Search This Blog

Sunday, November 21, 2010

ஜெயலலிதாவின் கூட்டணி தர்மம் -மூத்த பத்திரிக்கையாளர் சோலை

மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ராசாவை அமைச்சரவையிலிருந்து நீக்கினால் அ.தி.மு.கழகம் மன்மோகன்சிங் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரும் என்று செல்வி ஜெயலலிதா தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு புயலைக் கிளப்பியதா? புழுதியைக் கிளப்பியதா?

மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. விலகுமானால் அதனை ஈடுகட்ட 18 உறுப்பினர் களை அணிதிரட்டித் தருகிறேன் என்றும் அவர் காங்கிரஸ் தலைமைக்கு நம்பிக்கை தெரிவித்தார். மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கத் தயாராக இல்லை என்பதனை காங்கிரஸ் தலைமை உடனடியாகத் தெளிவுபடுத்திவிட்டது.

தமிழகத்தில் செயல்படும் காங்கிரஸ் -தி.மு.க. -விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் இடம் காலியில்லை. "நோ வேகன்ஸி' என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துவிட்டார்.

காங்கிரஸ் கட்சிக்கு அ.தி.மு.க. ஆதரவு என்ற அம்மாவின் அறிவிப்பை எல்லா ஏடு களும் ஊடகங்களும் அமர்க்களமாக வெளியிட்டன. அம்மா பெரிய ராஜ தந்திரி என்று டெல்லி தொலைக் காட்சி களின் சதுர்வேதிகளும் திரிவேதிகளும் கோஸ்வாமிகளும் பாஷ்யமே (விரிவு ரையே) எழுதிப் படித்துவிட்டனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதே தொலைக்காட்சிகள் எப்படிக் கணித்தன? தமிழகத்தில் 40 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று அம்மாவுக்கு லட்சார்ச்சனை செய்தன. மக்கள் தந்த தீர்ப்பு என்ன என்பது நாட்டிற்குத் தெரியும்.

வடமாநில தேர்தல் நிலவரம் பற்றி அதே தொலைக்காட்சிகள் எப்படிச் செய்தி வாசித்தன? பி.ஜே.பி.யின் பலம் பெருகி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கும் பி.ஜே.பி.க்கும் கடுகளவு தூரம்தான் இடைவெளி இருக்கும் என்று வாசித்தன. ஆமாம், அங்கே பி.ஜே.பி. வெற்றிபெற வேண்டும் என்று துடிப்பர். இங்கே அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண் டும் என்று ஆசைப்படுவர்.

அ.தி.மு.க.வை நம்பி மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பி.ஜே.பி. ஆட்சி அமைத்தது. தாங்கள் எதிர்கொள்ளும் நம் அன்னியச் செலா வணி வழக்குகள் -வெளிநாட்டு நிதி தொடர்பான வழக்குகள் என்று எல்லா வழக்குகளையும் வாபஸ் வாங்க வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமை நிர்பந்தித்தது. அப்போதுதான் அந்த தலைமை தந்த நிபந்தனையற்ற ஆதரவின் அர்த்தம் பி.ஜே.பி.க்கு புரிந்தது. கடைசியில் வாஜ்பாய் அரசை செல்வி ஜெயலலிதா கவிழ்த்தேவிட்டார். நாடு இன்னொரு இடைத்தேர்தலை எதிர் கொண்டது.

வாஜ்பாய் அரசு கவிழ்ந்த பின்னர் மீண்டும் மையத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சி தொடர்ந்தது. செல்வி ஜெயலலிதா டெல்லியில் முகாமிட்டார். ஒரு நட்சத்திர ஓட்டலின் பாதி அறைகள் ரிசர்வ் செய்யப்பட்டன.

சோனியாகாந்தியை பிரதமராக்க ஓர் முயற்சி நடந்தது. செல்வி ஜெயலலிதா நேராக அவ ரது இல்லம் சென்றார். அவர் பிரதமர் பீடம் ஏற ஆதரவு என்றார். அம்மாவின் பரந்த மனதைப் பாராட்ட பாரதம் காத்திருந்தது. என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மீண்டும் சோனியா இல்ல படிகளில் ஏறினார். நேற்று தந்த ஆதரவை இன்று வாபஸ் வாங்கிக்கொள்கிறேன் என்றார். சோனியா அமைதி காத்தார்.

