Search This Blog

Friday, November 19, 2010

எம்.ஜி.ஆர் விசுவாசிகளுக்கு கலைஞர் தரும் காப்பகங்கள் -எழுத்தாளர் சோலை


திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டிலிருந்து உசிலம்பட்டி செல்லும் சாலை, வைகை ஆறு கரைபுரண்டு ஓடுகிறது. அதனை அடுத்து விருவீடு என்ற கிராமம்.

விருவீடு என்றால் தமிழ்மாறன் நினைவுக்கு வருவார். சுயமரியாதை இயக்க காலம் தொட்டு திராவிட இயக்க அரசியலில் கால் ஊன்றியவர். கழகம் நடத்திய போராட்டங்களில் சிறை சென்றவர். எழுபத்தி ஐந்து வயது கடந்துவிட்ட அவரை சந்தித்தோம்.

கலைஞரின் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் விருவீட்டில் இரண்டு வீடுகள் கட்டப்படுகின்றன. பயனாளிகள் இருவருமே அ.தி.மு.கழக உறுப்பினர்கள்.

ஒருவர் பெயர் மொக்கையன் -எம்.ஜி.ஆர். மன்றத் துணைத்தலைவர்.

இன்னொருவர் பெயர் பெரியகருப்பன் -அ.தி.மு.க. ஒன்றிய கிளை அவைத்தலைவர்.

நம்பமுடியவில்லை. இது உண்மைதானா என்று தமிழ்மாறனைக் கேட்டோம்.

""அவர்கள் உணர்வுபூர்வமான அ.தி.மு.க.வினர்தான். ஆனால் சரியான தேர்வு. "சொந்த இடத்தில் மண் குடிசைகளில் குடியிருப்பவர்களா? ஜாதி, மதம் அரசியல் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு கான்கிரீட் வீடுகளைக் கட்டித்தரவேண்டும்' என்பது கலைஞரின் திட்டம். அமைச்சரோ மாவட்ட கழகத்தினரோ தலையிடவில்லை. பயனாளிகளை அதிகாரிகளே தேர்வு செய்தார்கள். அதனை ஏற்றுக்கொண்டோம்'' என்றார் தமிழ்மாறன்.

""இங்கே ஆடிக்காற்று வீசினால் அம்மியும் பறக்கும். வைகை அணை நிரம்பினால் வாடைக்காற்று வீசும். இத்தகைய இயற்கை இடையூறுகளுக்கு மத்தியில்தான் மொக்கையனும் பெரியகருப்பனும் இத்தனை ஆண்டு களாக குடிசைகளில் வாழ்ந்து வந்தனர். இனி கொட்டும் மழையோ, மார்கழிப் பனியோ கூட அவர்களை எட்டிப்பார்க்காது. அந்த அளவிற்கு இரண்டு வீடுகளும் பக்காவாக எழும்பி வருகின்றன என்றார்'' தமிழ் மாறன்.

அடுத்து நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நோட்டம் விட்டோம். மட்டப்பாறை என்பது சுதந்திரப் போராட்டத்தில் முன்னின்ற கிராமம். இந்தக் கிராமத்தின் அ.தி.மு.க. கிளைச்செயலாளர் காயாம்பு, கடையம்பட்டி அ.தி.மு.க. கிளைச் செயலாளர் முத்துப்பாண்டி, முசுவனூத்து அ.தி.மு.க. கிளைச்செயலாளர் இளங்கோவன், குரும்பட்டி அ.தி.மு.க. செயலா ளர் செல்வமணி ஆகிய அனைவருக்கும் கலைஞர் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் எழும்பிக்கொண் டிருக்கின்றன. வானத்தில் விடிவெள்ளி பூத்தது போல் இவர்களுடைய வாழ்க்கையிலும் மெய்யாகவே விடிவெள்ளி பூத் திருக்கிறது.

துணை முதல்வர் ஸ்டாலின் முன்னர் திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தை துவக்கி வைத்தார். அண்மையில் மைக்கேல்பாளையம் சமத்துவபுரத்தைத் திறந்து வைக்க வந்தபோது கட்டி முடிக்கப்பட்ட 150 வீடுகளிலும் பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கினார். அவைகள் சாவிகள் அல்ல, வாழ்க்கையின் திறவுகோல்கள். அப்படி புதிய வீடுகள் பெற்றவர்களில் அ.தி.மு.க.வினர் உண்டு. காங்கிரஸ் அனுதாபிகள் உண்டு. கம்யூனிஸ்ட் அனுதாபிகள் உண்டு. ஆனால் தி.மு.க.வினர் இல்லை. கந்தகச் சொற்களால் கலைஞரை அர்ச்சித்தவர் களுக்குக்கூட கான்கிரீட் வீடுகள் கிடைத்திருக்கின்றன.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விசுவநாதனின் தொகுதி நத்தம். குன்றுகளும் மேடு பள்ளங்களும் நிறைந்து மலைவளம் மிக்க பூமி. இந்தத் தொகுதியில் இதுவரை கலைஞரின் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் அதிகம் பயன்பெற்றவர்கள் அ.தி.மு.கழகத்தினர்தான்.

