Search This Blog

Tuesday, June 18, 2013

தமிழர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட உயிரையும் கொடுக்கத் தயார்

தமிழர்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்புத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்பட வைக்க உயிரையும் கொடுத்து போராடுவோம் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்.
திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நேற்று (17-6-2013) சென்னை, கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற தி.மு.க.நிர்வாகக்குழுக் கூட்டத்தில் கலைஞர் அவர்கள் ஆற்றிய நிறைவுரை வருமாறு:-

நான் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண் டிருக்கின்ற நிலையில், இன்றைய நிர்வாகக் குழு நடைபெற்று தீர்மானங்களையும் நீங்கள் நிறை வேற்றிக் கொடுத்திருக்கின்றீர்கள்.   ஏன் பல ஆண்டு களாக எதிர்பார்த்த நிலை என்று சொன்னேன் என்றால்,  எப்போதுமே நம்முடைய  செயற்குழு, பொதுக் குழு, நிர்வாகக்குழு இவைகளில், தீர்மானம் என்பது ஏதோ ஒரு துணைச் சடங்காகத்தான் கருதப்பட்டு,  எல்லோரும் பேசி முடித்த பிறகு,  ஒருவர் எழுந்து தீர்மானங்களைப் படித்து இதை யெல்லாம் நிறைவேற்றியதாக எடுத்துக் கொள் கிறோம் என்று சொல்வதுதான் சர்வ சாதாரணமாக நடைபெற் றிருக்கின்றது.  ஆனால் இன்றைக்கு அதற்கெல்லாம் முற்றிலும் மாறுபாடாக, ஒவ்வொரு தீர்மானத்தையும்  தீர்மானக் குழு ஏற்கனவே  கலந்து பேசி, எழுதி, உங்கள் முன்னால் வைத்து  நிறை வேற்றி, முடிவுரைக்கு என்னிடத்திலே வழங்கியிருக் கிறார்கள் என்பதை எண்ணும்போது, இப்படித் தான் நம்முடைய செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகக் குழு இனிமேல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற அந்த எண்ணத்தை நான் கொள்ளுகின்றேன்.
இதை நீங்களும் கடைப்பிடித்ததற்கு இந்த நாள் ஒரு வழிகாட்டும் நாளாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
வாய்க்கால் பிரச்சினையல்ல வாழ்வாதாரப் பிரச்சினை
தீர்மானங்களில் மிக முக்கியமாக நாட்டுப் பிரச்சினை, மக்கள் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை  இவைகளைப் பற்றியெல்லாம் இங்கே ஆய்ந்து எழுதப்பட்டிருக்கின்றன, வெளியிடப் பட்டிருக்கின்றன, உங்களால் வரவேற்கப்பட்டிருக் கின்றன.   இந்த தீர்மானங்களில் மிக முக்கியமானது,  சேதுக் கடல் பிரச்சினையாகும்.   நான் ஏன் இதை சேதுக் கடல் என்று சொன்னேன் என்றால், நம்முடைய நண்பர்கள் சிலர் இதை சேதுக் கால்வாய் என்று கூறியதன் காரணத்தால், நமக்கே  இது சிறு கால்வாய் பிரச்சினை போலும், இந்தக் கால்வாய் பிரச்சினையை  ஏன் கட்டிக் கொண்டு அழுகிறார் கள் என்று நினைக்கத் தோன்றும்.   இது வெறும் கால்வாய் பிரச்சினை அல்ல, வாய்க்கால் பிரச்சினை அல்ல,  இது நம்முடைய வாழ்வாதாரப் பிரச்சினை.   வருங்கால தமிழகத்தினுடைய பிரச்சினை.  இன்றைக்கு இதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்து விட்டால், கால்வாய்தானே, வாய்க்கால் தானே என்று அலட்சியப்படுத்தி விட்டால்,  இது பெரிய சமுத்திரப் பிரச்சினை என்பதை கோடிட்டுக் காட்ட வேண்டிய அவசியம் எனக்கு ஏன் ஏற்பட் டிருக்கிற தென்றால், நம்முடைய பெருந் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்  தன்னுடைய வாழ்நாளில் கண்ட கனவுகளில் ஒன்றாக கருதியது, கடைசி வரையிலே நிறைவேறும் என்று எதிர் பார்த்தது, அதற்காக வாதாடியது, போராடிய தெல்லாம்  இந்த சேது சமுத்திரத் திட்டத்திற்காகத் தான்.   அந்தத் திட்டத்தை சீர்குலைக்கின்ற முயற்சி நாம் எதிர்பாராத விதமாக இன்றைக்கு நடை பெறுகின்ற இந்த அரசின் சார்பிலேயே நடை பெறுவதை காணும் போது,  வேதனைப்படுகிறோம்.  நாடு பாலைவனமாகும்!