இதில் என்ன சிறப்பு என்றால் ஜெய லலிதாவின் ஆதரவை சோனியா கோரவே யில்லை. இப்போது எப்படி அழையா விருந்தாளியாக காங்கிரஸ் கதவுகளைத் தட்டுகிறாரோ அப்படியேதான் அன்றைக்கும் தட்டினார். ஆதரவு என்றார். வாபஸ் என்றார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் செல்வி ஜெயலலிதா டெல்லி சென்றார். அனு பவத்தால் பக்குவப்பட்ட ஜெயலலிதா வந்திருக் கிறேன், கூட்டணிக்குத் தயார் என்று பகிரங்கமாக அறிவித்தார். தலைநகரத் தொலைக்காட்சி களெல்லாம் தகுந்த முக்கியத்துவம் தந்து ஒளிபரப்பின. ஆனால் காங்கிரஸ் தலைமை அம்மாவின் சரணாகதியைக் கண்டுகொள்ள வில்லை. தென்திசை வாடைக்காற்று அழையா விருந்தாளியாக வீசினாலும் வீசும் என்று சோனியா இல்ல ஜன்னல்களும் சாளரங்களும் மூடப்பட்டன.

அழையா விருந்தாளியாக செல்வி ஜெய லலிதா எங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டுகிறார், திறப்பதாக இல்லை என்று கடைசியாக இப்போது மத்திய அமைச்சர் நாராயண சாமியும் தெரிவித்துவிட்டார்.

தங்கள் கூட்டணி தி.மு.கழகத்துடன்தான் என்று பிரதமரும் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் அம்மா சரணாகதியடையவில்லை. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியை உடைப்பதற்காகக் கூறினார் என்று இங்கே சில அரசியல் புரோகிதர்கள் அர்ச்சனை செய்கிறார்கள். ஆனால் உண்மை என்ன? கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் இருந்து இன்று வரை அவர் காங்கிரஸ் உறவிற்காக பகீரத முயற்சி செய்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும் எப்படியும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி காண இமாலய முயற்சி செய்தார். ஆனால் சோனியா இருக்கும்வரை அத்தகைய கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்பதனை அரசியல் விமர்சகர்கள் அறிவார்கள்.

காங்கிரஸ் கட்சியின் உதவியின்றி கரை சேர முடியாது என்பதனை செல்வி ஜெயலலிதா அறிவார். ஆனால் அதற்கான வாய்ப்புகளுக்கு வழியேயில்லாது போனதற்கு அவரேதான் காரணம். அவர் அவ்வப்போது தெரிவித்த கருத்துகளும், விடுத்த அறிக்கைகளும்தான் காரணமாகும். அவைகள் அறிக்கைகளா? ஏவப்பட்ட அக்னிச்சரங்கள். பெண்மைக்கு முடிசூட்ட வேண்டிய அவரே சோனியாவை எப்படியெல்லாம் கொச்சையாக, பச்சையாக விமர்சித்தார் என்பதனை எப்படி மறப்பர்?

காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்று இப்போது அவர் கூறியது ராஜதந்திரமல்ல... சரணாகதி. உண்மையிலேயே காங்கிரஸ் உடன்பாட்டிற்கு பலப்பல வழிகளிலும் முயன்றார். முடியவில்லை. இனி நாமே கூட்டணிக்குத் தயார் என்பதனை அறிவித்துப் பார்ப்போம் என்ற முடிவிற்கு வந்தார். எனவே மத்திய அமைச்சர் ஆ.ராசா எதிர்நோக்கும் பிரச்சினையின் பின்னணியில் நின்று தயார் தயார் என்றார்.

அவருக்காக காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கீச்சு கீச்சு என்று குரல் எழுப்பும் சில சிட்டுக்குருவிகள் உண்டு. அவர்களை அவர் நம்பினார். ஆனால் அந்தக் குருவிகளின் கீச்சுக் குரல் வண்ணாரப்பேட்டைக்குக் கூட எட்டுவதில்லை. டெல்லிப் பட்டணத்தை எப்படி எட்ட முடியும்?

