Search This Blog

Thursday, December 9, 2010

தமிழகத்தில் பிணங்கள் விழுந்தபோது கோவா கடற்கரையில் கும்மியடித்து டூயட் பாடிய ஜெயலலிதா - முதல்வர் கலைஞர்

தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த போது, தமிழ்நாட்டில் பிணங்கள் விழுந்தபோது - கோவா கடற்கரையில் கும்மியடித்துக் கொண்டு `டூயட்' பாடிக்கொண்டிருந்தவர் ஜெயலலிதா. 6-ந் தேதி வெளியிட்ட அறிக்கையை எப்படி தொடங்கினோம் என்பது கூடத்தெரியாமல், 8-ந் தேதி அறிக்கையை தொடங்குகிறார். இந்த லட்சணத்தில், நான் கோமாளித்தனமான அறிக்கைகளை விடுவதாக கூறுகிறார் இந்தக் கொடநாடு கோடீஸ்வரி என்று சாடியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

அ.தி.மு.க. ஆதரவு நாளேடுகளில் 9-ந் தேதி "கருணாநிதி ஆட்சியில் கொள்ளை போகும் அரசு நிலங்கள்'' என்ற தலைப்பில் தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு வீட்டுமனை வழங்கப்பட்டதாக பெரிய அளவில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு நான் தெளிவாக பதில் அறிக்கை கொடுத்திருந்தபோதிலும், அதே குற்றச்சாட்டு மீண்டும் வந்திருப்பதால், அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இந்த வீட்டுமனைகள் யார் யாருக்கு வழங்கப்பட்டன என்பதை சுருக்கமாக சொல்கிறேன்.

ஜெயலலிதா ஆட்சியில் தலைமை செயலாளராக இருந்த என்.நாராயணன் ஐ.ஏ.எஸ்.க்கு 1993-ம் ஆண்டு 4115 சதுர அடி; முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மகன் கே.எஸ்.கார்த்தீசன் என்பவருக்கு பெசன்ட்நகர் பகுதியில் 1995-ம் ஆண்டு 4535 சதுர அடி; முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் துணைவியார் நூர் ஜமிலாவுக்கு கொட்டிவாக்கத்தில் 1993-ம் ஆண்டு 2559 சதுர அடி; நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மனைவி டாக்டர் பானுமதி தம்பிதுரைக்கு அண்ணாநகரில் 7 கிரவுண்ட் நிலம்; அ.தி.மு.க.வின் தொழிலாளர் பேரவைக்கு அண்ணா நகரில் 3 கிரவுண்ட் நிலம்; அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.வேலுச்சாமியின் மனைவி பானுமதிக்கு கோவையில் 1993-ம் ஆண்டு வீடு, 2004-ம் ஆண்டு தேவாரம் ஐ.பி.எஸ்., கே.விஜயகுமார் ஐ.பி.எஸ்., ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ். உட்பட பல ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு சோளிங்கநல்லூரில் தலா 4800 சதுர அடி;

நீதியரசர் எஸ்.ஆர்.சிங்காரவேலுவுக்கு 2005-ம் ஆண்டு சோளிங்கநல்லூரில் இரண்டு மனைகள், சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.செல்வராஜ் என்பவருக்கு 1994-ம் ஆண்டு கொட்டிவாக்கத்தில் 2692 சதுர அடி, முன்னாள் முதலமைச்சரிடம் துணைச் செயலாளராக இருந்த டி.நடராஜன் ஐ.ஏ.எஸ்.க்கு 1995-ம் ஆண்டு திருவான்மியூரில் 6784 சதுர அடி; ஆதி.ராஜாராமுக்கு 1995-ல் 3101 சதுர அடி., 1993-ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சரஸ்வதிக்கு அண்ணா நகரில் 880 சதுர அடி; சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த மல்லிகாவுக்கு அண்ணா நகரில் 950 சதுர அடி; எம்.ஜி.ஆருடைய ஓட்டுநர் பூபதிக்கு நந்தனத்தில் 3600 சதுர அடி; எஸ்.ஆண்டித்தேவரின் மனைவி பிலோமினாவுக்கு 1994-ல் மதுரையில் 1500 சதுர அடி என்று ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. 2005-ம் ஆண்டு பலருக்கு இரண்டு மனைகள் கொடுக்கப்பட்ட நீண்ட பட்டியலும் உள்ளது.

எனவே அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களின் மனைவி, மகன் பெயர்களிலும், அ.தி.மு.க. தொழிற்சங்க அலுவலகத்தின் பெயரிலும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பெயரிலும், அ.தி.மு.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பெயரிலும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளரின் மனைவி பெயரிலும், நீதியரசர்கள் பெயரிலும் இத்தகைய வீடுகள், மனைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதற்கு ஒரு சிலவற்றை மட்டும் சான்றாக குறிப்பிட்டுள்ளேன்.

தி.மு.க. ஆட்சியில் வீட்டுமனைகள் ஒதுக்கீட்டில் தவறு நடந்துவிட்டதாக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட பத்திரிகையாளர்கள் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் யார் யாருக்கு இத்தகைய வீடுகள், மனைகள் தரப்பட்டன என்ற முழு விவரத்தையும் தங்கள் புலன்விசாரணையின் மூலம் தெரிந்து இனியாவது வெளியிட்டால், அவர்களின் பத்திரிகா தர்மத்தை பாராட்டலாம்.

பத்திரிகைகள் இன்று ஜெயலலிதா விடுத்துள்ள ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார்கள். எந்த அளவிற்கு ஜெயா குழப்பம் அடைந்திருக்கிறார் என்பதற்கு ஆதாரம் தேடி நாம் வேறெங்கும் செல்ல தேவையில்லை. அவருடைய அறிக்கையை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். 6-12-2010 அன்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை எப்படி தொடங்குகிறது தெரியுமா?

"ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல, வெள்ளத்தால் தமிழக மக்கள் அல்லல்பட்டு கொண்டிருக்கையில், தன்னுடைய "இளைஞன்'' திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவிலே கலந்துகொண்டு உல்லாசமாக பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி'' - இப்படித்தான் 6-ந் தேதிய ஜெயா அறிக்கை தொடங்குகிறது.

8-12-2010 அன்று மீண்டும் ஜெயலலிதாவின் அறிக்கை ஒன்று வந்துள்ளது. அந்த அறிக்கை எப்படித் தொடங்குகிறது தெரியுமா?

"ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தபோது எப்படி நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தாரோ, அதேபோல் கனமழை காரணமாக தமிழகமே வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், தன்னுடைய அமைச்சரவை சகாக்களுடன் திரைப்பட விழாவில் ஆனந்தமாக பொழுதைக் கழித்து இருக்கிறார் கருணாநிதி'' - இந்த இரண்டு அறிக்கைகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும். 6-ந் தேதி வெளியிட்ட அறிக்கையை எப்படி தொடங்கினோம் என்பது கூடத்தெரியாமல், 8-ந் தேதி அறிக்கையை தொடங்குகிறார் என்றால் அதற்கென்ன காரணம்? ஆத்திரமா? அறியாமையா? திரைப்படத்துறை விழாவிலே நான் கலந்து கொண்டுவிட்டேன் என்ற வயிற்றெரிச்சலா? அல்லது தன்னை யாருமே அழைக்கவில்லையே என்ற பொறாமையா? இந்த லட்சணத்தில்தான் நான் கோமாளித்தனமான அறிக்கைகளை விடுவதாக எழுதியிருக்கிறார் இந்தக் கொடநாடு கோடீஸ்வரி!

அடுத்து ஜெயலலிதா தனது அறிக்கையில் என்ன சொல்கிறார் தெரியுமா? "இதில் திடுக்கிட வைக்கும் உண்மை என்னவென்றால், ஒட்டுமொத்த தமிழக அமைச்சரவையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுதான்'' என்று எழுதியிருக்கிறார். இதில் ஒரு வயிற்றெரிச்சல்! இந்த அம்மையாரின் ஆட்சிக் காலத்தில்தான் இவர் கலந்து கொள்கின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அமைச்சரவையிலே உள்ள அத்தனை பேரும் சென்று கலந்து கொள்வார்கள். ஏன், தற்போது முதல்-அமைச்சராக இல்லாத இந்த காலத்திலே கூட, இவர் கோவை, திருச்சி, மதுரை நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டபோது, இவரது அமைச்சரவை முன்னாள் சகாக்கள், இன்றைய அ.தி.மு.க. முன்னணியினர் அத்தனை பேரும் சென்று கலந்து கொண்டார்கள்.

ஆனால் இப்போது என்ன நிலைமை? 7-ந்தேதியன்று அமைச்சரவை கூட்டம். 5-ந்தேதியன்று காலையில் புதுக்கோட்டை மாவட்ட கழகத்தின் ஆய்வுக்கூட்டம். அந்த கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் என்ற முறையில் நிதியமைச்சர் பேராசிரியர், பொருளாளர் என்ற முறையில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் என்ற முறையில் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச்செயலாளர்கள் என்ற முறையில் துரைமுருகன், பரிதி இளம்வழுதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த அமைச்சர்களில் அன்று மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேராசிரியரைத்தவிர மற்ற நான்கு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த நான்கு பேரைத் தவிர 6ந் தேதி விழுப்புரத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்காக துணை முதல்வர் ஸ்டாலினை அழைத்துச் செல்வதற்காக வந்த உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் திரைப்பட விழாவிலே கலந்து கொண்டார்கள். மொத்தம் 29 அமைச்சர்களில் ஆறேழு பேர்தான் அந்த விழாவிலே கலந்து கொண்டார்கள். ஆனால் ஜெயலலிதா ஒட்டு மொத்த தமிழக அமைச்சரவையும் இந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்டதாக அறிக்கை விடுகிறார் என்றால், அதற்கு என்ன பெயர் சொல்வது?

இந்த ஆறேழு பேரிலும், துணை முதல்வர், பொன்முடி ஆகியோர் நிகழ்ச்சி முடிந்தவுடன் இரவு 9 மணிக்கு மேல் சென்னையிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளிலும், கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் சுற்றிப் பார்த்து விட்டு நிவாரண உதவிகளை வழங்கிவிட்டு, மீண்டும் 7-ந்தேதி அமைச்சரவையிலே கலந்து கொள்ள வந்து விட்டார்கள்.

ஜெயலலிதா மேலும் அவருடைய அறிக்கையிலே வெள்ள நிவாரண பணிகளை பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டினைக் கூறியிருக்கிறார். அதுவாவது உண்மையா? அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அன்றாடம் வெள்ளப்பகுதிகளையெல்லாம் பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை கொடுத்ததின் பேரில், தமிழக அமைச்சரவையே கூடி விவாதித்து பல்வேறு உதவிகளை செய்ய முடிவெடுத்துள்ளது. மத்திய அரசிடம் உதவி கோரிப் பெறுவதென அமைச்சரவையில் முடிவெடுத்து, அதற்கான கடிதமும் அனுப்பப்பட்டுவிட்டது. ஆனால் வெள்ள நிவாரணப் பணிகளிலே நான் அக்கறை செலுத்தவில்லை என்று ஜெயலலிதா அறிக்கை விடுகிறார் என்றால் அதிலே ஏதாவது பொருள் இருக்கிறதா?

கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது - தமிழ்நாட்டில் பிணங்கள் விழுந்தபோது - கோவா கடற்கரையில் கும்மியடித்துக் கொண்டு `டூயட்' பாடிக்கொண்டிருந்தவர் இதே ஜெயலலிதா!

கூட்டணி கட்சியை நான் ஏதோ மிரட்டுவதாகவும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே வழக்கம்போல உளறியிருக்கிறார். பா.ஜ.க. ஆட்சியிலே இருந்தபோது விடுதலை நாளன்று கூட ஜெயலலிதா மிரட்டியதாகவும், தனது வாழ்நாளிலேயே ஜெயலலிதாவோடு கூட்டணியிலே இருந்த காலம்தான் மோசமான காலம் என்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியதை தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்று ஜெயா நினைக்கிறாரா?

நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை ஒப்புக்கொள்கிற வரையில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஓயாது என்று ஜெயலலிதா அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் இவர்தான் ஏகத் தலைவி என்று தானாகவே கற்பனை செய்துகொண்டு அறிக்கையிலே சொல்லியிருக்கிறார்.

நினைப்புதான் பொழப்பை கெடுக்கும் என்று சொல்வார்களே அதுபோலத்தான் எப்படியாவது, ஏதாவது நடக்காதா, அதன் மூலமாக தனக்கு விடிவுகாலம் பிறக்காதா என்றுதான் ஏங்குகிறார். இதற்கிடையே கழக அரசின் சார்பில் செய்யப்படும் சாதனைகள், திட்டங்கள் கண்டு அசூயை கொண்டு, மற்றவர்கள் என்னைப் பாராட்டினால் இவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதிலும் ரஜினிகாந்த், கவிஞர்கள் வாலி, வைரமுத்து போன்றவர்கள் அந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு என்னைப் பாராட்டியதை எப்படி அவரால் பொறுத்துக்கொள்ள முடியும்? அதனால்தான் அறிக்கையிலே அநாகரிகமான வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்துகிறார்.

இறுதியாக ஜெயலலிதா தனது அறிக்கையை முடிக்கும்போது "தான் செய்த பாவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நாள் நெருங்கி கொண்டிருக்கிறது என்பது கருணாநிதிக்கு தெரியும்'' என்று எழுதியிருக்கிறார். செய்த பாவங்களின் பலனை தற்போதே அனுபவித்துக்கொண்டிருக்கும் ஜெயலலிதா என்னுடைய நாள் நெருங்கிக்கொண்டிருக்கின்றது என்பதை ஏதோ அவரது வார்த்தை மூலம் சொல்லியிருந்தால், அதற்காக கவலைப்படுபவன் அல்ல இந்த கருணாநிதி!

அடுத்து ஜெயலலிதா தனது அறிக்கையில் நான் காங்கிரசை மிரட்டுவதாகவும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரசுக்கும் தொடர்பு உண்டு என்பதைப்போல கருத்து தெரிவித்ததாகவும் அவராகவே சொல்லி கொண்டு தி.மு.க.விற்கும், காங்கிரசுக்கும் இடையே கலகம் ஊட்டுகின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நான் "இளைஞன்'' பாடல்கள் வெளியீட்டு விழாவிலே பேசும்போது, ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 352 கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், அது எவ்வளவு பெரிய தொகை, அந்தத்தொகையை ஊழல் செய்திருக்க முடியுமா? என்று பேசினேன். உடனே ஜெயலலிதா காங்கிரசை மிரட்டுவதாக வழக்கம்போல சிண்டு முடியப்பார்க்கிறார். அவரது எண்ணம் நிறைவேறாது என்று கூறியுள்ளார்.

thatstamil

3 comments:

  1. hai who are you why you open a blog in the name of savukku, he is a great man! who brought all DMK corruptions to public with proper proof.
    i think you are from DMK. if you want to open a blog open in different name please dont use savukku, he is some thing special for publics

    ReplyDelete
  2. there is no comments for your articles. it reveals that no body is believing your articles

    ReplyDelete
  3. www.savukku.net
    இதுதான் சவுக்கின் உண்மையான வெப்சைட் , நீங்கள் படித்து கொண்டு இருக்கிறது DMK அல்லக்கை உடையது , இவர்கள் கேடு கெட்டவர்கள் என்பதற்கு இந்த ப்ளாக் ஒரு சிறந்த உதாரணம் , எந்த அளவுக்கு கீழே இறங்குவார்கள் என்பதை இவர்கள் எல்லோருக்கும் சொல்லாமல் சொல்கிறார்கள்

    ReplyDelete