Search This Blog

Tuesday, November 23, 2010

சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்

"2ஜி' அலைக்கற்றை பிரச்னையை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரி மாற்றப்பட்டதற்கான காரணத்தை ஆதாரத்துடன் விளக்கத் தயாரா? என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு முதல்வர் கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.

அதிகாரி ஏன் மாற்றப்பட்டார் என்பதற்கு கருணாநிதி விளக்கம் அளிக்க முடியுமா? என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

"2ஜி' அலைக்கற்றை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரி ஏன் மாற்றப்பட்டார் என்பதற்கு விளக்கம் கேட்டு தன்னைப் போலவே என்னையும் நினைத்துக் கொள்கிறார் ஜெயலலிதா.

இன்றைக்கு என்னைப் பார்த்து சி.பி.ஐ. அதிகாரியை மாற்ற யார் காரணம் என்று கேட்டிருக்கிறார். அதற்கு நான் காரணமல்ல; நிச்சயமாக நான் காரணம் அல்ல. இதற்கு மேலும் உங்களிடம் ஆதாரம் ஏதாவது இருக்குமானால் அதை ஆதாரத்துடன் சொல்லத் தயாரா?

அதிகாரிகள் மாற்றம்: ஜெயலலிதா மத்தியில் உள்ள அரசுடன் தோழமையாக இருந்த காலத்தில் சில அதிகாரிகளின் பெயர்களை தன் கைப்படவே எழுதி அவர்களையெல்லாம் மாற்ற வேண்டும் என்றும், அவர்களுக்குப் பதிலாக தான் குறிப்பிடும் நபர்களை அந்த இடத்திலே நியமிக்க வேண்டுமென்றும் கோரியது எல்லா பத்திரிகைகளிலும் செய்தியாக வெளிவந்தது.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அரிபாஸ்கர், சி.ராமச்சந்திரன் ஆகியோரின் தாற்காலிக வேலை நீக்கங்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்; என்.எல்.சி., முன்னாள் தலைவரும், நிர்வாக இயக்குநருமான பூபதியின் இடைக்கால வேலை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அதிகாரிகள் பெயர்கள் அடங்கிய பெரிய பட்டியல் ஜெயலலிதாவினால் கொடுக்கப்பட்டது.

அவற்றை ஏற்க மத்தியில் அப்போதிருந்த பாஜக அரசு முன்வரவில்லை. மத்திய அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் கவிழ்க்கப்பட்டது.

அரசியல் உள் நோக்கமா? அலைக்கற்றை பிரச்னையில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்றால், நாடாளுமன்ற கூட்டுக் குழுவினை கேட்டுப் பெற வேண்டியதுதானே என்று ஜெயலலிதா சொல்கிறார்.

அலைக்கற்றை விவகாரத்தில் தவறு நடந்திருக்கிறது என்றால், தணிக்கைத் துறை அதிகாரியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட பிறகு அதைப் பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு உரிய பதிலளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என பிரதமரும், மத்திய அமைச்சர்களும் மீண்டும் மீண்டும் உறுதி அளித்துள்ளனர்.

அதற்கு முன்வர பாஜகவும், இடதுசாரிகளும் தயங்குவது ஏன்? முறைப்பட மக்களவையில் விவாதிக்கப்பட்ட பிறகு, அந்த அறிக்கை அனுப்பப்பட வேண்டிய பொதுக்கணக்குக் குழுவின் முன்னால் கொண்டு போகப்பட்டு, அந்தப் பொதுக் கணக்குக் குழுவிடம் விவரங்களைத் தெரிவிக்க வேண்டியதுதானே? அந்தக் குழுவின் தலைவராக அவர்களுக்கு வேண்டிய பாஜகவின் முக்கிய தலைவர் ஒருவர்தானே இருக்கிறார்.

தணிக்கைக் குழு அறிக்கையில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டால் இதற்கு முன்பெல்லாம் பொதுக் கணக்குக் குழுவின் முன்னால்தான் விசாரிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது மட்டும் அதற்கு இணங்காமல் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக் குழு வேண்டுமென்று கேட்பது ஏன்? இதிலே என்ன அரசியல் உள்நோக்கம் இடம் பெற்றுள்ளது?

தகுதி போதாது: பெரியாரின் கொள்கைகள், அண்ணாவின் கோட்பாடுகளை நான் அடகு வைத்து விட்டதாக ஜெயலலிதா கூறியுள்ளார். ""விநாயக சதுர்த்தி'', ""சரஸ்வதி பூஜை'' போன்ற நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் வாழ்த்துச் செய்தி கொடுத்தும், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு விமானத்திலே பறந்துச் சென்று ரங்கநாதருக்கு பூஜை நைவேத்தியங்கள் செய்தும் ஜெயலலிதா, பெரியாரின் கொள்கைகளையும், அண்ணாவின் கோட்பாடுகளையும் காப்பாற்றுவதைப்போல நான் காப்பாற்றவில்லைதான்.

எனது அரசியல் குருகுலமே பெரியாரின் ஈரோட்டில் தொடங்கியது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, எனது கொள்கை, கோட்பாடு பற்றி விமர்சிக்க ஜெயலலிதாவுக்கு தகுதி போதாது. அடையாறு பகுதியில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டப் போவதாக அறிவித்து, அங்கு அடிக்கல் நாட்டினார்.

அங்கு நடந்த பூஜையில் கிரானைட் கல் வைக்கப்பட்டு அதில் தனலட்சுமி உருவம் பொறிக்கப்பட்டு இருந்தது. முதல்வர் ஜெயலலிதா கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்தார். பய பக்தியுடன் சாமி கும்பிட்டார்.

கற்பூர ஆரத்தியைத் தொடர்ந்து, தன் கைப்பட விபூதி குங்கும பிரசாதத்தை அனைவருக்கும் வழங்கினார் ஜெயலலிதா. இப்படிப்பட்டவருக்கு பெரியாரின் கொள்கை, அண்ணா கோட்பாடுகளைப் பற்றி பேசுவதற்கு ஏதாவது தகுதி இருக்கிறதா என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
http://www.dinamani.com/edition/story.aspx?artid=335849&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu

No comments:

Post a Comment