கழகத்தின் வலிமையைக் காங்கிரஸ் கட்சிக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக கோவை, திருச்சி, மதுரையில் பெரும் பேரணிகள் நடத்தினார். ஆனால் அந்தப் பேரணிகளுக்குச் செலுத்தப்பட்ட முத லீடுகள் என்ன என்பது காங்கிரஸ் தலைமைக்குத் தெரியும். இந்தப் பேரணிகள் மூலம் தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்ட முயன்றார். நீங்கள் விரும்பும் கூட்டணி அமையும் என்றார். வெற்றிக் கூட்டணியில் கைகோர்ப்போம் என்றார். ஆனால் இன்றைக்கு காங்கிரஸ் கூட்டணியில் அ.தி.மு.க.விற்கு இடம் இல்லை என்று அறிவிக்கப் பட்டது அந்தத் தொண்டர்களுக்கு சோர்வை ஏற்படுத்தியிருக்கும். ஏனெனில் காங்கிரஸ் உடன் பாடு என்று அவர் மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தி வந்தார்.

இன்றுவரை அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதாக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கருதுகின்றனவா? தனியாகப் பேரணி வேண்டாம். கூட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று அந்தக் கட்சிகள் மனு போட்டு மனு போட்டு சோர்வடைந்து விட்டன. அந்தக் கட்சித் தலைவர்களை அ.தி.மு.க. பேரணி மேடைகளில் கூட ஏற்றுவதில்லை. ஆனால் கூட்டணி தர்மத் திற்கு எந்த அளவு அ.தி.மு.க. தலைமை மரியாதை தரும் என்பதனை எண்ணிப் பார்க்க வேண்டும். 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற நாடாளு மன்றத் தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி களுடன் அ.தி.மு.க. கூட்டணி கண்டது. பிரச் சாரத்திற்கு வந்த சோனியாவிற்கு விழுப்புரத்தில் எவ்வளவு பெரிய மரியாதை கிடைத்தது என்பதனை நினைவுபடுத்தத் தேவையில்லை.

தேர்தல் முடிந்தது. செல்வி ஜெயலலிதா முதல்வரானார். டெல்லி சென்றார். சோனியாவை சந்தித்தார். கூட்டணியில் அங்கம் பெற்றதற்கு நன்றி என்றார். அடுத்த சில நிமிடங்களில் திரும்பினார். சோனியா இல்ல வாசலில் நிருபர்கள் காத்திருந்தனர். காங்கிரஸ் கட்சியுடன் கண்ட கூட்டணி இத்துடன் முடிவுற்றது என்று அறிவித்தார். காங்கிரஸ் பாடம் கற்றுக் கொண் டது. இனி தி.மு.க.வுடன்தான் அணி என்று இறுதி முடிவு செய்தது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அம்மா பாடம் கற்றுக் கொடுத்தார். சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் வந்தது. சில தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட்டது. ஆனால் தோழமைக் கட்சிகளின் ஆதரவை அம்மா கேட்கவில்லை. வேறு வழியின்றி வலியச் சென்று ஆதரித்தன.

தொண்டாமுத்தூர், கம்பம், இளையான் குடி, பர்கூர் தொகுதிகள் இடைத்தேர்தலை எதிர்நோக்கின. இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அ.தி.மு.க. அறிவித்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிர்ச்சி. எதிர்ப்பின்றி தி.மு.க. வெற்றி பெறுவது கூட்டணியைப் பலவீனப்படுத்தும் என்று கருதின. ஜனநாயகம் கருதி இந்தத் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்தன. களம் கண்டன.

கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை அ.தி.மு.க. ஆதரித்ததா? இல்லை.

ஆதரியுங்கள் என்று தொண்டர்களுக்குக் கட் டளையிட்டதா? இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டி யிடும் தொகுதிகளில்? அ.தி.மு.க. அமைதி காக்க வேண்டும், தேர்தல் பணி கூடாது என்று வாய்மொழி உத்தரவுகள் பறந்தன. அ.தி.மு.க.வின் நம்பகத்தன் மைக்கு இந்த நிகழ்வுகள் இன்னொரு எடுத்துக்காட்டு.

இந்தியாவிலேயே தர்மபுரி மாவட்டத்தில்தான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உறுப்பினர்கள் அதிகம் என்பார் கள். பர்கூர் தொகுதி தங்கள் பாசறை என்பார்கள். அந்தத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டி யிட்டது. வெறும் ஆயிரத்து 400 ஓட்டுக்கள்தான் வாங் கியது. அ.தி.மு.க. கிளைக்கழக நிர்வாகிகள் ஓட்டுப் போட்டாலே அதற்கு டெபாசிட் கிடைத்திருக்கும்.

