Search This Blog

Tuesday, July 26, 2011

கோவை தி.மு.க. பொதுக்குழுவின் 25 தீர்மானங்கள்

ஈழத்தமிழர் பிரச்சினை, கச்சத்தீவு மீட்பு, சமச்சீர் கல்வித்திட்டம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள் மீது கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் 25 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் : 1

வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு

தமிழகச் சட்டப் பேரவைக்கான 2011 பொதுத் தேர்தலில் பதிவான 3 கோடியே 67 இலட்சத்து 53 ஆயிரத்து 114 வாக்குகளில், 39.44 விழுக்காடு வாக்குகளை அதாவது 1 கோடியே 45 லட்சத்து 29 ஆயிரத்து 501 வாக்குகளைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த கூட்டணி பெற்றுள்ளது.

கழகக் கூட்டணியை 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எதிர்த்தவர்கள் பல பொய்யுரைகளைப் பரப்பிய போதிலும், தமிழ்ப் பெருங்குடி மக்களில் ஏறக்குறைய ஒன்றரை கோடி மக்கள் நமது கூட்டணி வேட்பாளர்களுக்கு, மிகுந்த நம்பிக்கையோடு, உறுதியோடு வாக்களித்துள் ளார்கள். கழகக் கூட்டணிக்கு வாக்களித்த அனை வருக்கும் இப்பொதுக்குழு தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் :- 2

திராவிட இனத் தலைவர் கலைஞருக்குப் பாராட்டு

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போற்றிய நெறிகளைக் கடைப்பிடித்து திராவிட இயக்கத்தை மக்கள் இயக்கமாக வளர்த்து, பாதுகாத்து இயக்கத்தின் கொள்கைகள் வெற்றிபெற 88 அகவையிலும் சலியாத உழைப்பினை நல்கித் தமிழ் சமுதாயத்துக்குத் தொண்டு புரிந்து வருபவர் கழகத் தலைவர் கலைஞர்.

அறிவாற்றல் மிகுந்த கலைஞரின் வாழ்வு - வாழ்க்கை இலட்சியம் - ஆர்வம், உழைப்பு, முயற்சி, அறப்போராட்டம், தியாகம், கலைத்துறைப் பணி, சட்டமன்றப் பணி, முதலமைச்சராக ஆற்றிய அருந்தொண்டு, நிறைவேற்றியுள்ள சாதனைகள் எல்லாம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் குறிக்கோளை அடைவதற்காகவே, கலைஞரால் மேற்கொள்ளப்பட்டவை என்பதை நாடறியும்.

வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் எழுச்சி பிறக்கவும், ஆரியத்தின் சூதுமதியால் தாழ்வுற்ற தமிழ் இனம் தலை நிமிரவும், மக்களை நாளும் வாட்டும் வறுமையையும் ஏழ்மையையும் விரட்டவும், பாடுபடும் பாட்டாளிகளையே வாட்டும் பசியையும் பட்டினியையும் இல்லாமலே ஒழித்திடவும், முதலமைச்சர் பொறுப்பேற்ற போதெல்லாம் ஒல்லும் வகையில் திட்டமிட்டுச் செயலாற்றி வெற்றி பெற்றவர் தலைவர் கலைஞர்.

சமூகநீதிக் கொள்கையான இட ஒதுக்கீடு தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் வெற்றிபெற திட்டமிட்டுச், சட்டங்களை இயற்றுவதற்குக் கலைஞர் ஆற்றிய அளப்பரிய பணிகள் வரலாற்றின் அழிக்க முடியாத பதிவுகள் ஆகும். இப்பணிகள் ஏதுவாக சமூக நீதி காத்த கலைஞர் எனப் போற்றப்படுபவர் அவர்.

அனைத்துச் சாதிப் பிரிவினரும் ஒன்றாகக் கூடி வாழும் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை நூற்றுக்கும் மேலாக தமிழகம் எங்கும் அமைத்த மையால், சமத்துவப் பெரியார் எனவும் அழைக்கப் படுபவர் கலைஞர்.

இவ்வகை அரிய பெருமைமிகு சாதனைகளைப் படைத்த ஒரு தலைவருக்குத் தமிழ்நாட்டு மக்களும், கழகத் தொண்டர்களும் ஆண்டு தோறும் பிறந்த நாள் விழா எடுத்து மகிழ்கின்றனர். கலைஞரின் தொண்டும், வாழ்வும் தமிழர் வாழ்வோடு இணைந்ததாகும்.

இவ்வுண்மையைத் தமிழ் மண்ணில் பிறந்தவர்களும், தமிழ்ப்பற்றாளர்களும் நன்கு அறிந்துள்ளனர். கலைஞரின் பன்முகப் படைப்பாற்றலால் தமிழ் சிறப்புற்றதுடன், கலைஞரின் தொடர் முயற்சியால்; தமிழ் மொழி செம்மொழி என்பது ஏற்கப்பட்டுள்ளது. இவை யெல்லாம் தேர்தல் அரசியலுக்கு அப்பாலும் கலைஞரின் தனித்த ஆளு மையைப் பறை சாற்றும். இ

ந்தியத் துணைக் கண்டத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், திராவிட இயக்கத்திற்குத் தனித் தகுதியுண்டு. பிறவி இழிவைக் கற்பித்துச் சுமத்தி, இனமான உணர்வை முறியடித்து திராவிட மக்களைத் தாழ்த்தி ஆதிக்கப் பிறவிகள் தமிழ்நாட்டில் கொட்டம் அடித்தபோது, திராவிட இனம் இழந்த சமூக உரிமைகளை மீட்டெடுப் பதற்கு நீதிக் கட்சியும் அதன் ஒப்பற்ற தலைவர் களான டாக்டர் நடேசன், தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் முதலானோரும் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை.

நீதிக் கட்சி திராவிடர்க் கழகமாக முகிழ்த்து திராவிட முன்னேற்றக் கழகமாக மலர்ந்த போது, தந்தை பெரியாரும், அண்ணாவும், கலைஞரும், பேராசிரியரும் எண் ணற்றத் தலைவர்களும், தொண்டர்களும் தமிழ் மொழி இன உரிமைகள் காத்திடக் களங்கள் பல கண்டு தியாகங்கள் புரிந்துள்ளனர்.

