Search This Blog

Sunday, November 21, 2010

தோழர்களை ஒதுக்கும் தா.பாண்டியன்

கிருஷ்ணகிரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் ஒட்டுமொத்தமாக மார்க்சிஸ்ட் கட்சியில் ஐக்கியமாகிக்கொண்டிருக் கிறார்கள்.

ஏன்?

""தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்தான் முக்கிய காரணம்'' என்கிறார்கள் கட்சி மாறிய தோழர்கள்.
"தாய் கட்சியான சி.பி.ஐ.யில் இருந்து வெளியே சென்ற தா.பா 15 ஆண்டு காலம் யு.சி.பி.ஐ. என்ற இயக்கத்தை நடத்தி வந்தார். பிறகு மீண்டும் தாய் கட்சியில் இணைந்து கொண்ட தா.பா., மாநில செயலாளர் ஆனவுடன் பழைய சி.பி.ஐ. தோழர்களை இனம் கண்டு ஒதுக்க ஆரம்பித்தார்.  இதுதான் எங்களை சோர்வடைய வைத்தது.

குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா.செ. நாகராஜாரெட்டி 2006-ல் எம்.எல்.ஏ.வுக்கு போட்டியிட்டபோது, கட்சி கட்டுப்பாட்டை மீறி சி.பி.எம்.மை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற இராமச்சந்திரன், இலகுமைய்யாவை மாவட்ட கமிட்டியின் ஆலோசனை இன்றி கட்சியில் சேர்த்துக் கொண்டார். இதன் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சி.பி.ஐ. பழைய தோழர்களுக்கு சிறு மரியாதைகூட கிடைக்கவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக உள்கட்சி பிரச்சினை வெடித்து கொண்டு வந்தது.  இதன் பிறகு மாவட்ட கூட்டம் கூட்டாமல் இயக்கம் நடத்தியது, பழைய சி.பி.ஐ. தோழர்களை புறக்கணித்தது, அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட மாநாடு நடத்தியது, விவசாயிகள் சங்க மாநில மாவட்ட மாநாடு நடத்தியது  என எங்கள் தன்மானத்தை, கொள்கை பிடிப்பை சீண்டி பார்த்தனர்.

அதனால்தான் மொத்த கிளைகளையும் கலைத்து விட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டில் இணைவது என்று முடிவெடுத்து என் தலைமையில் 30 கிளை பொறுப்பாளர்கள், சி.பி.எம். மாவட்ட செயலாளர் டி.ரவீந்திரன் முன்னிலையில் இணைந்தோம்'' என்கிறார் ஊத்தங்கரை வட்ட செயலாளர் ஆர்.சபாபதி.

இது மட்டும் இல்லாது 20-ம் தேதி மாவட்ட குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, தேவராஜ், சின்னராசு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் போச்சம்பள்ளி வட்டம் இணைகின்றது. 22-ம் தேதியன்று மாவட்ட செயலாளர் நாகராஜாரெட்டியும் இணைகின்றார் என்றும் சொன்னார்கள் தோழர்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சி.பி.ஐ. கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு குறித்தும் மா.செ. நாகராஜாரெட்டியிடம் பேசினோம். ""கட்சி பிரச்சினைகளை வெளிப்படையாக கூற முடியாது. ஆனால் இந்த போக்கு கட்சி வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும்'' என்றவரிடம் "22-ம் தேதிக்கு பிறகு நீங்களும் கட்சியை விட்டு விலக போவதாக பேசப்படுகின்றதே' என்றதற்கு ""பொறுத்திருந்து பாருங்கள்; சில கருத்துகளுக்கு பதில் கூற முடியாது'' என்றார். ஆனால் சி.பி.ஐ. தோழர்களோ ""இலகுமைய்யா மற்றும் இராமசந்திரனின் முதலாளித்துவ போக்கை தலைமை கண்டுகொள்ளாத காரணத்தால் பழைய சி.பி.ஐ. தோழர்கள் சி.பி.எம்.முக்கு மாறுகின்றனர்'' என்று தெளிவாக பதில் கூறுகின்றனர்.

-வடிவேல்- நக்கீரன்

No comments:

Post a Comment