எனக்கு இன்றைக்கு நடைபெறுகின்ற இந்த ஆட்சியின் மீது வேறு பல குறைகள் இருந்தாலும், வேறு பல ஆத்திரங்கள் இருந்தாலும், இந்த ஆட்சி தொடர வேண்டுமா என்கின்ற ஆதங்கம் இருந் தாலுங்கூட, மிக மிக கோபத்தை, ஆத்திரத்தை, எதிர் காலத்தில் நம்முடைய தமிழ்நாட்டு மக்களுடைய வாழ்வைப் பாழாக்குகின்ற வகையில் இன்றைக்கு ஜெயலலிதா அவர்கள் எடுத்திருக்கின்ற முயற்சியை ஒருக்காலும் நாம் அனுமதிக்க முடியாது.  இன்றைக்கு அனுமதித்தால், சேது சமுத்திரத் திட்டம் தேவையில்லை என்ற செல்வி ஜெயலலிதா வின் அந்தக் கூற்றை உச்ச நீதி மன்றத்திலே கொண்டு போய் வழக்காக ஆக்கியிருக்கிறார்களே, அந்த வழக்கில் அவர்கள் வெற்றி பெற்றால், நம்முடைய வாழ்க்கை  - நம்முடைய என்றால், நம் தமிழ் நாட்டு மக்களுடைய வாழ்க்கை சூன்யமாகிவிடும், பாலை வனமாக ஆகிவிடும் என்பதை எண்ணிப் பார்க்கும் போது இந்தத் தீர்மானம் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
திராவிட முன்னேற்றக் கழகம் ஏதோ இந்த ஆட் சிக்கு எதிராக போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதற்காக அல்ல இது.   இது நம்மையே வருத்திக் கொள்கிற ஒரு பிரச்சினை.   நம்முடைய எதிர் காலத்தை அழிக்கின்ற ஒரு பிரச்சினை. நம்முடைய எதிர்காலத்தில் வருகின்ற சந்ததியினருக்கு, நம்முடைய குழந்தைகுட்டி களுக்கு, பேரன் பேத்தி களுக்கு  அவர்களுடைய வாழ் வாதாரங்களுக்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டு விடக் கூடும் என்பதற்காகத்தான் இந்த நிலை.   ஒரு நாடு தலை சிறந்த நாடாக விளங்க வேண்டுமானால், பொருளாதாரத் துறையில், சமுதாயத் துறையில், வாணிபத் துறையில் மற்றும் கலாச்சாரத் துறையில் நல்ல தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு வாழ வேண்டுமேயானால், அதற்கு போக்குவரத்து என்பது மிக மிக முக்கிய மானது. அந்தப் போக்குவரத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நாம் நம்முடைய தமிழகத்தை வளப்படுத்த,  தமிழ் நிலத் தைச் செழிப்பாக வைத்துக் கொள்ள என்றைக்கும் தமிழகத்திலே  பஞ்சம், பசி, பட்டினி என்ற அந்தக் கொடுமைகள் நேராமலிருக்க ஒரு நிரந்தரமான வழிவகை என்றால், அது சேது சமுத்திரத் திட்டம் போன்ற மாபெரும் திட்டங்கள்தான்.
அந்தத் திட்டங்களை ஒவ்வொன்றாக கை விட்டு, தமிழகத்தைப் பாலை நிலமாக ஆக்கி விட நாம் இன்றைக்கு அனுமதித்தால், எதிர் காலம் நம்மை சபிக்கும்.   அதை நாம் தமிழ்நாட்டு மக்களுக்கு உறுதிபட எடுத்துச் சொல்ல வேண்டும்.
சிறப்புப்பாயிரம்!
போராட்டம் என்று இன்றைக்கு நாம் அறிவிக் கின்ற நிலை  பல கட்டங் களாக நடைபெற வேண் டிய ஒன்று.   அதிலே ஒரு கட்டம் தான், இன்றைக்கு இந்த நிர்வாகக் குழுவிலே நாம் நிறைவேற்றுகின்ற தீர்மானம்.   அந்தத் தீர்மானத்தை  சிறப்புப் பாயிரம்  என்றே வைத்துக் கொள்ளலாம்.   இந்தத் தொடக்கக் கட்டத்திலே நாம் எடுக்கின்ற முடிவுகள், இறுதிக் கட்டத்திலே வெற்றிகரமாக நடைபெற்றது  என்ற அந்த முடிவை நோக்கிச் செல்கிற போராட்டமாக இருக்க வேண்டும்.   ஏதோ ஆர்ப்பாட்டத்திற்காக, ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும்  100 பேர்,  200 பேர் கையிலே கொடிகளைத் தாங்கி, அட்டை களைத் தாங்கி, அரசைக் குறை கூறி, கண்டித்து ஒலி எழுப்புவது மாத்திரமல்ல.