இவ்வகை அரிய பெரிய தமிழ் இன உரிமை மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள திராவிடர் இயக்கத்தை ஒரு தேர்தல் தோல்வியை வைத்து முழுப் பூசணிக்காயை இலை சோற்றில் மறைக்க முயற்சிப்பது போல, நமது இனப் பகைவர்களும், ஆதிக்க சாதியினரின் ஊடக இயலாளர்களும் வீழ்த்திவிடலாம் என்று நினைப்பது கனவேயாகும்.

நமது திராவிட இயக்கப் பணிகள் என்றும்போல் தலைவர் கலைஞர் தலைமையில் தொடர்கிறது. கலைஞரின் பிறந்த நாள் என்பது பகுத்தறிவையும், தமிழ் உணர்வையும் வளர்த்தெடுக்கும் நாளாகும். கலைஞர் தனது 88வது பிறந்த நாளைக் கொண் டாட இசையாவிட்டாலும், அவர் பிறந்த நாள் என்பது திராவிட இன எழுச்சியின் அடையாள மாகவும், தமிழரின் வெற்றி விழாவாகவும் தொடர்ந்து போற்றப்படும் என அறிவிப்பதில் தி.மு. கழகம் பெருமிதம் கொள்கிறது. திராவிட இயக்கத்தின் தனிப் பெரும் தலைவரான கலைஞரின் தொண்டு தொடரவும், தமிழ் நாட்டிற்குத் தொடர்ந்து வழிகாட்டவும் அவர் பல்லாண்டு காலம் நலத்துடன் மகிழ்ந்து வாழ விரும்பி இப்பொதுக்குழு, தன்னுடைய அன் பார்ந்த வாழ்த்தினையும், விழைவினையும் தெரிவித்து மகிழ்கிறது.

தீர்மானம். 3

அ.தி.மு.க. ஆட்சியாளரின் அடக்குமுறை தர்பார்

1975ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நெருக்கடி காலக் கொடுமை தமிழகத்தில் மீண்டும் வந்து சூழ்ந்து விட்டதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு; இன்றைய அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் ஆணைக்கேற்ப ஏவி விடப்படுகின்ற - காவல் துறையினரின் கெடுபிடிகளையும், பழி வாங்கும் விதத்தில் தொடரப்படும் பொய் வழக்குகளையும் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த செயல் வீரர்களும் மற்றும் பல்வேறு அணியினரும் சந்திக்க வேண்டிய நிலைமை நாட்டில் உருவாகியிருப்பதைக் கண் கூடாகக் காண முடிகிறது. 2006ஆம் ஆண்டு சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில், பெரும் வெற்றி பெற்ற தி.மு.கழகத்தின் ஆட்சியில் எதிர்க்கட்சி களைப் பழி வாங்கும் நடவடிக்கை எள்ளளவும் இல்லை என்பதை நாடு அறியும்.

ஆனால் இன்றைய அ.தி.மு.க. ஆட்சியில் அடுக்கடுக்காக மக்கள் பிரச்சினைகள் இருக்கும்போது-அவை அனைத்தையும் புறந்தள்ளி விட்டு, ஆளுங் கட்சியினர் எதிர்க்கட்சிகளைப் பழி வாங்கு வதையே முக்கியப் பணியாகக் கொண்டு பொய் வழக்குகளைப் புனைந்தும், - போலீஸ் படையைக் கொண்டு மிரட்டியும் - கழகத்தை வலுவிழக்கச் செய்யலாம் எனக் கனவு கண்டு - அதனை நிறைவேற்றிக் கொள்ள முற்படுவதை எத்தனை நாளைக்குத்தான் பொறுத்துக் கொண்டிருப்பது என்பதால்,

அநியாயமாகவும், உண்மை ஆதார மற்ற நிலையிலும் இந்த அரசு ஏவிடும் ஜன நாயகத்திற்கு விரோதமானதும், சட்டத்திற்கு முரணானதுமான அடக்குமுறைக் கணைகளைக் கூர் மழுங்கச் செய்திட, தமிழ் மக்கள் உணர்வு பூர்வமாக ஒன்றுபட்டுக் கண்டனம் தெரிவிக்க முன் வர வேண்டுமென்று இந்தப் பொதுக்குழு கேட்டுக் கொள்வதோடு-இந்த அராஜக முறையை எதிர்ப்பதில் இந்த இயக்கம் உறுதியோடு நிற்கும் என்பதையும் இப்பொதுக் குழு தெரிவித்துக் கொள்வதோடு,

அ.தி.மு.க. அரசின் அடக்குமுறை தர்பார், அராஜக நடவடிக்கைகள், பழி வாங்கும் நோக்கோடு தொடுக்கும் பொய் வழக்குகள் போன்றவற்றைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய அளவில், தி.மு.கழகம் அறப்போர் நடத்துவ தென்றும்; ஆகஸ்ட் திங்கள் முதல் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் அந்தந்த மாவட் டங்களின் சார்பில் முதற்கட்டமாக ஆர்ப்பாட்ட அறப்போரினை நடத்துவது என்று கழகத் தலைமை அறிவித்துள்ளவாறு நடத்துவதென்றும் இப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் : 4 இலங்கைத் தமிழர் பிரச்சினை

இலங்கை தமிழர்களுடைய பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துப் போராடிக் கொண்டிருக்கும் ஒரே இயக்கம் தி.மு.கழகம்தான். இலங்கையில் வாழக்கூடிய ஈழத் தமிழர்களின் குடியுரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், 1956ஆம் ஆண்டு முதலே தொடங்கி ஈழத்தந்தை செல்வா அவர்கள் ஈழத் தமிழர் கள் உரிமைகளுக்காக குரல் கொடுத்துப் போராடத் துவங்கினார்.