திம்மணநல்லூர் அ.தி.மு.க. கிளைச் செயலாளர் சவுந்தரபாண்டியன், பூவ கிழவன்பட்டி கிளை பொருளாளர் வெள் ளைச்சாமி, வி.மேட்டுப்பட்டி கிளைச் செய லாளர் முருகேசன், கோணப்பட்டி கிளை பிரதிநிதி வெள்ளைச்சாமி, ஆலம்பட்டி (செங்குறிச்சி) கிளைச் செயலாளர் ஆண்டிப் பூசாரி, கொத்தனவாம்பட்டி கிளைச் செயலாளர் செல்லம்மாள், பாண்டியனூர் கிளைச்செயலாளர் பாண்டியராஜ், செங்குறிச்சி தே.மு.தி.க. பிரமுகர் பஜார் அழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செங்குறிச்சி வெள்ளைச்சாமி என்று சர்வ கட்சியினரின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

ஏழை-எளிய மக்கள் ஆழ்ந்த உறக்கத்தின் கனவு களில்தான் வீடுகளைக் கண்டு கொண்டிருந்தார்கள். வீட் டைக் கட்டிப்பார் என்று எக்காளமாகக் கூறுவார்கள். தங்க ளாலும் கட்டிடமாக வீடுகள் கட்டிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எளிய மக்களுக்குப் பூத்திருக்கிறது. அந்த நம்பிக் கை தீபத்தை இதுவரை எந்த அரசியல் கட்சியும் ஏற்றி வைத்ததில்லை. எந்தத் தலைவரும் உயர்த்திப் பிடித்ததில்லை. சரித்திரத்தில் நிலையாக நிற்கப்போகும் அந்தச் சாத னைக்கு கலைஞர்தான் கால்கோல்விழா நடத்தியிருக்கிறார்.

கான்கிரீட் வீடுகளெல்லாம் தி.மு.கழகத்தினருக் குத்தான் கட்டித் தரப்படுகின்றன என்று, விசாரிக்காது செல்வி ஜெயலலிதா தாக்குதல் தொடுத்திருக்கக்கூடாது. அதனை நிரூபித்தால் மந்திரி பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று துணை முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்தார்.

ஆத்தூர் ஒன்றியம் பாறைப்பட்டி அ.தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி சண்முகவேல், ஆரியநல்லூர் கிளைச் செயலாளர் நடராசன், மணலூர் கிளைக்கழக அவைத்தலைவர் ஒச்சு, வக்கம்பட்டி எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் வெள்ளைச்சாமி, அவைத்தலைவர் பெரியசாமி, பழைய வக்கம்பட்டி ஒன்றிய பிரதிநிதி முத்துவெள்ளை ஆகியோருக்குக் கூட கலைஞரின் கான்கிரீட் வீடு கட்டும் திட்டம் கைகொடுத்திருக்கிறது.



இந்தத் திட்டத்தை முதல்வர் அறிவித்தபோது நாணயமான நல்ல உள்ளங்கள் வரவேற்றன. 75 ஆயிரம் ரூபாயில் எப்படி வீடு கட்ட முடியும்? வேண்டு மானால் கோழிக் கூடாரம் கட்டலாம் என்று கோழி மனம் படைத்தவர்கள் கேட்டனர். விலைவாசி உயர்வில் இது எப்படி சாத்தியம் என்றும் புலம்பினார் கள். இப்படி வக்கணை பேசியவர்கள் வாயடைத்துப் போனார்கள்.

சுற்றுலாச் சென்றவர்களுக்கு கொடைக்கானல் குளிரின் மகிமை தெரியும். ஆண்டின் ஒன்பது மாதங்கள் பனிப்பொழிவில் மூழ்கிப்போகும். அந்த மலைப்பிரதேசத்திலும் மண்குடிசைகளில் மக்கள் வாழ்கிறார்கள். முதல்வருக்குத்தான் தெரிந்திருக்கிறது.

இப்போது முதல் கட்டமாக, கொடைக்கானல் ஒன்றியத்தில் 15 ஊராட்சிகளில் 303 கான்கிரீட் வீடுகள் கட்டப்படுகின்றன. கூக்கால் கிராம அ.தி.மு.க. பொருளாளர் பரமசிவன், அம்மா பேரவைச் செயலாளர் மணிகண்டன், அவர்களோடு பத்திற்கும் அதிகமான அ.தி.மு.க. உறுப்பினர்கள். வில்பட்டி அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஐவரோடு தே.மு.தி.க. உறுப்பினர் ராஜா, பள்ளங்கி அ.தி.மு.க. கிளைச் செயலாளர் கர்ணன், கானல்காடு அவைத் தலைவர் ராஜாக்கிளி, பொருளாளர் பொம்மன், அ.தி.மு.க. மகளிர் அணியைச் சேர்ந்த கூக்கால் பழம்புத்தூர் ருக்மணி அம்மாள், கூக்கால் லோகாம்பாள், கானல்காடு குருவம்மாள் ஆகியோரின் குடிசைகள் மறைந்து விட்டன.

