Search This Blog

Friday, November 19, 2010

கலைஞரே மீண்டும் முதல்வர் -ஒரு ஏழை மூதாட்டியின் சபதம்


""முதல்வர் என்ற ஆணவத்தால், அகம் பாவத்தால், கர்வத்தோடு மக்களைப் பார்க்காமல், அவர்களின் தோழனாய், தொண்டனாய், உடன் பிறப்பாக இருப்பேன். ஆறாவது முறையாக மீண்டும் முதல்வராவது என் கையில் இல்லை. அது ஏழை, எளிய மக்களின் கையில் உள்ளது.''

30-ந் தேதி சென்னையில் நடந்த அரசு விழா ஒன் றில் கலைஞர் இப்படி உருக்கமாகப் பேசியது நாளேடுகளில் வெளியாக... கதிர்வேல் என்ற உறவுக்கார இளைஞர் அதைப் படித்துக் காண்பித்தார் மூதாட்டியான தங்கம்மாளிடம்.

""கலைஞர் என்ன பேசி பேப்பர்ல வந்தாலும் அதை மறக்காம எனக்குப் படிச்சுக் காமிப்பா...'' தங்கம்மாளின் இந்தத் தவிப்பான வேண்டுகோளை முடிந்த மட்டிலும் நிறைவேற்றி வருகிறார் கதிர்வேல். வழக்கமான ஒரு நிகழ்வாக இது இருந் தாலும்... இந்தப் பேச்சை அவர் வாசித்தபோது... பொலபொலவென்று கண்ணீர் சிந்தினார் தங்கம்மாள்.

""எப்பேர்ப்பட்ட மனுஷன் கலைஞர். என் வீட்டுக்காரர் மாதிரி தொண்டனுக எத்தனை பேரு ரத்தம் சிந்தி வளர்த்த இயக்கம்? தி.மு.க.ங் கிறது சாதாரண கட்சி இல்லப்பா. இது ஒரு தியாகக் கோட்டை. இப்ப கட்சியில இருக்கிறவங்களுக்கு இதெல்லாம் எங்க தெரியப் போகுது?'' வாய்விட்டே தங்கம்மாள் புலம்ப... "இது ஒரு வரலாற்றுப் பதிவாக இருக்கிறதே...' என்ற ஆதங்கத்தில் நம்மை அழைத் தார் கதிர்வேல். நாம் ராஜபாளையத்தில் தகரக் குடி சை ஒன்றில் வசிக்கும் தங்கம்மாளை சந்தித்தோம்.

""எங்க வீட்டுக்காரரு பேரு முத்துச்சாமி. செந்தட்டி காளைன்னு கூப்பிடுவாக. சரியான தி.மு.க. கிறுக்கு. எந்த நேரம் பார்த்தாலும் பெரியாரு, அண்ணா, கலைஞர்ன்னுதான் பேசிட்டு இருப்பார். அப்ப மூணாரு பக்கம் கேரளாவுல இருக்கிற வண்டிப்பெரியார்ல குடியிருந்தோம். எங்களுக்குத் தேயிலைக் காட்டுலதான் வேலை. காலைல 7 மணிக்கு வேலைக்குப் போனா சாயந்தரம் 6 மணிக்குதான் விடுவாக. அப்பகூட திராவிட நாடு பேப்பர கையில வச்சிக்கிட்டு கொள்கை, அது இதுன்னு பேசிட்டு இருப்பாக. "பார்க்கிறது கூலி வேலை, உனக்கெதுக்குடா கொள்கை'ன்னு மொத லாளி சத்தம் போடுவாக. அதுக்கு "காங்கிரஸ்னு ஒரு பெரிய கட்சி ஒங்க மாதிரி மொதலாளிகளுக்கு இருக்கு. என்னை மாதிரி ஏழைக்குன்னே தி.மு.க. மாதிரி சின்ன கட்சி இருக்கு. நாங்கள்லாம் அரசியல் பேசினா ஒங்களுக்கு கசக்கத்தான் செய்யும். பாருங்க மொதலாளி... ஒங்க கட்சியத் தூக்கி சாப்பிடற மாதிரி எங்க கட்சியும் ஒருநாள் பெரிய கட்சியா வளரத்தான் போகுது'ம்பாரு.



அப்ப 1956-னு நெனைக்கிறேன். கலைஞரும் எஸ். எஸ்.ஆரும் மீட்டிங் பேச வண்டிப்பெரியார் வந்தாங்க. கீழ ஜவுளிக்கடையா இருக்கும். மேல மூணாம் நம்பர் கடைன்னு சொல்லுவாக. அங்க வச்சுத் தான் மீட்டிங். எஸ்.எஸ்.ஆரு, அங்க இருக்கிற மலையாளிகளுக்கு கோவம் வர்ற மாதிரி பேசிப்புட்டாரு. அடுத்து கலைஞர் பேசுறப்ப கல்லெறிய ஆரம்பிச்சிட்டாங்க. அந்தப் பக்கம் உள்ள மலையாளிக ரொம்பப் பொல்லாதவுக. ஆளு சிக்கிட்டா கட்டிவச்சித்தான் அடிப்பாங்க. அவங்க கிட்டயிருந்து இவுகளைக் காப்பாத்த எங்க வீட்டுக்காரரு, எங்க அண்ணன்மாரு சுந்தரம், பொன்னையன்னு மூணுபேரும் சேர்ந்து கலைஞரையும் எஸ்.எஸ்.ஆரையும் அங்கயிருந்து பத்திரமா கூட்டிட்டுப் போயி ஒரு பள்ளிக்கூடத்துல வச்சிருந்து, அப்புறம் அவங்க வந்த ஜீப்புலயே குறுக்கு வழில யாருக்கும் தெரியாம தமிழ்நாட்டுக்கு அனுப்பி வச்சாக. அப்புறம் அனுப்பி வச்சிட்டு திரும்பினப்ப, பத்துப் பதினைஞ்சு மலையாளிக மறிச்சி தடிக்கம்பால் அடி அடின்னு அடிச்சிப்புட்டானுக. காயத்தோட கவருமெண்ட் ஆஸ்பத்திரியில சேர்த்தோம்.