ஈழத்தமிழர்களுடைய உரிமைகளுக்காக ஈழத்தந்தை செல்வா நடத்திய போராட்டங்கள் அனைத்தும் பயனற்றுப் போன நிலை யில், வட்டக்கோட்டையில் ஈழத் தந்தை செல்வா தலைமையில் கூடிய தமிழர் விடுதலைக் கூட்டணியினர், தனி ஈழம் ஒன்றுதான் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று இறுதியாக முடிவு செய்தனர்.

அந்தக் காலகட்டத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஈழத் தந்தை செல்வா அவர்களின் கோரிக்கைக்குத் துணிவுடன் துணை நின்றது. பேரறிஞர் அண்ணா அவர்களின் வாழ்நாளிலும் - அவரது மறைவுக்குப் பின்னும் இலங்கைத் தமிழர் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டிருக்கக் கூடியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களே என்பதை இப்பொதுக்குழு பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட மாவட்ட, மாநில மாநாடுகளிலும், தொடர்ந்து நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களிலும், தனி ஈழக் கோரிக்கையை வலியுறுத்திப் பேசியும், தீர்மானங்கள் பல நிறைவேற்றியதும்,

அந்தக் கோரிக்கைக்கான போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் தமிழகத்தில் சிறை சென்றதும், தலைவரும் - பொதுச்செயலாளரும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்ததும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியாகும்.

1956ஆம் ஆண்டு முதல் சிங்கள அரசின் துணையோடு சிங்கள வெறியர்களும், காவலர்களும், இராணுவத்தினரும் இந்திய வம்சாவழி தமிழர்களையும், இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதியில் வாழக்கூடிய ஈழத் தமிழர்களையும், தொடர்ந்து திட்டமிட்டுக் கொன்று குவித்தனர். அவர்களுடைய சொத்துக்கள், உடைமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு அனாதைகளாக்கப் பட்டனர். ஈழத் தமிழர்களின் கலாச்சாரச் சின்னமாக விளங்கிய புகழ்பெற்ற யாழ் நூல் நிலையம் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

தமிழ்ப் பெண்கள் ஈவிரக்கமின்றி சிங்கள வெறியர்களாலும், காவல் துறையினராலும், இராணுவத்தினராலும் மூர்க்கத்தனமாகவும், மிருகத்தனமாகவும் கற்பழிக்கப்பட்டனர். வெளிக்கடைச் சிறையில் அடைபட்டிருந்த தமிழ் வீரர்கள் அதுகாறும் மனித சமுதாயம் கண்டிராத அளவிற்குக் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டனர்.

சிங்கள அரசு, இலங்கைத் தமிழர்களை ஒழித்திட ஒரு இனப்படுகொலையை திட்டமிட்டு நடத்தியது. இந்தத் துயர நிகழ்வுகளை அறிந்த தலைவர் கலைஞர் எப்படியாவது உலகச் சமுதாயத்தின் கவனத் திற்கு இதைக் கொண்டு வந்து இந்த இனப்படுகொலையை நிறுத்திட வேண்டுமெனக் கருதினார்.

அந்த ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாகத்தான் ஒரு கோடி தமிழர்களின் கையொப்பங்களைப் பெற்று, 105 வால்யூம் களாகத் தொகுத்து, தலைவர் கலைஞரின் விரிவான, விளக்கமான கடிதத்தோடு, அய்க்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருக்கு 1983ஆம் ஆண்டு அனுப்பி வைத்தார். இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கை இனப் படுகொலையை சர்வதேச சமுதாயத்தினுடைய கவனத்திற்கு, அய்க்கிய நாடுகள் மன்றத்தின் மூலம் கொண்டு சென்றார் என்பது எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத வரலாற்றுப் பதிவாகும். 1976 ஜனவரி 31ஆம் நாள் தி.மு.கழக ஆட்சி கலைக்கப்பட்டது.

ஏன் அப்போது ஆட்சி கலைக்கப்பட்டது என்பதற் கான காரணங்களை அன்றைய பாரதப் பிரதமர் இந்திராகாந்தி கூறும்போது, முக்கிய குற்றச்சாட்டாக அவர் எடுத்துக்காட்டியது, தி.மு.க. அரசு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் செயல்படுவது, இந்திய நாட்டின் வெளியுறவு கொள்கைக்கு முற்றிலும் முரண்பட்டதாகும். எனவேதான் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்பதாகும்.

அவர் 15-2-1976 அன்று சென்னை மெரீனா கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது அவ்வாறு குறிப்பிட்டார். அமைதிப் படை என்ற பெயரில், இலங்கைக்குச் சென்ற இந்திய ராணுவம், அங்கு அமைதிக்கான ராணுவ நடவடிக்கை என்னும் பெயரில் ஈழத் தமிழரைப் பெரும் அழிவிற்கு ஆளாக்கிவிட்டுத் திரும்பியபோது அன்றைய தமிழகத் தின் முதல் வராக இருந்த தலைவர் கலைஞர், எம் இனமக்கள் பல்லாயிரக் கணக்கானவர்களை அழித்துவிட்டுத் திரும்புகின்ற இந்திய ராணுவத்தை வரவேற்கமாட்டேன் என்று சட்டமன்றத் திலேயே அறிவித்தார். இதன் காரணமாக 1991-ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி கலைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர் களை யெல்லாம் அழைத்து தனிஈழக் கோரிக்கைக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்பதற்காக, டெசோ என்ற அமைப்பை உரு வாக்கி, தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கு எழுச்சி மிக்க பேரணி களை நடத்திய பின்னர், மதுரையில் மாபெரும் மாநாடு ஒன்றை 4-5-1986 அன்று கலைஞர் நடத்தினார். அந்த மாநாட்டில் தனி ஈழத்திற்கு ஆதரவாக அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் குரல் கொடுக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி தனி ஈழத்தின் அவசியத்தினை இந்தியத் தலைவர்கள் உணரும்படிச் செய்தார்.