கம்பம் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி 2 ஆயிரத்து 500 வாக்குகள் பெற்றது. தொண்டாமுத்தூர் தொகுதியில் சற்று ஆறுதல். 9 ஆயிரம் வாக்குகள் பெற்றது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி. மு.க.விற்கு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஏணி. ஆனால் இடைத்தேர்தலில் அந்தக் கட்சிகள் போட்டி யிட்ட தொகுதிகளில் அ.தி.மு.க. தோணியாகப் பயன்படக் கூடாதா? காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு இல்லை என்ற நிலையில்தான் வந்த வழித்துணையை விடவேண்டாம் என்று கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் அ.தி.மு.க. உடன்பாடு கண்டது.

செம்மொழி மாநாட்டினைத் தொடர்ந்து கோவையில் அ.தி.மு.க. பேரணி நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அந்தப் பேரணி மேடையி லாவது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை ஏற்றியிருக்கலாம். ஏன் இடம் கொடுக்கவில்லை?

காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பிய ரகசியத் தூதர்கள் நல்ல செய்தி கொண்டு வருவார்கள் என்று அ.தி.மு.க. தலைமை காத்திருந்தது. எனவே கம்யூ னிஸ்ட் கட்சிகளைத் திரிசங்கு சொர்க்கத்தில் தவிக்க விட்டது.

இனி அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள் நிம்மதியாக இருக்கலாம். ஏனெனில், அ.தி.மு.க.வோடு உறவு இல்லையென்று காங்கிரஸ் கட்சி கதவுகளைத் தாழிட்டுவிட்டது.
நக்கீரன்

6 comments:

  1. சோலையா? அது யாரு? கருணாநிதியின் புது மருமகனா?

    கருணாநிதிக்குத்தான் எத்தனை மருமகன்கள்?

    ReplyDelete
  2. சாப்பிடும் உப்பு, மருந்து, மதுபானம் ---(போலி ) , திருட்டு D.V.D அமோக விற்பனை(அவர்களின் குடும்ப படத்தை தவிர ), ஆள் கடத்தல் , நில அபகரிப்பு , விபசார வழக்கில் சலுகை , குடும்ப பிரச்சனையில் 3 பேர் எரித்துக்கொலை , தொடர் திருட்டு , லட்ச கோடி உழல் , இது எல்லாம் பாத்து தி .மு .கவை புரிந்து கொண்ட பகுத்தறிவுவாதி நான் ...(கடந்த முறை தி. மு. க விற்கு ஒட்டு போடுமாறு கட்டு கொண்டவன் நான் . இந்த முறை தி .மு .கவிற்கு வேட்டு போடுமாறு கேட்கிறேன் )

    ReplyDelete
  3. இப்படி பேசின எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஒரு நிம்மதியான சாவு கூட வரல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  4. வாஜ்பேயருக்கு ஜெயலலிதா போட்ட நிபந்தனைகளை படித்த போது,1977 -இல் ஜனதா சர்கார் பிரதமர் தேசாய் அவர்களிடம் சர்க்காரியா கமிஷன் அறிக்கையை வாபஸ் வாங்கவேண்டுமென்று மன்றாடிய கருணாநிதி ஏனோ நினைவிற்கு வந்தார்.

    ReplyDelete
  5. சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் உப்பும் இல்லை, சப்பும் இல்லை என்று கூறி இதன் மேல்நடவடிக்கை தேவையில்லை என்று கூறி கையெழுத்துப் போட்டவர் கருணாநிதி இல்லை, எம்.ஜி.ஆர்தான்

    ReplyDelete
  6. சர்காரியாவில் உப்பு சப்பு இல்லையென்றால் ,தமிழின காவலர் ,பகுத்தறிவு பகலவன் ,பிறந்த பிறக்கின்ற இனி பிறக்க போகிற எல்லா தமிழனுக்குமான ஒரே தலைவன் ஏன் எல்லா dogs காலிலும் விழுந்தார். சோலை இந்திராவின் ஜால்ராவாக இருந்த காலத்தில் எழுதியதை படியுங்கள் போதும்.

    ReplyDelete