29 நாள்ல சுந்தரம் அண்ணன் செத்துட்டாரு. அடுத்த ஆறாவது நாள்ல பொன்னையன் அண்ணனும் இறந்துட்டாரு. அப்புறம் அங்க இங்க பிடிக்காம, இங்க வந்துட்டோம். அவனுக வயித்துலயே மிதிச்சதுனால, எங்க வீட்டுக்காரருக்கு அடிக்கடி வயித்து வலி வரும். அதனால இங்க இருக்கிறவங்க "வயித்துவலிக்காரன்'னே கூப்பிட ஆரம் பிச்சாக. கலைஞரு முதலமைச்சரா ஆயி பெரிய ஆளான வுடனே, "போயி பாரு... ஏதாச்சும் செய்வாரு'ன்னு ஆளா ளுக்கு அவரத் தூண்டிவிடுவாக. அப்ப இவரு சொல்லுவாரு... "இந்தி எதிர்ப்புப் போராட்டத்துல தாளமுத்து, நடராசனெல்லாம் ஜெயிலுக்குப்போயி செத்தாங்க. இன்னொரு போராட்டத்துல தீரன் சின்னச்சாமி, சாரங்கபாணின்னு 15 பேரு உடம்புல தீ வச்சிக்கிட்டு செத்தாங்க. கட்சிக்காக நான் ஒண்ணும் சாகலியே. "தலைவரே... ஒரு காலத்துல ஒங்க உசிரைக் காப்பாத்து னேன்... அதுக்குப் பிரதி உபகாரமா எனக்கு ஏதாச்சும் செய்யுங்க'ன்னு என்னைக் கேட்கச் சொல்லுறீங்களா? அது ஒருக்காலும் நடக்காதுன்னு அதட்டிச் சொல்லிடுவாங்க.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், ஒட்டுமொத்த தமிழருக்கும் சுயமரியாதையை கற்றுக்கொடுத்த இயக்கம் அல்லவா? அதுல எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத தொண்டனாவே சாகிறதுதான் எனக்குப் பெருமைம்பாங்க. அவங்க செத்து 4 வருஷமாச்சு...'' என கணவரின் இறப்பைக்கூட கலங்காமல் சொன்னபோது இடைமறித்தார் கதிர்வேல்.

""புருஷன் மாதிரியேதான் இவங்களும். முதியோர் பென்ஷனுக்கு எழுதிப் போட்டாங்க. வந்து விசாரிச்ச அதி காரிக... "அதான் உங்களுக்கு மகன் இருக்கான்ல... பென் ஷன் எப்படி கிடைக்கும்'னு கேட்டுட்டுப் போயிட்டாங்க. மகன் செலவுக்குக் கொடுத்தாதானே? அப்படியிருந்தும் இந்த அம்மா "யாராருந்தா என்ன? ரூல்ஸ்ன்னா ரூல்ஸ் தான்... அதிகாரிக சொன்னது சரிதான்'னு சொல்லுறாங்க'' என ஆச்சரியப்பட்டார். (இந்தப் பிரச்சினையில் நக்கீரன் எடுத்த ஆக்ஷன் வரும் இதழில்)

தங்கம்மாளோ தன் கஷ்டத்தை மறந்து தமிழகத் துக்காகப் பேசினார்.

""எத்தனை நல்ல திட்டங்கள் கலைஞரால் மக்களுக்கு கிடைச்சுக்கிட்டிருக்கு. அவரை எதிர்த்து அரசியல் பண்ற வங்களுக்கே நல்லா தெரியும் -அவர் அளவுக்கு ஒரு நல் லாட்சியைக் கொடுக்க முடியாதுன்னு. நான் சாப்பிட் டுக்கிட்டிருக்கிற ஒரு ரூபாய் அரிசி மீது சத்தியம் பண்ணிச் சொல்றேன், ஆறாவது தடவையும் கலைஞர்தான் முத லமைச்சர் ஆவாரு. ஆமா... மீண்டும் அவரை முதலமைச்ச ராக்குறது என்னை மாதிரி ஏழைங்க கையில்தான இருக்கு இதைத்தான் கலைஞரும் சொல்லியிருக்காரு'' என்று நெகிழ்ந்தார். முத்துச்சாமி, தங்கம்மாள் போன்ற தொண்டர் கள் அடித்தளமாக இருப்பதால்தான் எந்த நெருக்கடியி லும் அசைந்து கொடுக்காமல் கம்பீரமாகவே நிற்கிறது தி.மு.க.

-சி.என்.இராமகிருஷ்ணன்
படங்கள் : ராம்குமார்
நக்கீரன்

No comments:

Post a Comment