தலைவர் கலைஞரின் இத்தகைய முயற்சிகளுக்குப் பின்னரும், தனி ஈழம் கோரிப் போராடிய குழுக்களுக்கு இடையே நிலவிய எதிரும் புதிருமான மாறுபாட்டு நிலைமைகளால், தனி ஈழம் உருவாகும் வாய்ப்பு தடைபட்டது. இந்தச் சூழ்நிலைகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்ட சிங்கள இனவெறி அரசின் அதிபர் ராஜபக்ஷே தமிழ் மக்களை ராணுவ பலத்தால் முற்றிலும் அடக்கி, தமிழ்ஈழம் என்ற நோக்கத்தையே அழித்தொழிக் கும் முயற்சியில் ஈடுபட்டார்.

இந்தக் காலகட்டத்தில்தான் தனிஈழம் கேட்டுப் போராடக்கூடிய போராளிக் குழுக்களையும், அவர்களின் சிந்தனைப் போக்குகளையும் அதிபர் ராஜபக்ஷேயின் இனவெறிப் போக்கையும் திட்டத்தையும் தமிழ் இனத்தை அழிக்கத் தயாராகும் ஆயத்தப் பணிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்ட தலைவர் கலைஞர், தமிழ் இனத்தை ஒட்டுமொத்த அழிவிலிருந்து காப்பாற் றும் முயற்சியாகவும், இடைக்கால ஏற்பாடாகவும் சிங்களவர்களுக்கு சரிநிகர் சமமான உரிமைகள் தமிழர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என இந்திய அரசின் மூலம் இலங்கை அரசை வலியுறுத்தினார்.

தனிஈழம்தான் ஒரே இலக்கு எனினும், தமிழ் மக்கள் அழிக்கப்படும் கடும் நிலைமைகளைச் சமாளிக்கவும் - சரிசெய்யவும் இந்த இடைக்கால ஏற்பாட்டைத் கலைஞர் முன்மொழிந்தார்.

அதனை வலியுறுத்த ஒட்டுமொத்த தமிழ் மக்களைத் திரட்டி 24.10.2008 அன்று கொட்டும் மழையில் வரலாறு காணாத அளவிற்கு மிகப்பெரிய மனிதச் சங்கிலி சென்னை சிங்காரவேலர் மாளிகையில் தொடங்கி 100 கிலோ மீட்டருக்கு மேல் நீண்டதாக செங்கற் பட்டையும் கடந்திடுமாறு ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்பட்டது.

ஆனால், ராஜபக்சே, அண்டை நாடுகளோடு நயவஞ்சகமாக செய்து கொண்ட ஒப்பந்தத்தையும், குறிப்பாக, இலங்கையில் உள்ள கெம்பன்தோட்டத் துறைமுக அபிவிருத்தித் திட்டம் மற்றும் ராணுவ ஒப்பந்தத்தின் மூலமாகவும், சீனாவைப் பக்கபலமாக சேர்த்துக் கொண்டு, 2009ஆம் ஆண்டு மிகப் பெரிய அழிவைத் தமிழ் ஈழத்திற்கு ஏற்படுத்திவிட்டார். ராணுவ நடவடிக்கையினால் லட்சக் கணக்கான தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், லட்சக்கணக் கான தமிழ்மக்கள் அநாதை களாகப்பட்டு, அகதிகள் முகாம்களில் இன்றுவரை இருந்து வருகின்றனர். சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையில் அகதி களுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை தேவைகள்கூட வழங்கப்படவில்லை.

இந்தியாவின் சார்பில் மனிதாபிமான முறையில் அனுப்பப்பட்ட உதவிகள் யாவும், சிங்கள மக்களின் வாழ்விற்காகவும், வசதிக்காகவும் திருப்பிவிடப்பட்டன. திரு. டி.ஆர். பாலு, எம்.பி., அவர்கள் தலைமையில் இலங்கைத் தமிழர் களின் இன்னல் போக்கிடுவதற்கான அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலே உள்ள தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இலங்கை சென்று அங்கே முகாம்களில் அவதியுறும் தமிழர்களைக் கண்டு ஆறுதல் கூறியதோடு, இலங்கை அதிபரையும் கண்டு முகாம்களில் துயரத்திற்குள்ளாகி இருக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கு விரைவிலே செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டு மென்று வலியுறுத் தியதன் அடிப்படையில்; ஏறத்தாழ 1 லட்சத்து 25 ஆயிரம் இலங் கைத் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

அதற்குள் இலங்கையிலே அதிபர் தேர்தல் என்றொரு காரணத்தைக் கற்பித்து, முகாம்களில் இருந்த தமிழர்களை அனுப்பி வைப்பது அறவே நிறுத்தி வைக்கப் பட்டது. எனவே அவர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்குத் திரும்பவும், அவர்களது நல்வாழ்வுக்கான உதவிகள் இலங்கை அரசினால் வழங்கப்படவும் மத்திய அரசு இலங்கை அரசினை வலியுறுத்த வேண்டுமென்றும்; ஏற்கனவே உறுதியளித்தபடி இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்களைப் போல சமஉரிமை பெற்று வாழ்வதற்கேற்ற வழிவகை காண வேண்டு மென்றும்; அதிகாரப் பகிர்வு செய்துகொள்வது ஒன்றுதான் நிரந்தர, நிம்மதியான சகவாழ்வுக்கு வழி வகுத்திடும் என்பதால், அதற் குரிய அரசியல் தீர்வினைக் காணத் தேவையான முயற்சிகள் அனைத் தையும் மத்திய அரசு விரைவில் மேற்கொண்டு ஆவன செய்ய வேண்டுமென்றும், வலியுறுத்தப்பட்டது. தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதும், இல்லாதபோதும் இந்திய அரசை வலியுறுத்தி, தமிழ் ஈழ மக்களுக்கு குறைந்த பட்சம் சமஉரிமையாவது வழங்கச் செய்யவேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதற்கான அரசியல் நிர்பந்தத்தை மத்திய அரசு இலங்கை அரசுக்கு உருவாக்க வேண்டும் என்பதைப் பிரதமரை சந்திக்கும்போது நேரிடையாகவும், கடிதங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும், இதுநாள்வரை எந்தப் பயனும் ஏற்படவில்லை. இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான்கிமூன் நியமித்த குழு, ராஜபக்சேவினுடைய போர்க் குற்றங்களை உலகத்திற்கு எடுத்துக் காட்டியுள்ளது. உலக சமுதாயமும், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் என்கிற அடிப் படையில், சர்வதேச நீதிமன்றத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்து கிறது.

