Search This Blog

Friday, October 1, 2010

சிங்கள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டுமே தமிழர்களை வஞ்சிக்கின்றன நாடாளுமன்ற உறுப்பினர் வெளிப்படுத்துகிறார்

சிறீலங்காவின் பிரதானக் கட்சிகளான, ஆளும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான அய்க்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டுமே, வடக்கு - கிழக்குப் பகுதிகளுக்கு உரிய அதிகாரம் தருவதை மறுத்து அரசியல் தீர்வுக்குத் தடை உண்டாக்கி, தமிழர்களை வஞ்சிப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளு மன்ற உறுப்பினர், சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகத்திற்கு (பிபிசி) இலங்கையின் எதிர்க்கட்சியான அய்க்கிய தேசியக் கட்சியின் (யு.என்.பி.) பொதுச்செயலாளர், திஸ்ஸ அட்டநாயகெ, செப்டம்பர் 28 இல், ஒரு நேர்காணல் அளித்தார். தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் தோற்ற பின்பு, சிறீலங்கா மக்கள் தமிழ்ப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு வேலை செய்யவேண்டும், இனப் பிரச்சி னைக்குத் தீர்வு காண்பதில் காலத்தைச் செலவு செய்யக்கூடாது என, அந்த நேர்காணலில் கூறியிருந்தார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன், அய்க்கிய தேசியக் கட்சி, தன்னுடைய உண்மையான வண்ணத்தைக் காட்டிவிட்டது என்றும், ஆளும் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வேறு படவில்லை என்றும் கூறினார். இரண்டு கட்சிகளுமே தமிழர் பகுதிகளுக்கு உரிய அதிகாரங்கள் அளிப்பது குறித்து அக்கறை காட்டவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆயுதம் தாங்கிய போராளிகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் வரைதான், சிங்களரின் தலைவர்கள் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் அளிப்பதைப் பற்றிப் பேசுவார்கள் என்றும் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment