Search This Blog

Tuesday, February 15, 2011

ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மிலாடி நபி விடுமுறையை ரத்து செய்த ஜெயலலிதா

2001ல் அதிமுக அரசு மிலாடி நபித் திருநாள் விடுமுறையை ரத்து செய்தது என்றும், 2006ல் திமுக அரசு மீண்டும் அமைந்தபோது, மிலாடி நபித் திருநாளுக்கு மீண்டும் அரசு விடுமுறை வழங்கியது என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மிலாடி நபி தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த திருநாள் மிலாடி நபி நன்னாளாக இஸ்லாம் சமுதாய மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் எழுச்சியோடு கொண்டாடப்படுகிறது.

நபிகள் நாயகம் அவர்கள் அன்பை, அமைதியைப் போதித்தார்; அறத்தை வலியுறுத்தினார். அடுத்தவர்க்கு உதவிகள் புரிவதை உயர்ந்த பண்பாகக் கருதினார். “சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளிலும் இருவருக்கு மத்தியில் நீ சமாதானம் செய்து வைப்பது தர்மமாகும்; ஒருவரை, அவரது வாகனத்தில் ஏறுவதற்கு அல்லது அவரது பொருளை அதன்மீது ஏற்றுவதற்கு நீ உதவி செய்வதும் தர்மமாகும்; நல்ல வார்த்தைகளைக் கூறுவது தர்மமாகும்; இடையூறு அளிப்பவைகளைப் பாதையிலிருந்து அகற்றுவது தர்மமாகும் எனக் கூறி, அடுத்தவர் நலன் கருதி ஆற்றும் அருட்பணிகளையே அறம் என வலியுறுத்தினர்.

இத்தகைய அறநெறிகளைப் போதித்த நபிகள் பெருமான் பிறந்த நாளை இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமெனக் கருதி மிலாடி நபித் திருநாளுக்கு 1969ம் ஆண்டிலேயே அரசு விடுமுறை வழங்கி ஆணையிட்டு நடைமுறைப்படுத்தியதை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.

2001ல் ஏற்பட்ட அதிமுக அரசு மிலாடி நபித் திருநாள் விடுமுறையை ரத்து செய்ததையும், 2006ல் திமுக அரசு மீண்டும் அமைந்தபோது, மிலாடி நபித் திருநாளுக்கு மறுபடியும் அரசு விடுமுறை வழங்கி இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு உற்ற நண்பனாகத் திகழ்வதையும் சுட்டிக் காட்டி; மிலாடி நபித் திருநாள் கொண்டாடும் இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவர்க்கும் தமிழக அரசின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

இன்புற்று வாழ்வதற்கான சூழ்நிலை உருவாக்குவோம்-ஜெ:

மிலாடிநபி தினத்தையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணல் முகமது நபி பிறந்த நாளினை பெருமகிழ்வுடன் கொண்டாடும் என் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த மீலாதுன் நபி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நன்னாளில் நபிகள் நாயகத்தின் போதனைகளான அமைதி, சமாதானம், சகோதரத்துவம் ஆகியவை மீண்டும் ஏற்படவும், தமிழக மக்கள் அனைவரும் இன்புற்று வாழ்வதற்கான சூழ்நிலை உருவாகவும் உழைப்போம் என உறுதி கொள்வோம்.

இறைநபி பிறந்த நாளைக் கொண்டாடி இன்புறும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீலாதுன்நபி வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.
நன்றி :தட்ஸ் தமிழ்

No comments:

Post a Comment