அந்த ஒலி எழுப்புவதற்கு முன்னால் மறைந்திருக்கின்ற நம்முடைய உணர்வுகளையும் மக்களுக்கு உணர்த்த வேண்டும்.  அந்த வகையிலே  வரும் ஜூலை 8ஆம் தேதியன்று நம்முடைய தொடக்கக் கட்டப் போராட்டம்.   அதை எந்தெந்த வகையிலே நடத்துவது என்பதை அடுத்தடுத்து நாம் வெளியிடுகின்ற அறிக்கைகள் மூலமாக வெளிப்படுத்தவிருக்கிறோம்.   ஜூலை 8,  தொடக்கக் கட்டப் போராட்டம் என்று சொல்லி யிருக்கிறோம்.   முதல் கட்டப்போராட்டம் என்று கூடச் சொல்லவில்லை.   தொடக்கக் கட்டப் போராட்டம் என்று சொல்கிறோம்.   தொடங்கி விட்டால், அந்தப் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.  நாம் வெற்றி பெறுகிற வரையிலே நடைபெற்றுக் கொண்டே இருக்கும் என்பதற்காகத்தான்,  இதை முதற்கட்டம் என்று போட்டால், இரண்டாம் கட்டம், மூன்றாவது கட்டம் என்றெல்லாம் சலித்துப் போய் விடும் என்பதற்காகத் தான் தொடக்கக் கட்டம் என்று கூறப்பட்டிருக்கிறது.  ஆகவே இந்தத் தொடக்கக் கட்டப் போராட்டத்தில் நீங்கள் காட்டுகின்ற  உணர்வும், நீங்கள் கட்டிக் காக்கின்ற ஒற்றுமையின் விளைவும்  எதிர்காலத்திலே திராவிட முன்னேற்றக் கழகத்தை மாத்திரமல்ல, தமிழகத்தையே வாழ வைக்கக்கூடிய அளவிற்கு இருந்தாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிர்வாகக் குழுவிலே நான் என்னுடைய உரையில் மிக மிக மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
உயிரையே இழக்கத் தயார்!
வெற்றி தோல்விகள் அல்ல -  நாம் எதிர்பார்ப்பது.  நாம் அடைய இருக்கின்ற ஒரேயொரு வெற்றி, விரும்புகிற ஒரேயொரு வெற்றி, தமிழ் நாட்டு மக்களை  நம்முடைய காலத்திலே வாழ வைப்ப தற்கான பாதுகாப்பைச் செய்து விட்டுப் போனோம் என்ற அந்த வெற்றியைத்தான் நான் பெரும் வெற்றியாகக் கருதுகிறேன்.   அந்த வெற்றிக்கு நீங்கள் எல்லாம் ஒத்துழைக்க வேண்டுமென்று உங்களை யெல்லாம் கேட்டுக் கொண்டு,  எதிர்காலத் தமிழகம் இருண்ட நாடாக ஆகி விடாமல் இருக்க, பொருளா தாரத்திலே  பொலிவு பெற்ற நாடாக இருக்க, வளங்களிலே எந்த நாட்டிற்கும் வளையாத, நிமிர்ந்த நாடாக விளங்க  இது போன்ற திட்டங்கள் தேவை, அந்தத் திட்டங்களை வேண்டாமென்று சொல் வதே, அந்தத் திட்டத்தை அழிக்க நினைப்பதே - ஜெயலலிதா அல்ல, வேறு யாராக இருந்தாலும் அவர்கள் தமிழர்களுக்கு நன்மை செய்தவர்களாக ஆக மாட்டார்கள், தீமை செய்தவர்களாகத் தான் ஆவார்கள்.  எனவே அந்தப் பழிக்கு அவர்கள் ஆளாக வேண்டாம் என்று நான் உங்கள் மூலமாக, இந்த நிர்வாகக் குழுவிலே கேட்டுக் கொண்டு, நாம் தொடங்குகின்ற போராட்டம் தொடங்கட்டும், அந்தப் போராட்டத்திற்கு முதல் கட்டம் எது, இரண்டாவது கட்டம் எது என்பதையெல்லாம் அவ்வப்போது தீர்மானித்து ஏடுகள் வாயிலாக நான் உங்களுக்குத் தெரிவிப்பேன்.   கடைசி கட்டமாக, நாம் நம்முடைய உயிரையே இழக்கத் தயார் என்றாலும், அதற்கும் நாம் தயார் என்ற அளவிலே இந்தப் போராட்டத்திலே வெற்றியைக் குவிப்போம் என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் அவர்கள் உரை யாற்றினார்.

No comments:

Post a Comment