எனினும், இலங்கையில் தமிழ் இன விரோதிகள் திருந்துவார் கள் என்று நம்புவதற்கு இடமில் லை. தமிழ் ஈழ மக்களுக்கு இலங்கை அரசின் மூலம் தீர்வு என்பது இனி கானல் நீர்தான் என்னும் முடிவுக்குத் தான் வர வேண்டியுள்ளது.

நுறாண்டு காலமாக உள்ள இந்தப் பிரச் சினையின் பரிமாணம் இலங்கைத் தமிழர்களிடையே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த ஒற்றுமைக் குறைவினால் ஊன முற்றது என்றாலும், முழுவதுமாக நீர்த்துப் போகாமல் இருக்க - தமிழ் இன உணர்வு அறவே அற்றுப் போய் விடவில்லை என்பதை தரணியிலே நிலைநாட்டுகின்ற வகையில் தந்தை செல்வா அவர்கள் 1956ஆம் ஆண்டு தொடங்கிய ஈழத் தமிழர் அறப்போர் தொடர்ந்து தொய்வின்றி நடைபெறுவதற்கும் அந்த அறப்போரில் காணுகின்ற வெற்றி; இலங்கையில் சிங்களவர் - தமிழர்கள் என்ற இருசாராரும் சம உரிமைகளோடு வாழ்வதற்கும் வழிகாணும் என்ற நம்பிக்கை யோடு, அதற்கான ஆக்கப்பணிகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் அன்று போல் இன்றும் - என்றும் தமிழ் ஈழ மக்களின் தனி யுரிமைக்கு துணை நிற்கும் என இந்தப் பொதுக்குழு உறுதி கூறு கிறது.

தமிழகச் சட்டப் பேரவையில் 16-4-2002 அன்று அ.தி.மு.க. அரசு பொறுப்பிலே இருந்தபோது கொண்டு வந்த தீர்மானத்தில், விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும்,

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் ஜெயலலிதா கூறியதையும் 17-1-2009 அன்று அதே ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், இலங்கைத் தமிழர் களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப் படுவார்கள். இலங்கையில் என்ன நடக்கிற தென்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, வலுக் கட் டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டதையும் எடுத்துக்காட்டி இலங்கைத் தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுத்த இழிசெயல், பழிச்செயல் புரிந்தவர்கள், தற்போது தமிழ் இனத்தை எதையும் சொல்லி எப்படியும் ஏமாற்றலாம் என்ற மனப்பான்மையோடு ஆட்சிக்கு வந்தோரும் அவர்தம் அடிவருடி களும் ஆடுகின்ற போலி நாடகத்தை உண்மைத் தமிழர்கள் உணர்ந்துகொள்ள வேண்டு மென்று அறிவுறுத்துவதுடன்;

இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் பற்றி அய்க்கிய நாடுகளின் அவையின் விசாரணைக் குழு அறிக்கையில் காணப்படும் போர்க் குற்றங்களுக்கான பன்னாட்டு குற்றயியல் நீதி மன்றத்தில், இந்தக் கொடுஞ் செயலுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க உரிய நடவடிக் கைகளை எடுப்பதற்கு மனித உரிமையைப் போற்றுகிற இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் முன் வர வேண்டுமென்று இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது. ஈழத் தமிழர்களின் உரிமை காத்திட அவர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி ஓர் அரசியல் தீர்வுக்கு வழி காண வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 8. சமச்சீர் கல்வித் திட்டம்.

கிராமப்புர மாணவர்கள், நகர்ப்புற மாணவர்கள், வசதி படைத்த மாணவர்கள், ஏழை எளிய மாணவர்கள் என்ற நிலை வேறுபாடகற்றி, அனைத்து மாணவர்களுக்கும் சமமான - தரமான கல்வி கிடைக்க வேண்டு மென்பதற்காக திராவிட முன் னேற்றக் கழக ஆட்சியிலே அதற்கான கொள்கை முடிவு எடுக் கப்பட்டு, கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்களை நியமித்து, அவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு செய்து, அறிக்கை வழங்கியதற்குப் பின்னர் சட்டம் இயற்றப்பட்டு;

சமச்சீர் கல்வி முறை 2010-11ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 மற்றும் 6ஆம் வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், புதிய பாடநூல்களும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. 2011-2012 கல்வியாண்டில், சமச்சீர்க் கல்விமுறையில் இதர வகுப்பு களுக்கான பொதுப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு பாட நுல்களும்அச்சிடப்பட்டுள்ளது. சமச்சீர் கல்விச் சட்டத்தினை நீக்கக் கோரி சில தனியார் பள்ளிகள் மற்றும் சங்கத்தினரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் 30.4.2010 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பாணையில், தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட இச்சட்டம் செல்லத்தக்கது எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இடைக்காலத் தடை வழங்கக் கோரி புதுடில்லி, உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டு, அந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இவ்வாறு அரசின் கொள்கை என்ற முறையிலும், நீதி மன்றங்கள் அளித்த தீர்ப்பு வகையிலும் சமச் சீர் கல்வியின் தேவை உறுதி செய்யப்பட்டது. அரசின் கொள்கை முடிவின்படி 2011-2012 கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறையை மேலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்து வதற்கு ஏதுவாக எஞ்சிய 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் 200 கோடி ரூபாய்ச் செலவில் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன.

இந்த வகுப்புகளுக்கான பாடத் திட்டம் கல்வி வல்லு நர்களால் உருவாக்கப்பட்டு பொதுமக்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை வலை தளத்திலும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் திடீரென்று அந்தத் திட்டத்தைக் கிடப்பில் போடப்போவதாக அறிவிப்பதும், 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து முறை யாக உருவாக்கப்பட்ட புத்தம் புதிய புத்தகங்களையெல்லாம் வீணடிப்பதும், மேலும் 200 கோடி ரூபாய் செலவழித்து புதிய புத்தகங்களை இனிமேல் அவசர அவசரமாக அச்சடித்து அவற் றை விநியோகிப்போம் என்பதும்; அதற்காகவே அ.தி.மு.க. அரசு பேரவையிலே கொண்டு வந்த சட்டத் திருத்தம் என்ற பெயரால், சமச்சீர் கல்வியைக் குழிதோண்டி புதைக்க முயற்சிப் பதும் மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றும் காரியமாகும்.

இது பள்ளி மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கி, அவர்கள் படிப்பைப் பாழாக்கிடும் செயல் என்று இப்பொதுக் குழு அறிவிப்பதோடு, இருளிலும் ஒரு ஒளியாக சென்னை உயர்நீதிமன்றம், தி.மு. கழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்விக்குப் பாதுகாப்பாக அண்மையில் அளித்துள்ள மகத்தான தீர்ப்பு மனக் கவலை போக்கும் மாமருந்தாக அமை கிறது. உயர்நீதி மன்றத் தீர்ப்புக்கு நன்றி தெரிவிப்பதோடு, அதனை யேற்க வேண்டுமென்று தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும், கல்வியாளர்கள் பலரும் அ.தி.மு.க. அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும், அதனை யேற்காமல் உச்ச நீதி மன்றத்தில் ஜெயலலிதாவின் அரசு மேல் முறையீடு செய்தது என்பது யாரையும் எந்தக் கட்சியினரையும் மதிக்காத செயல் என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு - அதற்குத் தகுந்த பாடம் கற்பிக்கத் தக்க வகையில் உச்ச நீதி மன்றம் அளித்துள்ள உத்தரவில் உயர்நீதி மன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியா தென்றும்,

ஆகஸ்ட் 2ஆம் தேதிக்குள் சமச்சீர் பாடப் புத்தகங் களை மாணவர்கட்கு விநியோகிக்க வேண்டு மென்றும் கூறி யிருப்பதை இப்பொதுக்குழு வரவேற்பதோடு - அதனை மதிக்காமல், அந்த உத்தரவை அவமதிக்கின்ற அளவிற்கு ஜெயலலிதா அரசு சமச்சீர் பாடப் புத்தகங்களை இதுநாள் வரை மாணவர்களுக்கு வழங்காமலும், அரசு பாடநுல் கழக வெப் சைட்டில் இருந்த சமச்சீர் கல்விப் பாடப் புத்தகப் படிவங்களை நீக்கம் செய்தும் இருப்பதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

தீர்மானம் : 10 கச்சத்தீவு

இலங்கையுடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி கச்சத் தீவை அவர்கட்கு விட்டுத்தருவதென்று 1974ஆம் ஆண்டு மத்திய அரசு ஒரு முடிவினை எடுத்தபோது; 21.8.1974 அன்று தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள், இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உறவுகள் கொண் டதுமான கச்சத்தீவு பிரச்சினையில், மத்திய அரசு எடுக்கும் முடிவு பற்றி இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு - மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவின் மீது இந்தி யாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில்,

இலங்கை அரசோடு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. என்னும் தீர்மானத்தை முன் மொழிந்து நிறைவேற்றியும்; 1974 சூன் மாதம் 29 ஆம் தேதியன்று சென்னையில் அனைத்துக்கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசியபோது, - தெரிவிக்கப்பட்ட கருத்தின் அடிப் படையில் இந்தியப் பிரதமருக்கு முதலமைச்சர் கலைஞர், கச்சத் தீவின் மீது இலங்கை கொண்டாடிவரும் உரிமையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு,

இருநாடுகளுக்கும் இடையே சமீபத்தில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம், மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக அமைந்துள்ளது என்று தமிழக அரசின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள இந்தத் தீர் மானத்தைக் கருத்திலே எடுத்துக் கொண்டு உரிய நடவடிக் கையினை மேற்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். என்று கடிதம் அனுப்பியும்; கழகம் ஆட்சியில் இருந்தபோதே 1974ஆம் ஆண்டு கழகத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி யும்;

தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமல்லாமல், 14-7-1974 அன்று தமிழகம் முழுவதும் கழகத்தின் சார்பில், கச்சத்தீவு ஒப்பந்தக் கண்டன நாள் நடத்தியும்; மத்திய அரசின் வெளி யுறவுச் செயலாளர் கேவல் சிங், சென்னையில் 1974 முதல்வராக இருந்த தலைவர் கலைஞரைச் சந்தித்தபோதும், வெளியுறவு அமைச்சர் ஸ்வரன் சிங்கிடமும் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவதை முதல்வர் கலைஞர் தீவிரமாக எதிர்த்தார். கட்சி வேறுபாடுகளுக்கும், அரசியல் வேறுபாடுகளுக்கும் சிறிதளவும் இடம்தராமல் முதல்வர் கலைஞர் நடவடிக்கை எடுத்தும்கூட, தமிழர்களுக்குச் சொந்தமான தமிழ் நிலத்தின் ஒரு பகுதி விட்டுக் கொடுக்கப்பட்ட காரணத்தால்;

கச்சத்தீவின் உரிமையை மீட்டெடுக்க வேண்டுமென்று, 1974ஆம் ஆண்டு முதலே திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய அரசைத் தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறது. சமீபத்தில் 2011 தமிழகச் சட்டப் பேரவைக் கான பொதுத்தேர்தலின்போது, கழகத்தின் சார்பில் வெளி யிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலும், 1974ஆம் ஆண்டு இருந்த நம் நாட்டு உரிமைகள் 1976ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்ட தன் காரணமாக,