கான்கிரீட் வீடுகள் எழும்பு கின்றன. இனி அவர்களை பல் கிட்டும் பனியோ, இதயத்தை உலுக்கும் குளிரோ, நனைக்கும் அடைமழையோ, மூதாட்டியைப் போல முணுமுணுக்கும் சாரல் மழையோ எட்டிப் பார்க்காது. அரசியல் எப்படியிருந்தாலும் இவர்களெல்லாம் இதுவரை செங்குருதிக் கண்ணீரில் சோகச்சித்திரம் தீட்டிக்கொண்டிருந்தவர்கள் தானே?

அ.தி.மு.க. பயனாளிகளைப் படமெடுக்க புகைப்பட நிபுணர் உதயசூரியன் நெருங்கியபோது வெட்கப்பட்டு மறைந்துகொண்டார்கள். பலர் ஓடியேவிட்டார்கள். ஆனாலும் அவர்கள் அனைவருமே குடியிருக்க வீடு தந்த கலைஞருக்கு நன்றி சொல்கிறார்கள்.

அன்று எம்.ஜி.ஆர். உங்கள் வீட்டுப்பிள்ளை; இன்று கலைஞர் உங்கள் வீட்டுப்பிள்ளை இல்லையா என்றால் "மவராசன்' என்று கரம் கூப்பித் தொழுகிறார்கள். அவர்களுடைய மனதின் மவுனம் கலைகிறது.

"திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் அடுத்த மாத (டிசம்பர்) இறுதிக்குள் 17 ஆயிரத்து 895 மண் குடிசைகள் கான்கிரீட் வீடுகளாகக் கட்டி முடிக்கப்படும் என்கிறார்' மக்கள் தொடர்பு அதிகாரி குர்ஷிதாபேகம்.

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் அரசின் எல்லா நலத் திட்டங்களும் எல்லா கிராமங்களையும் எட்டிவிட்டன. சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கழகம் வெற்றிபெற்ற நிலக்கோட்டை, நத்தம் தொகுதிகளிலும், காங்கிரஸ் வெற்றிபெற்ற வேடசந்தூர் தொகுதியிலும்தான் அதிக அளவில் கான்கிரீட் வீடுகள் கட்டப்படுகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் அ.தி.மு.க.வைச் சார்ந்த ஏறத்தாழ 3 ஆயிரம் பேர் கான்கிரீட் வீடுகள் பெறுவார்கள் என்று கணக்கிடுகிறார்கள்.

மண் குடிசையில்லாத் தமிழகம் எவ்வளவு உயர்ந்த லட்சியம்? அந்த லட்சியம் நிறைவேற அரசியல் வேலிகளை உடைத்துப் போட்டுவிட்டார்கள்
.
ஆறு ஆண்டுகளில் மூன்று லட்சம் மண் குடிசைகள் மறையும். அங்கே கான்கிரீட் வீடுகள் காட்சி அளிக்கும்.

உள்ளாட்சித் துறைக்கும் அமைச்சர் என்ற முறையில் இந்தத் திட்டத்திலும் இந்த ஆண்டு இலக்கை எட்டுவதில் துணை முதல்வர் முனைப்பாக இருக்கிறார். பம்பரம் போல் பணிகள் வேகமாகச் சுழல்கின்றன. இந்தவார முன்னேற்றம் என்ன என்று துணை முதல்வர் வாரம்தோறும் கேட்கிறார். திட்டத்தை முடிக்காது ஓய்வு கொள்ள நேரமில்லை என்பதனை அதிகாரிகளும் ஊழியர்களும் உணர்ந்துவிட்டனர்.

இளகிய நெஞ்சத்தின் காணிக்கைதான் கான்கிரீட் வீடுகள் என்பது அவர் களுக்கு புரிந்து விட்டது.
நக்கீரன்
படங்கள் : உதயசூரியன்

1 comment:

  1. உண்மையில் இதற்கு கிருஷ்ணம்மாள் வீடு வழங்கும் திட்டம் என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் 1969ஆம் ஆண்டில் கீழ்வென்மணியில் விவசாயக்கூலிகள் கூலியுயர்வு கேட்டார்கள் என்பதற்காக எரித்துக் கொல்லப்பட்ட பொழுது, அந்தக் கூலிகளை நிலவுடமையாள......ர்களாக மாற்றுவேன் எனச் சப்தம் ஏற்று அவ்வாறே ஆக்கிக் காட்டிய காந்தியவாதியான கிருஷ்ணம்மாள் ஜெகநாதனின் திட்டம்தான் குடிசையற்ற தமிழகம் என்பது. அதன்படி திருவாரூர், நாகபட்டினம் மாவட்டங்களில் அத்திட்டத்தைச் செயற்படுத்தி 10000 குடிசைகளை வீடுகளாக மாற்றினார். அவருக்கு கடந்த ஆண்டு தமிழக அரசு விருது வழங்கியது. அவ்விழாவில் தன்னுடைய திட்டத்தையும் அதன் வெற்றியையும் பற்றி அவர் பேசினார். அதனை உற்றுக் கேட்ட கருணாநிதி அத்திட்டத்திற்கு தன்னுடைய பெயரைச் சூட்டிக் கொண்டார்.

    ReplyDelete