Search This Blog

Friday, October 1, 2010

இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களை அறவே இல்லாமல் செய்வதற்கான ஒரு பணியில் அந்நாட்டு அரசாங்கம் செயல்பட்டு வருவதை உலகம் உணர்ந்து கொண்டு விட்டது.

பன்னாட்டு சட்ட வல்லுநர்கள் ஆணையத்தின் படப்பிடிப்பு
இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களை அறவே இல்லாமல் செய்வதற்கான ஒரு பணியில் அந்நாட்டு அரசாங்கம் செயல்பட்டு வருவதை உலகம் உணர்ந்து கொண்டு விட்டது. இந்திய அரசாங்கத்தைத் தவிர உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகளுக்கு இந்நிலை மிகவும் நன்றாகவே புரிந்துகொண்டு இருக்கிறது.
இந்தியாவில் சிறுபான்மை மக்கள் இரண்டாம் தர மக்களாக வாழ ஒப்புக்கொள்ளவேண்டும் என்று இங்குள்ள சங் பரிவார்க் கூட்டம் சொல்லி வருவது போல இலங்கையிலே உள்ள அரசும், இனவெறியர் களும் (புத்த பிக்குகள் உள்பட) அங்கு சொல்லி வருகின்றனர்.
அழித்து முடிக்கப்பட்ட பல லட்சம் தமிழர்கள் போக எஞ்சிப் பிழைத்துள்ள தமிழர்களுக்கான வாழ்வுரி மைக்கு உத்தரவாதம் தேவை என்பதற்காகப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே இந்தத் திசையில் கருத்துத் தெரிவித்துள்ளார்; நியாயத்தை, உண்மையை உணருபவர்கள் இன்னும் இலங்கைத் தீவிலே ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று சொல்லிக் கொள்ள இது பயன்படக் கூடும்.
இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களின் இந்த அவல நிலை மாற்றப்படவேண்டும் என்ற குரல் உலகம் முழுவதும் அழுத்தமாக ஒலிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா, லண்டன் போன்ற இடங்களில் போராட்டக் குரல் வலுவாக ஒலித்திருக்கிறது. அய்.நா. மன்றத்தின் முன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பரித்து எழுந்துள்ளனர்.
தும்பை விட்டு வாலைப் பிடிப்பதுபோல அய்.நா. மன்றம் தூக்கத்திலிருந்து கொஞ்சம் விழித்து அரை குறையாக நியாயம் பேச ஆரம்பித்தது.
ஈழத் தமிழர்களின் இன்றைய நிலையை நேரில் கண்டுவர, அய்.நா. ஒரு தூதுக்குழுவை அனுப்பிட முடிவு செய்த நிலையில், இலங்கை அமைச்சரே போராட்டம் நடத்துகிறார் - அந்தக் குழுவை அனுமதிக்கமாட்டோம் என்று ஆணவத்துடன் குரல் கொடுக்கின்றனர் என்றால், இதன் தன்மையைப் புரிந்துகொள்ளவேண்டாமா? மடியில் கனமில்லை என்றால், வழியில் பயம் இருக்காது என்ற பழமொழி ஒன்று உண்டு.
இலங்கை அரசு - அய்.நா.வின் ஆய்வுக்குழுவை அனுமதிக்க மறுத்ததன்மூலம், அதன் மடியில் உள்ள கனம் எவ்வளவுப் பெரியது என்பதை எளிதிற் தெரிந்துகொள்ளலாம்.
அய்.நா.வின் குழுவை அனுமதிக்க மறுத்த நிலையில், அய்.நா.வே முன்வந்து உரிய நடவடிக் கைகளை மும்முரமாக எடுக்க முன்வந்திருக்க வேண்டும். ஏதோ ஒப்புக்காக அந்த நிலையை எடுத்தது - அதோடு சரி என்ற முடிவுக்குத்தான் வரவேண் டியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டுச் சட்ட வல்லுநர் ஆணையம், முகத்தில் அறைந்ததுபோல் இலங்கை அரசின் உரிமை மீறலை - சட்ட மீறலை எடுத்துக் கூறியுள்ளது.
இந்த உலக அமைப்பில் 60 சட்ட வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். இலங்கையில் சிறீலங்கா அரசின் நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் பார்ப்பன சக்திகள், பார்ப்பன ஊடகங்கள் ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் குரல் கொடுப்பவர் களை இனவெறியர்கள் என்று முத்திரை குத்துகின் றனவே - இந்த பன்னாட்டு சட்ட வல்லுநர்கள் திட்டவட்டமான வகையில், இலங்கை அரசின் சட்ட மீறலைப் பிசிறின்றி வெளிப்படுத்தியிருக்கிறார்களே - இதற்கு எந்த உள்நோக்கத்தைக் கற்பிக்கப் போகிறார்கள்?
சந்தேகத்தின் பேரில் 8000 பேர்களை இலங்கையில் சிறைகளில் அடைத்திருப்பது - உலகில் எங்கும் நடைபெறாத மிகப்பெரும் அளவிலான நிருவாகச் சிறைப்பிடிப்பு என்று உலகின் சட்ட வல்லுநர்கள் கூறிவிட்டனரே- இதற்குப் பிறகாவது இங்குள்ள ஆரிய வெறியர்கள் கண் திறந்து பார்க்கவேண்டாமா? இந்திய அரசு நெடும் உறக்கத்தைவிட்டு எழுந்தருள் புரியவேண்டாமா?
செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளுக்குக் கூட - சிறையில் இருக்கும் கைதிகளைக் காண்பதற்கு அனுமதி கொடுக்காததை பன்னாட்டு சட்ட மய்யம் சுட்டிக்காட்டிக் கண்டித்துள்ளதே!
திராவிடர் கழகம் தமது பொதுக்குழு, தலைமைச் செயற்குழு கூட்டங்களிலும், சீர்காழி வரை நடைபெற்ற மண்டல மாநாடுகளிலும் தொடர்ந்து நிறைவேற்றிக் கொடுத்த தீர்மானங்கள்தான் - இப்பொழுது பன்னாட்டுச் சட்ட வல்லுநர் ஆணையத்தின் எச்சரிக்கையாக வெளிவந்துள்ளன.
இத்தகு ஆணையங்களுக்கு எந்த அளவு சட்ட அங்கீகாரம் என்பது ஒரு பிரச்சினைதான் என்றாலும், இந்த அமைப்பு உலகில் பல முக்கிய நகரங்களில் கருத்துரு வாக்கத்தை உருவாக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவது - அதன் மனிதநேயத்தை மேலும் உயர்த்திக் காட்டும் செயலாக இருக்க முடியும்.

No comments:

Post a Comment