Search This Blog

Thursday, June 13, 2013

காங்கிரசுடன் இருந்த உறவை வெட்டியவர் யார்?

சென்னை : காங்கிரசுடன் ஒட்டியிருந்த என்னை வெட்டி விட்டது யார் என்று திமுக தலைவர் கருணாநிதி பேசினார். சென்னையில் நேற்று நடந்த திருமண விழாவில் திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: இந்த திருமண விழாவில் தலைமை தாங்கி நடத்தி வைக்க வேண்டுமென்ற அழைப்பை, ஆணையாக ஏற்று உரிய நேரத்தில் திருமணத்தில் கலந்து கொள்ளவதற்காக காலை உணவைக் கூடத் தியாகம் செய்து விட்டு வந்துள்ளேன். மணவிழாவில் பல கருத்துகளை அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக நான் அவர்களோடு ஒட்டி இருக்க வேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தார். ஒட்டி இருந்த என்னை, வெட்டி விட்டது யார் என்பது அவருக்கே தெரியுமென்று கருதுகிறேன். அதனால் நான் அதைப் பற்றி விரிவாக பேச விரும்பவில்லை. இது போன்ற திருமண நிகழ்ச்சிகளில் அரசியல் பேசுவது பொருத்தமாக இருக்காது என்பதை நான் நன்றாக அறிவேன். ஆகவே அந்தப் பிரச்னையை இதோடு நிறுத்தி விடலாம்.

துரைமுருகன் உள்ளிட்ட பலரும் எடுத்துக்காட்டியதைப் போல தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகள் கடந்த காலத்தில் ஒருவிதமான பல நிகழ்வுகளுக்குக் காரணமாக இருந்து அமைந்த ஆண்டுகளாக ஆகிவிட்டது என்பதை உணர்ந்து, நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பண்பாடு என்பது தமிழர்களுக்கு உரிய ஒன்று.
அதிலும் தமிழர் பண்பாடு, தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டு, அதே நேரத்தில் தமிழினத்தின் மரியாதையையும் காப்பாற்றுவதற்காக உள்ள பண்பாடாகும். இந்த மன்றத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக அமர்ந்து மணமக்களை வாழ்த்துகிறோம் என்றால், இந்த நிலை தான் தமிழகத்தில் வளர்த்துள்ள பண்பாட்டின் சின்னம்.
அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பதல்ல அவருடைய உள்ளம் தமிழ் உள்ளமாக இருக்கிறதா? தமிழர்களின் நாகரிகத்தை, கலையை, கலாச்சாரத்தைப் போற்றுகின்ற பண்பாடு கொண்ட உள்ளமாக இருக்கிறதா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நேற்று இரவு முதல் என் செயலாளரிடம் எத்தனை மணிக்கு திருமணத்திற்குப் போக வேண்டும் என்று நான் வலியுறுத்தி கேட்ட போது, அவர் 9.30 மணிக்கு திருமணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள், 10 மணிக்குப் போனால் போதும் என்று சொன்னார். நானும் அதை நம்பி, 10 மணிக்குப் போனால் போதும் என்பதற்காக, காலைப் பணிகளை எல்லாம் முடித்து விட்டுப் புறப்படும் போது, திருமணத்திற்கு நேரமாகி விட்டது, முதல் நாள் 10 மணிக்குப் போனால் போதும் என்று சொன்னவர்கள், நேரமாகி விட்டது என்று என்னை அவசரப்படுத்தினார்கள். அதற்குப் பிறகு நான் காலை உணவை மதிய உணவோடு சேர்த்துச் சாப்பிட்டு விடலாம் என்று எண்ணிக் கொண்டு, காலையில் உணவு அருந்தாமல் இங்கு வந்து கலந்து கொண்டிருக்கிறேன்.

இதற்காக மணவிழா முடிந்ததும் காலை உணவு அருந்தி விட்டுச் செல்லுங்கள் என்று கூறக் கூடாது. அதற்கு நான் வீட்டுக்குச் செல்வேன். இவ்வாறு கருணாநிதி பேசினார். முன்னதாக மத்திய அமைச்சர் ஜி. கே. வாசன், காங்கிரஸ் முன்னாள் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், முன்னாள் அமைச்சர் துரைமுருகன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் பேசினார்கள்.

No comments:

Post a Comment