அடிக்கடி கச்சத்தீவு அருகே தமிழக மீனவர் கள் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும், சிறைப் பிடிக்கப்படு வதும் தொடர் நிகழ்வுகளாக அதிகரித்து வருவதால், கச்சத் தீவைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள் வோம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. 1974ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களுக்கு அதுவரை வழங்கப்பட்டிருந்த மீன் பிடித்தல், மீன் வலை உலர்த்துதல் மற்றும் தேவாலயத்தில் வழிபாட்டுரிமை ஆகிய அம்சங்கள், 1976ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆட்சியில் மீண்டும் பறிக்கப்பட்டு விட்ட சூழ்நிலையில்;

கச்சத்தீவிற்கு தமிழக மீனவர்கள் தடையேதுமின்றிச் செல்வதற்கும், அதனை ஒட்டிய இடங்களில் இழந்த உரிமையைக் கைக் கொள்வதற்கும் மீட்டெடுப்பதற்கும், கச்சத்தீவினை இந்தியாவிற்கே திரும்பப் பெறுவதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை மேலும் காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. 15-8-1991 அன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் விடுதலை நாளையொட்டி கொடியேற்றிய ஜெயலலிதா தனது உரையிலே இலங்கைக்கு தாரை வார்க்கப் பட்ட கச்சத் தீவை மீட்பதற்குப் போராடுவேன் என்று சபதம் செய்து விட்டு, பத்தாண்டு காலம் ஆட்சியிலே இருந்தவர் கச்சத் தீவை மீட்பதற்கு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமல் சட்டப் பேரவையில் இப்போது தீர்மானம் கொண்டு வந்திருக்கும் சந்தர்ப்பவாதப் போக்கினை தமிழக மக்களுக்கு இந்தப் பொதுக் குழு சுட்டிக் காட்டுகிறது.

தீர்மானம் : 17. இந்தியாவின் ஆட்சிமொழிகளில் ஒன்றாகத் தமிழ்

பேரறிஞர் அண்ணா அவர்கள் டில்லி மாநிலங்களவையில் பேசும்போது ஒருமுறை I can never forget that I have got a hoary language called Tamil. I will never be satisfied till that language in which my forefathers spoke, in which my poets have given sermons and scriptures, in which we have got classics and literature of inexhaustible knowledge - I will never be content till that day when Tamil takes its due place as one of the official languages in the Union. (பழம்பெருமைமிக்க தமிழ் மொழி என்னுடைய மொழி என்பதை என்னால் எப்போதும் மறந்திட இயலாது.

என்னுடைய முன்னோர்கள் பேசிய அந்த மொழி - கவிஞர்கள் வாழ்க்கை நெறிகளையும், அறிவுரைகளையும் வழங்கிய அந்த மொழி - வற்றாத அறிவை வாரி வழங்கிடும் இலக்கியங்கள் நிறைந்திருக்கும் அந்த மொழி - அதற்கு உரிய இடத்தினைப் பெற்று மத்தியில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆகும் வரை நான் மன நிறைவடைய மாட்டேன்) என்று பேசினார் அண்ணா.

இந்தி பேசாத மக்கள் விரும்புகிற காலம் வரை மத்திய ஆட்சி மொழியாக ஆங்கிலமும் நீடிக்கும் என்றும்; பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட மாட்டாது என்றும் பண்டித நேரு அவர்கள் வழங்கிய உறுதிமொழி, எப்பொழுதும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் திராவிட முன்னேற்றக் கழகம் ; இந்தி பேசாத மாநில மக்களின் உரிமை கள் நிரந்தரமாகக் காப்பாற்றப்பட;

அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆட்சி மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவது ஒன்று தான் வழி என்றும் உறுதியாக நம்புவ தோடு; இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக ஆக்குவதில் மேலும் தாமதம் ஏற்படுமே யானால், முதல்கட்டமாக - திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியும், கலை இலக்கியப் பண்பாடும், வளமும் நிறைந்த செம்மொழியான தமிழ்மொழியை, மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தமிழ், மத்திய ஆட்சிமொழியாவது பற்றி, அரசியல் ஞானி முரசொலி மாறன் அவர்கள் மாநிலங்களவையில் கொண்டு வந்த தனி நபர் தீர்மானம் 23-1-1979 அன்று குரல் வாக்கெடுப் பின் மூலம் தோற்கடிக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தமிழ், மத்திய ஆட்சி மொழியாவது பற்றி விரிவான கடிதத்தைத் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியதன் விளைவாக 27-5-2004 அன்று வெளி யிடப்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்த பட்ச செயல் திட்டத்தில் மாநில மொழிகளை மத்திய ஆட்சி மொழி களாக்குவது பற்றி ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று உறுதி கூறப்பட்டது. (The UPA Government will set up a Committee to examine the question of declaring all languages in the 8th schedule of the Constitution as Official Languages)

7-6-2004 அன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியக் குடியரசுத் தலைவர் மத்திய ஆட்சி மொழிகள் பற்றி ஆராய குழு அமைக்கப்படும் என்று அளித்த உறுதிமொழிப்படி அந்தக் குழு அமைக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது. எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் மத்திய ஆட்சி மொழிகள் பற்றி ஆராய குழு ஒன்றி னை ஏற்கனவே அறிவித்தவாறு உடனடியாக அமைத்திட வேண் டுமென்று இப்பொதுக் குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 21. மாநில சுயாட்சி

தி.மு.கழக ஆட்சியில் அமைக்கப்பட்ட நீதியரசர் ராஜமன்னார் குழு அறிக்கையை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முரசொலி மாறன், இரா. செழியன் ஆகியோரைக் கொண்ட குழு ஆய்வு செய்து, தனது கருத்துகளைத் தெரிவித்தது. இவற்றின் அடிப்படையில்தான் 1974 ஏப்ரல் 14ஆம் தேதியன்று வரலாற்றுச் சிறப்புமிக்க மாநில சுயாட்சித் தீர்மானம் தமிழக சட்டப் பேரவை யில் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் முன்மொழியப்பட்டு, நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இவற்றின் தொடர்ச்சியாக, மத்திய - மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக, மத்திய அரசால் 1983ஆம் ஆண்டில் அமைக் கப்பட்ட நீதிபதி சர்க்காரியா குழுவும்;

2000ஆம் ஆண்டில் நியமிக் கப்பட்ட நீதிபதி வெங்கடாசலய்யா குழுவும் மத்திய - மாநில உறவுகளை மாற்றியமைக்க வேண்டும் என்று பல பரிந்துரை களை வழங்கியுள்ளன. மீண்டும் 2008இல் மத்திய - மாநில உறவு களை ஆய்வு செய்வதற்கு நீதிபதி பூஞ்சி குழு அமைக்கப்பட்டுள் ளது. நியமிக்கப்பட்ட எல்லா குழுக்களிடமும் திராவிட முன்னேற் றக் கழகம் தனது கருத்துக்களை எடுத்துரைத்து, நிறைவான தும்,

உண்மையானதுமான கூட்டாட்சி முறையை, முழுமையான மாநில சுயாட்சி அடிப்படையில் அமைத்திட வேண்டுமென்பதை வலியுறுத்தியுள்ளது. மாநிலத்தில் சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் ஆக்கபூர்வமாக உருவாகி, கூட்டாட்சி அமைப்பு வலுப்பெற, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தேவை யான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று - இந்தப் பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 22. முல்லைப் பெரியாறு

முல்லைப் பெரியாறு, ஒன்றுபட்ட மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு எல்லாம் இயற்கை வழங்கிய அருட் கொடையாகும். 999 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தென்மாவட்டங்கள் பயன்பெறும் வகையில், இந்த அணை அமைந்தது. திடீரென கேரள அரசு அணை உடைந்துவிடுமென தவறான வாதத்தை வைத்து பிரச்சினையை உண்டாக்கி, தமிழகத்திற்கு முல்லைப் பெரியாறு மூலம் கிடைக்க வேண்டிய நீர் வரத்தைத் தடுப்பதற்குத் தொடர்ந்து முயற்சி எடுத்து வரு கிறது.

சில உரிமைகளை அ.தி.மு.க. அரசு விட்டுக்கொடுத்ததன் விளைவாக முல்லைப் பெரியாரில் மேலும் பிரச்சினைகள் உருவாக்கப்பட்டுள்ளது. 1989இல் கழக ஆட்சி அமைந்தவுடன், முல்லைப் பெரியாறில் ஏற்பட்ட பிரச்சினைகளை அறிந்து, அதைத் தீர்க்க தலைவர் கலைஞர் நேரடியாக திருவனந்தபுரம் சென்று, கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதற்குப் பின்னர் இங்கு ஏற்பட்ட அ.தி.மு.க. ஆட்சியிலும் பிரச்சினைகள் தீர்க்கப் படவில்லை. கழகம் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தலைவர் கலைஞர், இதய சுத்தியோடு கடமைகளை ஆற்றி யுள்ளார்.

ஆனால், கேரள அரசு புதிய அணை கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளது. கேரள அரசின் இந்தப் போக்கை கைவிடும் படியும், தமிழகத்திற்கு முல்லைப் பெரியாறுமீது உள்ள உரிமையை நிலைநிறுத்தவும் கேட்டு நேரடியாகவும், கடிதங்கள் மூலமாகவும் மத்திய அரசை, தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து வலி யுறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டும் முயற்சியினைக் கைவிட, மத்திய அரசு தலை யிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள இப்பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டிட மத்திய அரசு துணை நின்று நியாயத்தை நிலை நாட்ட வேண்டுமென்றும் இப்பொதுக்குழு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 23. சேது சமுத்திரத் திட்டம்

தமிழக மக்களின் 150 ஆண்டு காலக் கோரிக்கையான சேது சமுத்திரத் திட்டம், தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக 2421 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு, அதற்கான தொடக்க விழா 2-7-2005 அன்று மதுரையில் நடைபெற்றது. அவ்வமயம் தலைவர் கலைஞர், பிரதமர் மன்மோகன்சிங், திருமதி சோனியாகாந்தி அம்மையார் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதைத் தொடக்கத்திலிருந்தே தாங்கிக் கொள்ள முடியாத சிலர், எதையாவது சொல்லி இந்தத் திட்டத்தை முடக்கிப் போட முடியாதா என்றெல்லாம் பார்த்து, கடைசியில் ராமர் கட்டிய பாலத்தை இடிக்கக் கூடாது என்பதாக கற்பிக்கப்பட்ட ஒரு காரணத்தைக் கூறி எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

தனுஷ்கோடி கடல் பகுதியில் அவர்களின் கூற்றுப்படி உருவாக்கப்பட்ட பாலம் இருந்ததற்கான ஆதாரம் துளியளவு கூட இல்லை. 2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை 81 இடங்களில் கடலுக்குள் ஆழ்துளை சோதனை நடத்திப் பார்த்ததில், அறிவியல் ரீதியாகவோ - ஆழ்கடல் வேதியியல் பகுப்பாய்வு மூலமாகவோ - அவ்வாறு கட்டப்பட்ட பாலம் எதுவும் அங்கே இருந்ததற்கான எவ்வித அடிப்படையோ, ஆதாரமோ இல்லாத நிலையில்; புராணிக மதவாதக் காரணங்களைக் காட்டி, இந்தத் திட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்திலும் இதற்கான வழக்கு நிலுவையிலே உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ள வழக்கை விரைந்து முடித்திட முயற்சி மேற்கொண்டு; தமிழகத்தில் தொழில், வர்த்தகம் பெருகிடவும், நாட்டின் அந்நியச் செலாவணி வருவாய் அதிகரித்திடவும், மீனவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் உயரவும், நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படவும், தென்மாவட்டங்கள் பெருமள வுக்கு வளர்ச்சி பெறவும் வழிவகுத்திடும் இத்திட்டத் தினை தொடங்கி முடித்திட எஞ்சிய பணிகளைத் தொடர்ந்து நிறை வேற்றிட வேண்டும் என்று - இப்பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

No comments:

Post a Comment