக்'குன்னு எழுதி யிருக்கீங்க. ஆனா, வீக் கிடையாது. நீங்க வேணா வர்ற எலெக்ஷனைப் பாருங்க'' என்றார் கைவிரலை உயர்த்திக் காட்டி.

கைக்குழந்தையுடன் கூட்டத்தில் கலந்து கொண்ட சுமதி, ""மகளிர் குழுக்களுக்கு லோன் கொடுத்து ஆண்களுக்கு இணையாக எங்களையும் சம்பாதிக்க வைத்து தலைநிமிர நடைபயில வைத்திருப்பது தி.மு.க. அரசுதான். கடன் உதவி மூலம் எங்களுக்கு தைரியத்தை கொடுத்து மிகப்பெரிய ஊக்கத்தை தந்துள்ள கலைஞரய்யாவைப் பார்க்க வந்திருக்கேன். இந்தக் கூட்டம் மட்டுமல்ல, இனி எங்கு கூட்டம் நடந்தாலும் அங்கு போவேன்'' என்றார் உணர்ச்சி மிகுந்தவராக.

குழந்தையோடு வந்திருந்த புளியம்பட்டி ஷகிதாபானு, ""எங்க முஸ்லிம் சமூகத்திற்கு தனி இடஒதுக்கீடு தந்து கல்வி, வேலைவாய்ப்புகளை தந்தவர் கலைஞர். எங்க சமூகத்தில் பெண்கள் வெளியே வரமாட் டார்கள். இன்று நாங்கள் வந்திருக் கிறோமென்றால்... எங்க சமூகத்திற்கு கலைஞர் செய்துள்ள நன்மைதான் காரணம். அந்த சந்தோஷத்தில் இதில் கலந்து கொண்டிருக்கிறேன். இதுதான் நான் கலந்து கொள்கிற முதல் கூட்டம்'' என்றார் பெருமிதமாக.

பொள்ளாச்சியைச் சேர்ந்த முனீஸ், ""ஜெயலலிதா ஒரு லேடி. அதனால் பெண்களின் கஷ்டம் அந்தம்மாவுக்கு தெரியும். எங்க கஷ்டம் களையும்னு இதுவரை அந்தம்மாவுக்கு ஓட்டுப் போட்டேன். ஆனா, எங்க கஷ்டம் எதையும் போக்கலை அந்தம்மா. ஆனா, மகளிருக்காக நிறைய நன்மைகள், சலுகைகளை செய்திருக்கிறார் கலைஞர். அவரை பார்க்க வராம வேறு யாரை பார்க்கப் போவது?'' என்றார்.

""இந்த உலகத்துல எந்த நாட்டுல ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்கிறாங்க. இலவசமா கேஸ், டி.வி.யெல்லாம் எங்கே கொடுத்திருக்காங்க? சொல்லுங்க பார்க்கலாம்... எங்கேயும் இல்லை. ஆனா, தமிழகத்திற்கு கலைஞரய்யா கொடுத் திருக்காரு. இந்த நன்றியை காட்ட எனக்கு வேறு வழித் தெரியலைங்க. அதான் இங்கே வந்தேன். அப்படி வரலைன்னா நான் பொறந்ததற்கே அர்த்தம் கிடையாதுங்க'' என்கிறார் உடுமலைப் பேட்டை செல்லம்மாள்.

தாராபுரம் மணிமேகலை, ""கடன், கந்துவட்டி கொடுமை இல்லாம இப்போதுதான் நிம்மதியா வாழ முடியுது. அந்த சந்தோஷம்தான் இந்த கூட்டத்திற்கு என்னை வரவழைத்தது'' என்கிறார்.

ஆட்டோ டிரைவர் அழகர்ராஜா, தையல் தொழிலாளி நாகேந்திரன் ஆகியோர், ""இன்னைக்கு எங்க கொழந்தைங்க படிப்பதற்காக நல வாரியம் மூலம் 10 ஆயிரம் கொடுத்து உதவி செய்யுறது தி.மு.க. கவர் மெண்ட்தான். வேற எந்த ஆட்சியில யும் இதை நினைச்சுப் பார்க்க முடியாது'' என்றார்கள். கூட்டத்தில் இளைஞர்களை பெருமளவில் பார்க்க முடிந்தது. ஈரோட்டிலிருந்து வந்திருந்த 18 வயது இளைஞர்களான விக்னேஷ், ஆனந்த், விஷ்வா, வாசு ஆகியோர், ""எங்களின் உயர்கல்விக்காக கடன் உதவி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதாமாதம் நிதி உதவி என எங்களின் நலன்களுக்காக நன்மைகள் செய்து கொண்டிருக்கிறார் தாத்தா கலைஞர். அதனால் அவரை ரொம்பப் பிடிக்கும். அவரைப் பார்க்கவே இந்த கூட்டத்திற்கு வந்தோம்'' என்றனர் ஆனந்தமாய்.



கூட்டம் முடிந்தவுடன் கோவை மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலரை தொடர்பு கொண்டு பேசியபோது... ""பொதுவாக ஆளுங்கட்சின்னா கூட்டம் சேராது. எதிர்க்கட்சி கூட்டம்னா இயல்பாகவே மக்கள் திரளுவார்கள். ஆனா தி.மு.க. கூட்டத்திற்கு எங்களுக்கு கூடிய கூட்டத்தைவிட ரெண்டு மடங்கு அதிகமா இருந்தது. எவ்வளவுதான் திரட்டிக்கிட்டு வந்தாலும்... இவ்வளவு பேரை திரட்டியிருக்க முடியாது. இயல்பாகவும் வந்த கூட்டம் போலத்தான் எங்களுக்குத் தெரியுது. ஒரு ஆளுங்கட்சிக்கு இவ்வளவு கூட்டம் கூடியிருப் பது ஆச்சரியம்தான்'' என்கின்ற னர்.

இதே வ.உ.சி. மைதானத்தில் ஜெ. கூட்டிய கூட்டத்தைக் கண்டு, திருப்புமுனை என்றார் கள். ஆனால் அன்றைக்கு 70 ஆயிரம் பேர்தான் திரண்டி ருந்தனர். இதே கோவையில் செம்மொழி மாநாட்டை கலைஞர் நடத்தியபோது 15 லட்சம் மக்கள் திரண்டிருந்தனர். அடுத்து இப்போது, கோவையில் நடத்திய பொதுக்கூட்டத்தில், மாநாடு போல் இரண்டு லட்சம் பேர் குவிந்துள்ளனர். அதுவும் அறிவிப்பு செய்த நான்கே நாட்களில். இன்னும் சொல்லப்போனால் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய 4 மாவட் டங்களிலிருந்து மட்டுமே இரண்டு லட்சம் பேர். இந்தளவுக்கு பிரமாண்ட மான கூட்டம் கூடியதற்கு மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் தீவிரமும் பங்களிப்பும் ஒரு காரணம். மேலும் அ.தி.மு.க.வை விட மூன்று மடங்கு கூட்டத்தைக் கூட்டிக் காட்ட வேண்டுமென்று கோவை மண்டல அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, சாமிநாதன், ராமச்சந்திரன் மற்றும் மா.செ.க்கள் எல்லாரும் இணைந்து பங்காற்றியதும் காரணமாக இருக்கின்றன.

ஆக, தமிழக அரசியல் களம் தகதகவென தகித்துக் கொண்டிருக்கும் சூழலில் முதல் ரவுண்ட்டில் ஜெயித்தது கலைஞரா? ஜெயலலிதாவா? என்கிற பட்டிமன்றம் தமிழகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிற சூழலில், இரண்டு கூட்டங்களையும் பார்த்த கோவை மக்களிடம் நாம் பேசியபோது, ""ஜெயிச்சிட்டாரய்யா ஜெயிச்சிட்டாரு! முதல் ரவுண்ட்டில் கலைஞர் ஜெயிச்சிட்டாரு'' என்றே கோஷ மிட்டனர்.

-ஜீவாதங்கவேல், அருள்குமார், இளங்கோவன்
நக்கீரன் 

5 comments:

  1. இவங்க இரண்டு பேர் மட்டுமே தமிழ்நாட்டை ஆள பிறந்தவர்கள் என்ற மாயையை முதலில் அழியுங்கள்

    ReplyDelete
  2. அன்பு நக்கீரன் & திரு.கோபால் சார் பத்திரிக்கை தர்மம் அப்படின்னு ஒன்னு இருக்கு...அது எங்க விக்குதுன்னு தேடி பார்த்து கொஞ்சமாவது வாங்கி உங்கள் பத்திரிக்கை அலுவலகத்தில் வைக்கவும். உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாத.

    ReplyDelete
  3. நக்கீரன் ஒரு நடுநிலையான நாளேடு என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை .நக்கீரனை வாங்கி படியுங்கள் புரியும் .பல மர்மங்களை காவல் துறைக்கு முன்பே மக்கள் மன்றத்திற்கு கொண்டு வந்தது நக்கீரன் என்பதை மறந்து விடவேண்டாம்.இங்கே பதிவது நக்கீரனின் ஒரு பகுதி தான் .

    ReplyDelete
  4. ஆளும் கட்சியின் கூட்டம் எல்லாம் தானாக வரும்... கூட்டம் t.r ககு கூட வைத்து . ஆனா ஓட்டு தா வரல... ரொம்ப நாள் "பவர் கட்" சின்ன தொழில் எல்லாம் எங்க மாவட்டத்திலே நலிச்சு போச்சு ... அரசு அதிகாரிகளும் காவல்துறையும் , எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டைகரங்க... போன ஆட்சில தண்ணி மட்டும் தா பிரச்னை !(முதல் 3ஆண்டு மட்டும் தா ).. இப்போ சொதுகே வழி இல்ல ... மின்சார கட்டணத்தை உயர்த்தினாலும் பரவல , கரண்ட் வந்த போதும் !..

    ReplyDelete
  5. //நக்கீரன் ஒரு நடுநிலையான நாளேடு என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை //

    நக்கீரன் நாளேடானது கோவாலுக்கு தெரியுமா தெரியாதா?

    ReplyDelete