Search This Blog

Tuesday, June 11, 2013

இந்த ஆண்டு குறுவை சாகுபடி உண்டா? இல்லையா? தெளிவுபடுத்த கருணாநிதி கோரிக்கை

சென்னை: இந்த ஆண்டு குறுவை சாகுபடி உண்டா? இல்லையா? விவசாயிகள் என்ன செய்ய வேண்டும், அவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க அரசு என்ன செய்யப் போகிறது என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார். 
இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:
நாளை ஜூன் 12. வழக்கமாக மேட்டூர் அணை இதே நாளில் தான் ஒவ்வொரு ஆண்டும் சாகுபடிக்காக திறந்து விடப்படும். ஆனால் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, ஒரு ஆண்டு கூட ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படாததால், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் தொடரும் சோகமாகி விட்டது. 
திமுக ஆட்சியில் கூட, சாகுபடிக்காக மேட்டூரில் தண்ணீர் திறந்து விடுவது ஜூன் 12ம் தேதி என்பது ஒரு சில ஆண்டுகளில் தள்ளிப் போயிருக்கலாம். ஆனால் 12ம் தேதிக்கு பின்னர் ஒரு சில நாட்களுக்குள் மேட்டூர் அணை சாகுபடிக்காக திறந்து விடப்பட்டு, விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவு செய்யப்பட்டு விடும். 

ஆனால், கடந்த 3 ஆண்டு கால அதிமுக ஆட்சியை எடுத்துக் கொண்டால், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் நீர் மட்டம் மிகவும் குறைந்து, வற்றி வறண்டிருக்கும் நிலையில் உள்ளதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வது பற்றி மிகப்பெரிய குழப்பமும், பதற்றமும் நிலவுகிறது.

கடந்த ஆண்டு அணையின் நீர் மட்டம் 79 அடியாக இருந்த போதிலும், நீர்வரத்து போதுமான அளவுக்கு இல்லாததால் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவத்தில் ஏறத்தாழ 1.20 லட்சம் எக்டேர் என்ற இயல்பான பரப்பளவில், சுமார் 51 ஆயிரம் எக்டேரில் தான் நெல் சாகுபடி மேற்கொள்ள முடிந்தது.

நிலத்தடி நீரை நம்பி ஏறத்தாழ 60 ஆயிரம் எக்டேரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும் என்ற போதிலும், கடந்த ஆண்டு அதிமுக அரசு உறுதியளித்தபடி மும்முனை மின்சாரம் முழுமையாக கிடைக்காததால், குறுவை சாகுபடி பரப்பளவு பெரிதும் குறைந்தது. 
இந்த ஆண்டில், கடந்த 6 மாதங்களாக காவிரி வறண்டு கிடந்ததால் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து விட்டது. அதிமுக ஆட்சியை பொறுத்தவரையில் தமிழக விவசாயிகளின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு, அண்டை மாநிலத்தோடு நல்ல வகையில் பேசி சுமூகமான முறையில் தேவையான நீரை பெற்றிட முயலாமல், எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற பாணியில் பேசுவதும், எல்லோரும் தனக்கு கீழ்ப்படிந்து வேலை செய்பவர்கள் என்று நினைப்பதும், எதற்கெடுத்தாலும் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவதும், மத்திய அரசின் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ள முயற்சிப்பதும் என்ற போக்கில் செயல்படுவதன் காரணமாக, உண்மையில் பல வகையிலும் பாதிக்கப்படுவோர் தமிழ்நாட்டு விவசாயிகள்தான். 

எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாடுவதன் காரணமாக, கர்நாடக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி தலைவர்களையும், முன்னாள் முதலமைச்சர்களையும் அழைத்து இதற்காகவே அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி அவர்களின் கருத்தை அதாவது, காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு வழங்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்து விட்டதால், அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று இன்றைய தினம் டெல்லியில் கூடுகின்ற தற்காலிக காவிரி குழுவிடம் கேட்போம் என்று பேரவையில் கர்நாடக முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். 

அவசர முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்னையில் ஜெயலலிதா அரசின் சார்பில் எந்த பதிலும் கூறாத நிலையில், கி. வீரமணி விடுத்த அறிக்கையில், நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பளித்து 5 ஆண்டுகள் ஆகி விட்டதால் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடக முதல்வர் கூறுவது சரியல்ல. இறுதி தீர்ப்பு என்பது எதிலிருந்து சட்டப்படி கணக்கிட வேண்டுமென்றால், மத்திய அரசிதழில் வெளியானதிலிருந்து 5 ஆண்டுகளுக்கு பிறகே மறுபரிசீலனையை எந்த மாநிலமும் கோர முடியும்.

நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளிவந்த நாள் பிப்ரவரி 5, 2007. அது கெசட்டில் வெளியிடப்பட்ட நாள் பிப்ரவரி 19, 2013. இதன்படி மறுபரிசீலனை மனு மூலமாக 2018ல் தான் விண்ணப்பிக்க முடியும். மேலும் நிரந்தர குழுவும் இன்னும் அமையவில்லை. எனவே, இது ஒரு திசை திருப்பல் நாடகம் ஆகும். 

கர்நாடகத்தில் அடிக்கடி அனைத்துக் கட்சிக்கூட்டம் ஒருமித்த முடிவு. தமிழ் நாட்டில், அனைத்துக் கட்சி கூட்டம் எப்பிரச்னையிலும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் நடந்ததே இல்லை. எத்தனையோ பேர் கத்திப் பார்த்து ஓய்ந்து போனாலும், ஒத்தக்கருத்து கூட கர்நாடகத்தை போல எளிதில் இங்கே வராது என்பது மேலும் வேதனை தரத்தக்கதாகும். தமிழ்ச் சமுதாயமே, அந்தோ. உன் கதி இப்படித்தானா? டெல்டா விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முடிவே இல்லையா? வேதனை. வெட்கம் என்று தன் உணர்ச்சிக் கொந்தளிப்பை கொட்டியிருக்கிறார். 
ஆம், கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் சாகுபடி பொய்த்துப் போன அதிர்ச்சியில் 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக் கும் தமிழக அரசின் சார்பில் நிவாரணத் தொகை வழங்கப்படாமல், அதிலேயே ஒரு சிலருக்கு மட்டும் வழங்கப்பட்டது. அதுபோலவே விவசாயிக ளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் அரசின் சார்பில் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை முறையாக வழங்கப்படவில்லை என்று தொடர்ந்து நாளேடுகளில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. 
சாகுபடி செய்யாத தரிசு நிலங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுவதாகவும், சாகுபடி செய்த நிலங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்றும் புகார்கள் இன்னமும் வந்து கொண்டிருக்கின்றன. நிலத்தின் உரிமையாளரும், விவசாயம் செய்தவரும் வெவ்வேறு நபர்களாக இருப்பதால், நிவாரணத் தொகை யாருக்கு வழங்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஒரு சில இடங்களில் அறிவித்த தொகையை விட மிகவும் குறைவாக ஏக்கருக்கு ரூ.3,000 மட்டுமே நிவாரணத் தொகையாக வழங்கப்படுகிறதாம். கிராமநல அதிகாரிகள், கூட்டுறவு வங்கி அதிகாரிகள் சிலர் நிவாரண தொகையில் ரூ.500 முதல் ரூ.1000 வரை பிடித்தம் செய்து கொள்கிறார்களாம். வறட்சி நிவாரணத் தொ கையில் பயிர்க் கடன் வசூலிக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்ட போதிலும், சில கூட்டுறவு வங்கிகளில் வறட்சி நிவாரணத் தொகை கொடுக்கும்போதே, பயிர்க் கடன்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றதாம்.

விவசாயிகளின் இந்த துன்ப, துயரங்கள் பற்றி அதிமுக அரசு துளியேனும் கவலைப்படுவதாக தெரியவில்லை. அவர்களுக்கு எத்தனையோ வேலைகள். ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட வேண்டுமே, டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிர் செய்வதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்களே என்பதை எண்ணிப் பார்த்து அரசின் சார்பில் அறிவுரை வழங்கப்பட வேண்டாமா? 
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் மத்திய அரசு காவிரி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் பாரா முகத்தோடு இருக்கிறது என்றும், தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி நடுவர்மன்றத் தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். 

எனவே அதிமுக அரசு இனியாவது விழித்துக் கொண்டு, இந்த ஆண்டு குறுவை சாகுபடி உண்டா? இல்லையா? சாகுபடி செய்ய நீர் கிடைக்குமா? கிடைக்காதா? விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றியும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட அரசு என்ன செய்யப் போகிறது என்பதை பற்றியும் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.  இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment